بسم اللــــه الرحمـــــــــن الرحيم
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் رضي الله عنه அவர்கள் அறிவிக்கிறார்கள்; அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் கூறினார்கள்:
உண்மையே பேசுங்கள். உண்மை நன்மைக்கு வழிகாட்டும். நன்மை சொர்க்கத்திற்கு வழிகாட்டும். ஒரு மனிதர் உண்மை பேசிக்கொண்டே இருப்பார்; அதை தேர்ந்தெடுத்துப் பேசிவருவார். இறுதியில் அல்லாஹ்விடம் “உண்மையாளர்” (ஸித்தீக்) எனப் பதிவு செய்யப்பட்டுவிடுவார்.
பொய் பேசாதீர்கள். பொய் தீமைக்கு வழி வகுக்கும். தீமை நரக நெருப்புக்கு வழி வகுக்கும். ஒரு மனிதர் பொய் பேசிக்கொண்டே இருப்பார்; அதைத் தேர்ந்தெடுத்துப் பேசிவருவார். இறுதியில் அல்லாஹ்விடம் “பொய்யர்” எனப் பதிவு செய்யப்பட்டுவிடுவார். (முஸ்லிம்)
மதீனாவில் பேரீச்சப் பழங்கள் பழுத்து கொத்தும் குழையுமாக இருக்கும் நேரத்தில் நபி ﷺ அவர்கள் தபூக் போருக்கு தயாராகுமாறு மக்களுக்கு அழைப்பு விடுக்கிறார்கள்.
நபி ﷺ அவர்கள் மிகப் பெரிய படையுடன் தபூக் யுத்தகலம் நோக்கிச் செல்கின்றார்கள்; ஆனால் அந்தப் படையுடன் கஅப் இப்னு மாலிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் செல்லவில்லை.
நபி ﷺ அவர்கள் கஅப் இப்னு மாலிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் போரில் நீங்கள் ஏன் கலந்துகொள்ளவில்லை? என்று விசாரித்தார்கள்.
அல்லாஹ்வின் தூதரே! நிச்சயமாக அல்லாஹ்வின் மீது ஆணையாக கூறுகிறேன்! தாங்கள் அல்லாத, உலகவாழ்வும் தன்னுயிரும் பெரிதென வாழும் ஒருவரின் அருகில் நான் அமர்ந்திருந்தால் ஏதாவது பொய்யான சாக்குச் சொல்லி அவருடைய கோபத்திலிருந்து தப்பித்துக் கொள்ள உடனடியாக வழி கண்டிருப்பேன். ஏனெனில் நான் பேசி வெல்லக்கூடிய வாதத் திறன் கொண்டவன். ஆயினும், அல்லாஹ்வின் மீது ஆணையாக! தங்களிடம் ஏதாவது பொய்யைச் சொல்லி இன்று உங்களை நான் என்னைக் குறித்துத் திருப்தியடையச் செய்துவிட்டாலும், அல்லாஹ் வெகுவிரைவில் உண்மை நிலவரத்தைத் தங்களுக்குத் தெரியப்படுத்தி என் மீது தங்களைக் கடுங்கோபம்கொள்ளச் செய்து விடுவான் என்பதை நான் நன்கு அறிந்துள்ளேன். தற்போது தங்களிடம் நான் உரைக்கும் உண்மை தங்களுக்கு என்மீது வருத்தம் ஏற்படுத்தக்கூடியதே. ஆயினும், அவ்விஷயத்தில் அல்லாஹ்வின் உதவி வரும் என்று எனக்கு நம்பிக்கையுள்ளது.
“அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் போரில் கலந்து கொள்ளாததற்கு என்னிடம் எந்தக் காரணமும் இல்லை. எனக்கு இருந்த உடல் பலமும் வசதி வாய்ப்பும் அதற்கு முன் ஒருபோதும் என்னிடம் இருந்ததில்லை. ஆயினும் நான் தங்களை விட்டுப் பின்தங்கிவிட்டேன்.”
கஅப் رضي الله عنه அவர்கள் கூறியதை கேட்டுக் கொண்ட நபியவர்கள் “ இவர் உண்மையை உரைத்தார்” நீங்கள் எழுந்திருங்கள் அல்லாஹ்வின் தீர்ப்பு வரும் வரையில் பொறுத்திருங்கள் என்று கூறினார்கள்.
இதன் பின்னர் கஅப் இப்னு மாலிக் رضي الله عنه அவர்கள் சந்தித்த சோதனைகளையும்.. வேதனைகளையும்.. இன்-ஷா அல்லாஹ் கீழ்க்காணும் ஹதீஸ் விளக்கவுரையை செவிமடுத்து கற்றுக் கொள்வோம்!
ஹதீஸ் விளக்க உரை: அபூ அஸ்மா மில்ஹான் இப்னு ஹனீபா
பாடம்: தொடர் 1 , 2
எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.