• Home
  • நூல்கள்
  • அல்லாஹ்வின் அழகிய திருநாமங்களும் பண்புகளும் – Notes – 2

அல்லாஹ்வின் அழகிய திருநாமங்களும் பண்புகளும் – Notes – 2

Facebook
Twitter
Telegram
WhatsApp

بسم الله الرحمن الرحيم

நூல்: அல்-மபாதி உல்-முபீதா பித்-தவ்ஹீதி வல்-பிக்ஹி வல்-அகீதா

அஷ்ஷெய்ஹ் அபூ அப்திர்-ரஹ்மான் யஹ்யா இப்னு அலி அல்ஹஜூரி (ஹபிழஹுல்லாஹ்)

விளக்க உரை: அபூ ஜுலைபீப் ஸாஜித் இப்னு (சுப்யான்) நஸ்ருதீன் அஸ்-ஸெய்லானி

தொகுப்பு: அபூ அப்ஸர்

பாடம்: 02

அல்லாஹ்வின் அழகிய திருநாமங்கள் பற்றிய பாடம்

அல்-ஹுஸ்னா – அழகிய பெயர்கள் என்று கூறுவதற்கான காரணங்கள்:

உலமாக்கள் அல்-ஹுஸ்னா – அழகிய திருநாமங்கள் என்று கூறுவதற்கான ஐந்து காரணங்களை கூறுகின்றார்கள்;

1 – அல்லாஹ்வும் அவனுடைய தூதர் ﷺ அவர்களும்; இவைகள் அல்லாஹ்வின் அழகிய பெயர்கள் என்று பெயர் வைத்துள்ளார்கள். (அல்லாஹ்வும் அவனது தூதரும் பெயர் வைப்பது மிகவும் அழகானதாகும்.)

2 – அல்லாஹ்வின் திருநாமங்கள் அல்-குர்ஆனிலும் அஸ்-ஸுன்னாவிலும் இடம் பெற்றுள்ளது. (அல்-குர்ஆனிலும் அஸ்-ஸுன்னாவிலும் உள்ள வார்த்தைகள் மிகவும் அழகானதாகும்.)

3 – அல்லாஹ் ஸுப்ஹானஹூ தஆலா; இந்தப் பெயர்களைக் கொண்டு அழைக்கப்படுகின்றான். (அவனின் பெயர்கள் அழகாக இருப்பதனால்தான்; அவன் அழைக்கப்படுகின்றான்; எனவேதான் அல்லாஹ் இப்பெயர்களைக் கொண்டு அழைக்கப்படுவதினால் அவைகள் அழகானதாகும்.)

4 – அல்லாஹ்வின் அழகிய பெயர்கள் புகழுக்குரியது. அதில் இகழ்ச்சி என்பது இல்லை. அவைகள் பரிபூரணமானதாகும். அப்பெயருக்கு தக்க விதத்தில் அவன் இருக்கின்றான். (அதனாலே அது அழகானதாகும்.)

5 – அல்லாஹ்வின் அழகிய பெயர்கள்; அது அவனுக்கு என்றே சில பண்புகளைக் கொண்டது. அப்பண்புகள் குறைகள் அற்ற பரிபூரணமானவைகள் ஆகும். (அவைகள் குறைகள் அற்ற பரிபூரணமானது என்பது அழகாகும்.)

அல்லாஹ் அவனுடைய பெயரை அல்-அஸ்மா-உல் ஹுஸ்னா என்றுதான் அறிமுகப்படுத்தி இருக்கிறான்.

இப்புத்தகத்தில் ஷெய்க் அவர்கள் அல்லாஹ்வின் பெயர்களை அதனுடைய ஆதாரங்களுடன் குறிப்பிட்டுள்ளார்கள்.

عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏”‏ إِنَّ لِلَّهِ تِسْعَةً وَتِسْعِينَ اسْمًا مِائَةً إِلاَّ وَاحِدًا مَنْ أَحْصَاهَا دَخَلَ الْجَنَّةَ ‏”‏ ‏.‏ وَزَادَ هَمَّامٌ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم ‏”‏ إِنَّهُ وِتْرٌ يُحِبُّ الْوِتْرَ ‏”‏ ‏.‏‏.‏

அபூஹுரைரா றழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்; அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஅலா ஆலிஹீ வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்விற்கு தொண்ணூற்று ஒன்பது நூற்றுக்கு ஒன்று குறைவான – பெயர்கள் உண்டு. அவற்றை வரையறுத்தவர் ((நம்பிக்கை கொண்டு) மனனமிட்டவர்) சொர்க்கம் நுழைவார். அல்லாஹ் ஒற்றையானவன். ஒற்றைப்படையையே அவன் விரும்புகிறான்’ (புஹாரி, முஸ்லிம்)

குறிப்பு: அல்லாஹ்வுக்கு தொண்ணூற்று ஒன்பது பெயர்கள் மாத்திரம்தான் இருக்கின்றன என்பது இதன் கருத்து அல்ல. மாறாக அல்லாஹ்வுக்கு அதிகமான பெயர்கள் இருக்கின்றன. தொண்ணூற்று ஒன்பது பெயர்கள் என்பது ஒரு அடிப்படையாகும்.

வரையறுத்தவர் என்பதற்கு உலமாக்கள் பல கருத்துக்களைக் கூறியுள்ளார்கள். அதில் மிகவும் ஏற்றமான கருத்து; இமாம் புகாரி ரஹிமஹுல்லாஹ் மற்றும் சில உலமாக்கள் கூறும் கருத்து; அஹ்ஸாஹா (வரையறுத்தல்); அது தொண்ணூற்று ஒன்பது என்பதை வரையறுத்தல் என்பது கருத்து அல்ல. மாறாக “அல்லாஹ்வின் திருநாமங்களை அறிந்து நல்ல முறையில் யார் மனனமிட்டாரோ!” என்பதுதான் அதன் கருத்தாகும்.

இன்னும் சில உலமாக்கள்; அல்லாஹ்விடத்தில் பிரார்த்தனை செய்யும் போது, “இப்பெயர்களைக் கொண்டு யார் துஆச் செய்கின்றாரோ!” அவருக்கு சொர்க்கம் உண்டு என்று கூறுகின்றார்கள்.

இன்னும் சில உலமாக்கள்; அல்லாஹ்வுக்கு இருக்கும் பெயர்களில் தொண்ணூற்று ஒன்பது பெயர்களை யார் அறிந்து, அவற்றுக்கு உரிய முறையில் கருத்துக்களை கொடுத்து, அவைகளை உண்மைப்படுத்தி, மனனமிடுகின்றாரோ! அவருக்கு சொர்க்கம் உண்டு என்று கூறுகின்றார்கள்.

மேற்கூறப்பட்டவாறு சில கருத்துக்களை உலமாக்கள் பேசியிருக்கின்றார்கள். இக்கருத்துக்கள் அனைத்துக் பொருத்தமானதாகவே இருக்கின்றன.

அல்லாஹ் ஸுப்ஹானஹூ வதஆலாவுக்கு தொண்ணூற்று ஒன்பது பெயர்கள்தான் இருக்கின்றன என்று மட்டிடுவது ஒரு பித்அத்தாகும். ஒரு பிழையான கருத்தாகும்.

இதனைத்தான் இமாம் இப்னுல் கையிம் ரஹிமஹுல்லாஹ் அல்-பதாயி-உல் பவாயித் என்ற நூலில் கூறி இருக்கிறார்கள்.

عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏ إِنَّ لِلَّهِ تَعَالَى تِسْعَةً وَتِسْعِينَ اسْمًا مِائَةً غَيْرَ وَاحِدَةٍ مَنْ أَحْصَاهَا دَخَلَ الْجَنَّةَ هُوَ اللَّهُ الَّذِي لاَ إِلَهَ إِلاَّ هُوَ الرَّحْمَنُ الرَّحِيمُ …

சில ஹதீஸ்களில்; அபூஹுரைரா றழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்; அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஅலா ஆலிஹீ வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்விற்கு தொண்ணூற்று ஒன்பது நூற்றுக்கு ஒன்று குறைவான – பெயர்கள் உண்டு. ஹுவல்லாஹுல்லதீ, லாயிலாஹ இல்லாஹுவ, அர்-ரஹ்மானுர்-ரஹீம்… என்றுஅல்லாஹ்வின் தொண்ணூற்று ஒன்பது பெயர்களையும் மட்டிட்டு கூறியதாக வந்துள்ளது.

திர்மிதீ, இப்னு மாஜா போன்ற கிரந்தங்களில் இந்த செய்தி இடம் பெற்றுள்ளது. இந்த செய்தியின் தரம் ழயீப் (பலவீனம்) ஆகும்.

இந்த ஹதீஸை அஷ்-ஷெய்க் முக்பில் இப்னு ஹாதி அல்-வாதியீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள்; அஹாதீஸு முஅல்லா லாஹிருஹஸ் ஸிஹ்ஹா என்ற அவர்களது நூலில் கொண்டுவந்திருக்கின்றார்கள். இதில் அதிகமான பிரச்சினைகள் இருப்பதாகக் கூறி இருக்கின்றார்கள்.

அதேபோன்று அவர்களுக்கு முன்னால் வந்த அதிகமான உலமாக்கள்; இமாம் ஹாகிம் போன்ற உலமாக்கள்; இந்த ஹதீஸில் பிரச்சினை உள்ளது. இதனை ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறி இருக்கின்றார்கள்.

பாமர மக்களுக்கு மத்தியில் பிரபல்யமாகி இருக்கும் இந்த ஹதீஸ் ஒரு ழயீபான (பலகீனமான) ஹதீஸ் ஆகும்.

இது அல்லாஹ்வைப் பற்றிய அறிவாகும். எனவே அறிந்தவர்கள், அறியாத பாமர மக்களுக்கு இந்த விஷயத்தைப் பற்றிய அறிவை எத்திவைப்பது கடமையாகும்.

இன்று நாம் கண்கூடாக பார்க்கும் ஒரு நிகழ்வுதான்; இந்த ஹதீஸில் வரும், அல்லாஹ்வின் தொண்ணூற்று ஒன்பது பெயர்களையும் ஒரு வரிசைக் கிரமமாக; அவைகள் தொண்ணூற்று ஒன்பதுதான்; மேலும் இந்த ஹதீஸ் சரியான ஹதீஸ் என்று நினைத்துக் கொண்டு; இந்த ஹதீஸை துணிகள், தகடுகள், பலகைகள் இதுபோன்ற இன்னும் பல பொருட்களில் எழுதி; அவர்களின் வீடுகள், பள்ளிவாசல்கள், வாகனங்கள் போன்றவற்றில் தொங்கவிட்டிருக்கின்றார்கள். மேலும் வியாபாரத்தளங்களில் பரகத்தைத் தேடியும், விற்பனைக்காகவும் வைத்திருக்கின்றார்கள்.  

✽ இந்த செயல் முதலில் ஒரு பித்அத்தான செயல் ஆகும்.

✽ இந்த செயல் ஒரு பலவீனமான ஹதீஸை அடிப்படையாகக் கொண்டு நடைபெறுகிறது.

எனவேதான் இல்மை (அறிவை)த் தேடும் மாணவர்கள் முதலாவதாக அல்லாஹ்வைப் பற்றிய அறிவை அறிந்து கொள்வது கடமையாகும். இதுதான் அடிப்படை அறிவு என்று உலமாக்கள் கூறுகின்றார்கள்.

இன்-ஷா அல்லாஹ்! தொடரும்..

எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.

அண்மைய இடுகைகள் Recent Posts

அண்மைய ஜுமுஆக்கள்

பிரிவுகள் (Catagories)