அருள் நிறைந்த ரமலான் மாதம் வந்துவிட்டது என்ற இனிய நற்செய்தியைப் பகிர்ந்து கொள்கிறோம்.

Facebook
Twitter
Telegram
WhatsApp

▫️ அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள், அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

“நிச்சயமாக உங்களிடம் ரமழான் எனும் ஒரு பரக்கத் (அருள்) நிறைந்த மாதம் வந்துள்ளது. அதில் நோன்பு நோற்பதை அல்லாஹ் உங்கள் மீது கடமையாக்கினான். அதில் வானத்தின் கதவுகள் திறக்கப்படுகின்றன, நரகத்தின் கதவுகள் மூடப்படுகின்றன, மேலும் வரம்பு மீறிய ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர். அதில் ஆயிரம் மாதங்களை விடச் சிறந்த ஒரு இரவு அல்லாஹ்வுக்கு உண்டு. அதன் நன்மைகளை இழந்தவர், உண்மையில் (அனைத்து நன்மைகளையும்) இழந்தவராவார்.” (ஆதாரம்: அஹ்மத், அல்-அல்பானி ரஹிமஹுல்லாஹ் அவர்களால் அஸ்-ஸஹீஹாவில் ஸஹீஹ் என உறுதிப்படுத்தப்பட்டது)

▫️ அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள், அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

“உங்களிடம் ரமழான் எனும் ஒரு பரக்கத் (அருள்) நிறைந்த மாதம் வந்துள்ளது. அதில் நோன்பு நோற்பதை வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் உங்கள் மீது கடமையாக்கியுள்ளான். அதில் வானத்தின் கதவுகள் திறக்கப்படுகின்றன, நரகத்தின் கதவுகள் மூடப்படுகின்றன, மேலும் ஒவ்வொரு ஷைத்தானும் சங்கிலியால் பிணைக்கப்படுகிறான். அதில் ஆயிரம் மாதங்களை விடச் சிறந்த ஒரு இரவு அல்லாஹ்வுக்கு உண்டு. அதன் நன்மைகளை இழந்தவர், உண்மையில் (பெரிய நற்பேற்றை) இழந்தவராவார்.” (ஆதாரம்: நஸாயீ, அல்-அல்பானி ரஹிமஹுல்லாஹ் அவர்களால் அஸ்-ஸஹீஹாவில் ஸஹீஹ் என உறுதிப்படுத்தப்பட்டது)

🔴 ரமழானின் பரக்கத்துக்களின் (அருட்கொடைகளின்) விபரங்கள் 🔴

▫️ அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள்: “ரமழான் மாதம் ஆரம்பமாகும்போது, வானத்தின் கதவுகள் திறக்கப்படுகின்றன, நரகத்தின் கதவுகள் மூடப்படுகின்றன, மேலும் ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர்.” 📖 (ஆதாரம்: புகாரி மற்றும் முஸ்லிம்)

▫️ முஸ்லிமின் மற்றுமொரு அறிவிப்பில்: “அருளின் (ரஹ்மத்தின்) கதவுகள் திறக்கப்படுகின்றன” என்றுள்ளது.

▫️ மேலும் முஸ்லிமின் அறிவிப்பில்: “ஷைத்தான்கள் சங்கிலிகளால் பிணைக்கப்படுகின்றனர்” என்றுள்ளது.

🔻 விளக்கம்: அவர்கள் விலங்குகளால் (கைவிலங்கு மற்றும் சங்கிலிகளால்) கட்டப்பட்டு, இறுக்கப்படுகிறார்கள் என்று பொருள்படும்.

▫️ மற்றொரு அறிவிப்பில்: “(வரம்பு மீறிய ஒவ்வொரு ஷைத்தானும் விலங்கிடப்படுகிறான்). ஒரு வானவர் இவ்வாறு அழைக்கிறார்: ‘நன்மையை நாடுவோரே, முன்வாருங்கள்! தீமையை நாடுவோரே, நிறுத்துங்கள்!’”

📖 (ஆதாரம்: நஸாயீ மற்றும் அஹ்மத், அல்-அல்பானி ரஹிமஹுல்லாஹ் அவர்களால் ஸஹீஹ் என உறுதிப்படுத்தப்பட்டது)

2️⃣. அல்லாஹ் (சுப்ஹானஹு வதஆலா) ரமழான் மாதத்தின் ஒவ்வொரு இரவிலும் சிலரை (நரக நெருப்பிலிருந்து) விடுதலை செய்கிறான்.

▫️ அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள்: “ரமழான் மாதத்தின் முதல் இரவிலேயே ஷைத்தான்களும், வரம்பு மீறிய ஜின்களும் விலங்கிடப்படுகின்றனர். நரகத்தின் வாயில்கள் மூடப்படுகின்றன, அவற்றில் எந்த ஒரு கதவும் திறக்கப்படுவதில்லை. சுவனத்தின் வாயில்கள் திறக்கப்படுகின்றன, அவற்றில் எந்த ஒரு கதவும் மூடப்படுவதில்லை. மேலும் ஒரு வானவர் இவ்வாறு அழைக்கிறார்: ‘நன்மையை நாடுவோரே! முன்வாருங்கள்!’, ‘தீமையை நாடுவோரே! நிறுத்துங்கள்!’. அல்லாஹ்வினால் நரக நெருப்பிலிருந்து விடுதலை செய்யப்படுபவர்கள் பலர் உள்ளனர். இது (ரமழானின்) ஒவ்வொரு இரவிலும் நடப்பதாகும்.”

📖 (ஆதாரம்: திர்மிதி மற்றும் இப்னு மாஜா, ஷைக் அல்-அல்பானி ரஹிமஹுல்லாஹ் அவர்களால் ஸஹீஹ் என உறுதிப்படுத்தப்பட்டது)

3️⃣. இதில் ஆயிரம் மாதங்களை விடச் சிறந்த ஒரு இரவு உள்ளது.

▫️ அனஸ் பின் மாலிக் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: “ரமழான் மாதம் தொடங்கிய போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள்: ‘இந்த மாதம் உங்களிடம் வந்துள்ளது, இதில் ஆயிரம் மாதங்களை விடச் சிறந்த ஒரு இரவு உள்ளது. அதன் நன்மையை இழந்தவர் அனைத்து நன்மைகளையும் இழந்தவர் ஆவார். உண்மையான துரதிர்ஷ்டசாலியைத் தவிர வேறு யாரும் அதன் நன்மைகளிலிருந்து தடுக்கப்பட மாட்டார்கள்.'”

📖 (ஆதாரம்: இப்னு மாஜா, ஷைக் அல்-அல்பானி ரஹிமஹுல்லாஹ் அவர்களால் ‘ஹஸன்’ என வகைப்படுத்தப்பட்டது)

4️⃣. இது மனிதர்களுக்கு நேர்வழிகாட்டியாக குர்ஆன் அருளப்பட்ட மாதமாகும்.

▫️ அல்லாஹ் (சுப்ஹானஹு வதஆலா) கூறுகிறான்:

ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (சத்தியத்தையும் அசத்தியத்தையும்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது;  (அல்-பகரா: 185)

5️⃣. ரமழான் பொறுமையின் மாதமாகும்; இது பொறுமை, தாராளத்தன்மை மற்றும் பிறரை நல்முறையில் நடத்துதல் ஆகியவற்றை கற்றுக்கொடுக்கிறது.

▫️ அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: “அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்: ‘பொறுமையின் மாதமும் (ரமழான்), ஒவ்வொரு மாதத்தின் மூன்று நாட்களும் நோன்பு நோற்பது ஒரு வருடம் முழுவதும் நோன்பு நோற்றதற்குச் சமமாகும்.'”

📖 (ஆதாரம்: அஹ்மத் மற்றும் நஸாயீ, அல்-அல்பானி அவர்களால் ஸஹீஹ் என உறுதிப்படுத்தப்பட்டது)

🔻 நஸாயீ ஹதீஸ் கிதாபிற்கான தனது விரிவுரையில் இமாம் அஸ்-ஸின்ந்தி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறியதாவது:

“அவரது (நபி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களின்) கூற்றான ‘பொறுமையின் மாதம்’ என்பது ரமழான் மாதத்தைக் குறிக்கும். பொறுமை என்பதன் அடிப்படைப் பொருள் ‘தடுத்துக் கொள்ளுதல்’ என்பதாகும். நோன்பு நோற்பவர் உணவு, பானம் மற்றும் உடலுறவு ஆகியவற்றிலிருந்து தன்னைத் தடுத்துக் கொள்வதால், நோன்பிற்கு ‘பொறுமை’ என்று பெயரிடப்பட்டது.”

6️⃣. ரமழான் நோன்புடன் மாதந்தோறும் மூன்று நோன்புகள் நோற்பது, ஒரு வருடம் முழுவதும் நோன்பு நோற்றதற்குச் சமமாகும்.

▫️ அபூ கதாதா அல்-அன்சாரி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள்: “ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பதும், ஒரு ரமழானிலிருந்து அடுத்த ரமழான் வரை நோன்பு நோற்பதும் ஒரு வருடம் முழுவதும் நோன்பு நோற்றதற்குச் சமமாகும்.”

📖 (ஆதாரம்: முஸ்லிம்)

7️⃣. ரமழான் நோன்புடன் மாதந்தோறும் மூன்று நோன்புகள் நோற்பது உள்ளத்தின் அழுக்குகளை (வஹர்) நீக்குகிறது.

▫️ ஓர் அஃராபி அறிவிக்கிறார்: அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்: “தனது உள்ளத்தின் ‘வஹர்’ (அழுக்குகளை) நீக்க விரும்புபவர், பொறுமையின் மாதத்திலும் (ரமழான்), ஒவ்வொரு மாதத்தின் மூன்று நாட்களிலும் நோன்பு நோற்கட்டும்.”

📖 (ஆதாரம்: அஹ்மத்)

🔻 உள்ளத்தின் ‘வஹர்’ (WAHAR) என்பதன் விளக்கம்:

🔹 இது ஏமாற்று வேலைகள் மற்றும் (ஷைத்தானிய) ஊசலாட்டங்களைக் குறிக்கும்.

🔹 இது வெறுப்பு மற்றும் கோபம் என்றும் கூறப்படுகிறது.

🔹 இது பகைமை என்றும் கூறப்படுகிறது.

🔹 இது கடுமையான ஆத்திரம் என்றும் கூறப்படுகிறது.

8️⃣. ரமழான் நோன்புடன் ஷவ்வால் மாதத்தின் ஆறு நோன்புகளையும் நோற்பது, ஒரு வருடம் முழுவதும் நோன்பு நோற்றதற்குச் சமமாகும்.

▫️ அபூ அய்யூப் அல்-அன்சாரி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள்: “யார் ரமழான் மாதத்தில் நோன்பு நோற்று, அதனைத் தொடர்ந்து ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்புகளை நோற்கிறாரோ, அவர் வருடம் முழுவதும் நோன்பு நோற்றவர் போலாவார்.”

📖 (ஆதாரம்: முஸ்லிம்)

9️⃣. ஒரு ரமழானிலிருந்து அடுத்த ரமழான் வரை இடைப்பட்ட காலத்தில் செய்த பாவங்களுக்கு அது ஒரு பரிகாரமாகும்.

▫️ அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் இவ்வாறு கூறுபவர்களாக இருந்தார்கள்: “ஐந்து வேளைத் தொழுகைகள், ஒரு ஜுமுஆவிலிருந்து அடுத்த ஜுமுஆ வரை, மற்றும் ஒரு ரமழானிலிருந்து அடுத்த ரமழான் வரை ஆகியன அவற்றுக்கு இடைப்பட்ட காலத்தில் செய்த பாவங்களுக்குப் பரிகாரங்களாகும்; பெரும் பாவங்களைத் தவிர்ந்து கொள்ளும் பட்சத்தில்.”

📖 (ஆதாரம்: முஸ்லிம்)

1️⃣0️⃣. ரமழான் மாதத்தில் நோன்பு நோற்பது, முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கு ஒரு காரணமாகும்.

▫️ அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹுஅவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள்: “யார் ஈமானோடும் (உண்மையான நம்பிக்கையோடும்), நன்மையை எதிர்பார்த்தும் ரமழான் மாதத்தில் நோன்பு நோற்கிறாரோ, அவருடைய முந்தைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படும்.”

📖 (ஆதாரம்: புகாரி மற்றும் முஸ்லிம்)

1️⃣1️⃣. ரமழான் மாதத்தின் அருட்கொடைகளில் ஒன்று: அல்லாஹ் இந்த மாதத்தின் நோன்பை இஸ்லாமிய மார்க்கத்தின் தூண்களில் ஒரு தூணாக ஆக்கியுள்ளான்.

▫️ இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள்: “இஸ்லாம் ஐந்து (தூண்கள்) மீது கட்டமைக்கப்பட்டுள்ளது: அவை, ‘வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்றும், முஹம்மது ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் சாட்சி கூறுவது, தொழுகையை நிலைநாட்டி வருவது, ஜகாத் கொடுப்பது, ரமழான் மாதத்தில் நோன்பு நோற்பது மற்றும் அல்லாஹ்வின் (கஃபத்துல்லாஹ்) இல்லத்திற்கு ஹஜ் செய்வது ஆகியவையாகும்.”

📖 (ஆதாரம்: புகாரி மற்றும் முஸ்லிம், திர்மிதியின் வாசக அமைப்போடு)

▫️ இப்னு நாஸிர் அல்-மர்வசீ அவர்களின் நம்பகமான (ஸஹீஹ்) அறிவிப்பில்: “இஸ்லாம் ஐந்து தூண்கள் மீது கட்டமைக்கப்பட்டுள்ளது…” என்று இடம்பெற்றுள்ளது

1️⃣2️⃣. ரமழான் மாதத்தின் அருட்கொடைகளில் ஒன்று: ரமழான் நோன்பு நோற்பது சுவர்க்கத்தில் நுழைவதற்கான மிகச்சிறந்த காரணங்களில் ஒன்றாகும்.

▫️ ஜாபிர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: நுஃமான் பின் கவ்கல் அவர்கள் நபி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களிடம் வந்து: “அல்லாஹ்வின் தூதரே! நான் கடமையாக்கப்பட்ட (ஐந்து வேளை) தொழுகைகளைத் தொழுது, ரமழான் மாதத்தில் நோன்பு நோற்று, தடுக்கப்பட்டவற்றை (ஹராம்) தவிர்ந்து கொண்டு, அனுமதிக்கப்பட்டவற்றை (ஹலால்) ஏற்றுக்கொண்டால், நான் சுவர்க்கத்தில் நுழைவேனா?” என்று கேட்டார்.

அதற்கு நபி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள்: “ஆம்” என்று பதிலளித்தார்கள்.

📖 (ஆதாரம்: முஸ்லிம்)

1️⃣3️⃣. ரமழான் மாதத்தின் அருட்கொடைகளில் ஒன்று: யார் ரமழானில் நோன்பு நோற்று, அதன் இரவுகளில் (வணக்கத்தில்) நிலைத்திருக்கிறாரோ அவர் ஸித்தீக்கீன்கள் (உண்மையாளர்கள்) மற்றும் ஷுஹதாக்களுடன் (உயிர்த்தியாகிகள்) இருப்பார்.

▫️ அம்ரு பின் அல்-முர்ரா அல்-ஜுஹானி அவர்கள் அறிவிக்கிறார்கள்: “ஒரு மனிதர் நபி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களிடம் வந்து: ‘அல்லாஹ்வின் தூதரே! வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்றும், நீங்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் நான் சாட்சி கூறி, ஐந்து வேளை தொழுகைகளைத் தொழுது, ஜகாத் கொடுத்து, ரமழான் நோன்பு நோற்று, அதன் இரவுகளில் நின்று வணங்கினால், நான் யாருடன் இருப்பேன்?’ என்று கேட்டார்.

அதற்கு நபி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள்: ‘நீ ஸித்தீக்கீன்கள் (உண்மையாளர்கள்) மற்றும் ஷுஹதாக்களுடன் (உயிர்த்தியாகிகள்) இருப்பாய்’ என்று கூறினார்கள்.”

📖 (ஆதாரம்: பஸ்ஸார், இப்னு குஸைமா மற்றும் இப்னு ஹிப்பான் – அல்பானி அவர்களால் ஸஹீஹ் என உறுதிப்படுத்தப்பட்டது)


🖋️ எழுதியவர்: அபூ அப்திர்-ரஹ்மான் நவ்வாஸ் அல்-ஹிந்தி அஸ்-ஸெய்லானி (ஹபிழஹுல்லாஹ்)

🏫 ஹாமி / ஹளரமவ்த் – யெமன்

📲 அபூ அப்திர்-ரஹ்மான் நவ்வாஸ் அல்-ஹிந்தி அஸ்-ஸெய்லானி அவர்களின் பயனுள்ள பாடங்கள், உரைகள், கட்டுரைகள் மற்றும் அறிவுரைகளைப் பெற:

🔻 அதிகாரப்பூர்வ ஆங்கிலத் தந்தி (Telegram) சேனலில் இணையுங்கள்: https://t.me/NawwasalHindiEng

🔻 ஷேக் (ஹபிழஹுல்லாஹ்) அவர்களின் பூர்த்தி செய்யப்பட்ட பாடங்கள்: https://t.me/NawwasalhindiEngduroos

மேலதிக தகவல்களுக்கு, ஷேக் அவர்களின் இணையதளத்தைப் பார்வையிடுங்கள்: www.nawwasalhindi.com


எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.

அண்மைய இடுகைகள் Recent Posts