• Home
  • ஹதீத்
  • சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வரும் நபி ﷺ அவர்கள் மீது இட்டுக்கட்டப்பட்ட ஒரு செய்தியின் உண்மை நிலை பற்றிய விழிப்பூட்டல்

சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வரும் நபி ﷺ அவர்கள் மீது இட்டுக்கட்டப்பட்ட ஒரு செய்தியின் உண்மை நிலை பற்றிய விழிப்பூட்டல்

Facebook
Twitter
Telegram
WhatsApp

بسم الله الرحمن الرحيم

عَنْ عَبْدِ اللّٰهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ رضي الله عنه قَالَ: قَالَ رَسُوْلُ اللّٰهِ ﷺ: مَنْ أَطْعَمَ أَخَاهُ خُبْزًا حَتَّى يُشْبِعَهُ، وَسَقَاهُ مَاءً حَتَّى يُرْوِيَهُ، بَعَّدَهُ اللّٰهُ عَنِ النَّارِ سَبْعَ خَنَادِقَ، بُعْدُ مَا بَيْنَ خَنْدَقَيْنِ مَسِيْرَةُ خَمْسِمِائَةِ سَنَةٍ.

எவர் தன் (முஸ்லிம்) சகோதரருக்கு வயிறு நிரம்ப உணவளித்து, தண்ணீர் அருந்தச் செய்வாரோ அவருக்கும் நரகத்திற்கும் இடையே அல்லாஹுதஆலா ஏழு அகழிகள் தொலைவு தூரத்தை ஏற்படுத்தி விடுவான்.  இரு அகழிகளுக்கிடையே உள்ள இடைவெளி ஐநூறு வருடத் தொலை தூரமாகும்” என ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அப்துல்லா இப்னு அம்ரிப்னுல் ஆஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த செய்தியை பொறுத்தவரைக்கும்;

  • ஸஹீஹுல் புகாரி
  • ஸஹீஹ் முஸ்லிம்
  • ஸுனன் அத்-திர்மிதி
  • ஸுனன் அந்-நஸாஈ
  • ஸுனன் அபீ-தாவூத்
  • ஸுனன் இப்னி மாஜா
  • முஸ்னத் அஹ்மத்
  • முவத்தஃ மாலிக்
  • ஸுனன் அத்-தாரிமீ

போன்ற அடிப்படை ஹதீஸ் நூல்களில் இடம் பெறவில்லை.

மாறாக இந்த செய்தி;

  • அல்-முஸ்தத்ரக் அலஸ்-ஸஹீஹைன்
  • ஷுஅபுல் ஈமான் லில்- பைஹகீ
  • அல்-பிர்தௌஸ் பி-மஃஸுரில் கிதாப்
  • ஷரஹ் அஸ்-ஸுர்கானீ
  • பைலுல் கதீர் லில்-முனாவி
  • அல்-மஜ்ரூஹீன் லி-இப்னி ஹிப்பான்

போன்ற நூல்களில் இடம் பெற்றுள்ள ஒரு செய்தியாகும்.

ஹதீஸ்கலை உலமாக்களிடத்தில் இந்த செய்தியின் நிலை: “இட்டுக்கட்டப்பட்ட ஒரு செய்தி” என்ற தரத்திலே காணப்படுகிறது.

ஏனெனில் இந்த செய்தியின் அறிவிப்பாளர்கள் வரிசையில்,  ‘ரஜா இப்னு அபீ அதா அல்-முஆபிரீ’ என்ற ஒருவர் இடம் பெறுகின்றார். இவரைப் பற்றி ஹதீஸ்கலை உலமாக்கள் கூறும் போது; இவர் ‘இட்டுக்கட்டக் கூடியவர்’ என்று கூறியுள்ளார்கள்.

இமாம் இப்னு ஹிப்பான் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் “அல்-மஜ்ரூஹீன்” என்ற நூலில் பின்வருமாறு கூறுகின்றார் (1/376):

‘ரஜா இப்னு அபீ அதா’ என்ற இவர் (மிஸ்ரிகள்) எகிப்தை சேர்ந்த அறிப்பாளர்களைத் தொட்டும் இட்டுக்கட்டப்பட்ட செய்திகளை அறிவிக்கின்றவர்.

எந்த நிலையிலும் இவர் அறிவிக்கும் செய்தியை ஆதாரமாக எடுப்பது கூடாது.

 இந்த ‘ரஜா’ என்பவர் வாஹிப் இப்னு அப்தில்லாஹ் என்பவரைத் தொட்டும், அவர் அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னுல் ஆஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்களை தொட்டும் இந்த செய்தியை அறிவித்துள்ளார்.

இந்த செய்தியை (ஹதீஸை) ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறவில்லை.

இந்த செய்தியை இத்ரீஸ் இப்னு யஹ்யா அல்-கௌலானீ என்பவர் மாத்திரம் “ரஜா” என்பவரைத் தொட்டு அறிவித்துள்ளார்.

இமாம் அபுல் பத்ல் முஹம்மத் இப்னு தாஹிர் (இப்னுல் கைஸரானீ) என்று பிரபல்யமானவர் கூறுகின்றார்:

இந்த செய்தியை அறிவிக்கக்கூடிய அறிப்பாளர்களில் ஒருவரான ‘ரஜா இப்னு அபீ அதா’ என்பர் ஹதீஸ்களை உலமாக்களால் விடப்பட்டவராவார்.   நூல்: தத்கிரதுல் குப்பால்: 309.

இமாம் இப்னுல் ஜவ்ஸீ  ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்:

‘அல்-மவ்லூஆத்’ என்ற நூலில்; (1/519) ஹதீஸ்களை இட்டுக்கட்டக் கூடியவர்களில் ஒருவராக “ரஜா இப்னு அபீ அதா” என்பவரை கூறியுள்ளார்.

இந்த ஹதீஸ் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிய ஹதீஸாக அவர்களின் பக்கம் இணைப்பது கூடாது. ஏனெனில் இந்த செய்தியின் அறிப்பாளர் வரிசையில் குறைபாடு காணப்படுகின்றது.

அஷ்-ஷெய்க் அல்-முஹத்திஸ் நாஸிருத்தீன் அல்-அல்பானீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள்;

“அஸ்-ஸில்ஸிலத்துல் அஹாதீஸ் அல்-லஈபா” என்ற நூலில்-(80): இது இட்டுக்கட்டப்பட்ட ஒரு செய்தியாகும் என்று கூறுகிறார்.

என்றாலும் ஆச்சரியத்துக்கிரிய விடயம் என்னவென்றால்;

அல்-முஸ்தத்ரக் அலஸ்-ஸஹீஹைன் என்ற நூலில் இமாம் அபூ அப்தில்லாஹ் அல்-ஹாகிம் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் இந்த செய்தியை அவருடைய நூலில் கொண்டுவந்து விட்டு:

இந்த ஹதீஸ் சரியான அறிப்பாளர்கள் வாயிலாக வந்ததாகும், மேலும் இந்த ஹதீஸ் இமாம் அல்-புகாரி மற்றும் இமாம் முஸ்லிம் ரஹிமகுமல்லாஹ் அவர்கள் இருவரினதும் புத்தகங்களில் இடம் பெறவில்லை, என்று கூறியுள்ளார்.

ஆனால் இது இமாம் அல்-ஹாகிம் அவர்களால் நிகழ்ந்துவந்த பெரிய தவறாகும். இப்படி எத்தனையோ இடங்களில் இட்டுக்கட்டப்பட்ட செய்திகளை அறிவிக்ககூடிய அறிப்பாளர்களுடைய செய்திகளை சரியான செய்தி என்று கூறியுள்ளார்.  ஆனால் அது அப்படியல்ல.

எனவே இமாம் அல்-ஹாகிம் ரஹிமஹுல்லாஹ் அவர்களுடைய இந்த கூற்று அடுத்த ஹதீஸ் கலை உலமாக்களுடைய தீர்ப்புகளுக்கு முறணாகவும் காணப்படுகிறது.

அதே போன்று இமாம் அல்-ஹாகிம் ரஹிமஹுல்லாஹ் அவர்களுடைய “அல்-முஸ்தத்ரக்” என்ற நூலில் எல்லா வகையான ஹதீஸ்களையும் அறிவித்துள்ளார்.

அவைகளில் இட்டுக்கட்டப்பட்ட செய்திகளும் அதிகமாக காணப்படுகின்றன.

இதற்கு மாற்றமாக இமாமவர்கள் சொல்வதைப் போன்று தங்களுடைய நூலில் உள்ள அனைத்து ஹதீஸ்களும் ஸஹீஹானவை என்பது தவறாகும். ஏனெனில் உலமாக்கள் அவருடைய நூலில் உள்ள ஹதீஸ்களை ஆய்வு செய்துவிட்டு; இந்த புத்தகத்தில் எல்லா வகையான செய்திகளும் காணப்படுகின்றன. மேலும் ஹதீஸ் கலை உலமாக்களிடத்தில் அறியப்படாத, யாரென்றே தெரியாத சிலர்கள் அறிவிக்கும் ஹதீஸ்களை கூட அவர் அறிவித்துள்ளார் என்று அல்-ஹாகிம் ரஹிமஹுல்லாஹ் அவர்களுடைய நூலைப் பற்றி கூறியுள்ளார்கள்.

எனவே மேலே குறிப்பிட்ட செய்தி நபியவர்கள் மீது இட்டுக்கட்டப்பட்டுள்ள ஒரு செய்தியாகும். இப்படியான செய்திகளை நபியவர்கள் கூறிய ஹதீஸ்கள் என்று அவர்கள் மீது இணைப்பது தண்டனைக்குரிய பெரும் பாவமாகும்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகின்றார்கள்:

حَدِيْثُ الْمُغِيرَةِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ : (( إِنَّ كَذِبًا عَلَيَّ لَيْسَ كَكَذِبٍ عَلَى أَحَدٍ، مَنْ كَذَبَ عَلَيَّ مُتَعَمِّدًا فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنْ النَّارِ ))

என் மீது கூறும் பொய் உங்களில் ஒருவரின் மீது கூறும் பொய்யைப் போன்றதன்று, யார் என் மீது வேண்டுமென்றே பொய்யுரைக்கின்றானோ அவன் தன் இருப்பிடத்தை நரகத்தில் ஆக்கிக் கொள்ளட்டும்.

இந்த ஹதீஸ் (முதவாதிர்) மறுக்க முடியாத அளவுக்கு அதிகமாக அறிவிக்கப்பட்டுள்ள அதிகமான ஸகாபாக்கள் அறிவிக்கின்ற ஸஹீஹான ஹதீஸாகும்.

ஸஹீஹ் அல்-புகாரி முஸ்லிம் மற்றும் இதுவல்லாத பல கிரந்தங்களில் இடம் பெறும் ஹதீஸ் ஆகும்.

எனவே சகோதரர்களே! நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக ஒரு செய்தியை நாம் கூறும் போது; அந்த செய்தியின் நிலையை உறுதி செய்து கொண்டதன் பிறகே கூறவேண்டும்.

இன்று சமூக வலைத்தளங்களில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக எத்தனையோ பொய்யான, அவர்கள் மீது இட்டுக்கட்டப்பட்ட செய்திகள் பகிரப்படுகின்றன. எனவே நாம் இவ் விடயத்தில் ஜாகிரதையாக இருக்க வேண்டும், மேலும் நாம் அறியாதவற்றை அறிந்த நம்பகத்தன்மையுடைய உலமாக்களிடத்தில் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்.

அல்லாஹ் நம் அனைவருக்கும் அனுகூலம் புரிய வேண்டும்.

அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

அபூ ஜுலைபீப் ஸாஜித் இப்னு (சுப்யான்) நஸ்ருதீன் அஸ்ஸெய்லானி வப்பகஹுல்லாஹ்.

எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.

அண்மைய இடுகைகள் Recent Posts

அண்மைய ஜுமுஆக்கள்

பிரிவுகள் (Catagories)