بسم اللــــه الرحمـــــــــن الرحيم
الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم
ஸலபி உலமாக்களின் பத்வாக்களின் நிழலிலிருந்து – வினாவிடை [QUIZ].
எங்களுடைய சகோதரர் அபூ ஜுலைபீப் ஸாஜித் இப்னு (சுப்யான்) நஸ்ருதீன் அஸ்-ஸெய்லானி.
1. நகங்களை வெட்டுவது இயற்கை மரபுகளில் உள்ள ஒரு அம்சமாகும்.
இமாம் அல்-புகாரி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் அவர்களுடைய ஸஹீஹ் அல் புகாரி என்ற நூலில் கூறுகின்றார்கள்:
பாடம்: 64, தலைப்பு: ((நகங்களை வெட்டுதல்))
இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் அறிவிக்கின்றார்கள்; நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகின்றார்கள்: ((மர்ம உறுப்பின் முடிகளைக் களைவது, நகங்களை வெட்டுவது, மீசையைக் கத்தரிப்பது ஆகியன இயற்கை மரபுகளில் அடங்கும்.))
அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்; நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகின்றார்கள்: ((இயற்கை மரபுகள் ஐந்தாகும். விருத்தசேதனம் செய்துகொள்வது, மர்ம உறுப்பின் முடிகளைக் களைந்து கொள்வதற்காக சவரக் கத்தியை உபயோகிப்பது, மீசையைக் கத்தரிப்பது, நகங்களை வெட்டுவது, அக்குள் முடிகளை அகற்றுவது ஆகியவை தாம் அவை.))
2. நாற்பது நாட்களுக்குள் நகங்களை வெட்டுவது (ஸுன்னா) நபிவழியாகும். நாற்பது நாட்களுக்கு மேல் நகங்களை வெட்டாமல் இருப்பது வெறுக்கத்தக்க செயலாகும்.
இமாம் முஸ்லிம் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் அறிவிப்புச் செய்துள்ள ஹதீஸ்:
அனஸ் ரழியல்லாகு அன்ஹு அவர்கள் கூறியதாவது: ((மீசையைக் கத்தரிப்பது, நகங்களை வெட்டுவது, அக்குள் முடிகளை அகற்றுவது, மர்ம உறுப்பின் முடிகளை வழிப்பது ஆகியவற்றில் நாற்பது நாட்களுக்கு மேல் விட்டு வைக்கக் கூடாதென எங்களுக்குக் கால வரம்பு விதிக்கப்பட்டிருந்தது.))
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது
3. நகம் வெட்டும் போது வலது கையில் உள்ள நகங்களை முதலில் வெட்டுவது விரும்பத்தக்க ஒரு காரியமாகும்.
அதற்குரிய ஆதாரம்:
இமாம் அல்-புகாரி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் அறிவிப்புச் செய்துள்ள ஹதீஸ்;
ஆஇஷா ரழியல்லாகு அன்ஹா அவர் கூறுகையில்: ((நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்; செருப்பு அணிவதிலும், தலை முடி சீவுவதிலும், சுத்தம் செய்வதிலும், தங்களின் எல்லா விஷயங்களையும் வலப்புறத்தைக் கொண்டு ஆரம்பிப்பதை விரும்பக் கூடியவர்களாக இருந்தார்கள்’))
4. நகம் வெட்டும் போது கடைபிடிப்பதற்கென்று ஒழுங்குமுறைகள் ஏதேனும் நபிவழியில் குறிப்பிடப் பட்டுள்ளதா❓
நகம் வெட்டும் போது பேணப்படும் ஒழுங்கு முறை சம்மந்தமாக அதிகமான ஹதீஸ்கள் இடம் பெற்றுள்ளன. அவை அனைத்துமே பலவீனமான இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களாகும்.
அவைகளில் இரண்டை இங்கு குறிப்பிடுகின்றேன்:
▣ முதலாவது ஹதீஸ்:
இந்த ஹதீஸை இமாம் வகீஈ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் அறிவிப்புச் செய்துள்ளார்கள்; ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா அவர் கூறினார்கள்: ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகின்றார்கள்:
((ஆஇஷாவே! உங்களுடைய நகங்களை நீர் வெட்டும் போது முதலில் (சுண்டு விரல்) சிறிய விரலைக் கொண்டு ஆரம்பியுங்கள், பிறகு நடுவிரல், பிறகு பெருவிரல், பிறகு ஆழிவிரல், பிறகு ஆட்காட்டி விரல் இவ்வாறு நீங்கள் வெட்டுங்கள் ஏனெனில் நிச்சயமாக அவ்வாறு செய்வது செல்வத்தை பெருகச் செய்யும் என்றார்கள்.))
இமாம் அல்-ஹாபில் இப்னு ஹஜர் அல் அஸ்கலானீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்: நகம் வெட்டும் போது பேணப்படும் ஒழுங்கு முறைகளை விவரிக்க வரும் அனைத்து செய்திகளும் உறுதி பெறாத, அடிப்படையற்ற செய்திகளாகும்.
▣ இரண்டாவது ஹதீஸ்:
இமாம் இப்னு பத்தா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் அறிவிப்புச் செய்துள்ளார்கள்; நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகின்றார்கள்: ((யார் பிரித்து பிரித்து [மேலே குறிப்பிட்ட முறையில்] நகங்களை வெட்டுகின்றாரோ அவருக்கு (வசந்தகாலத்தில்) கண்களில் அதிகமாக ஏற்படும் நோய் ஏற்பட மாட்டாது.))
இந்த ஹதீஸைப் பற்றி இமாம் இப்னுல் ஜவ்ஸீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்; இமாம் அத்தாரகுத்னீ கூறுவதாக: இந்த ஹதீஸை (ஸாலிஹ் இப்னு பயான்) தனித்து அறிவித்துள்ளார்; அவரைப் பொருத்தவரைக்கும் ஹதீஸ் கலை உலமாக்களிடத்தில் விடப்பட்டவராவார்.
நூல்: அல்-இலல் அல்-முதனாஹியா: 146/1
இமாம் இப்னுல் கைய்யிம் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்: இந்த செய்தி இட்டுக் கட்டப்பட்ட செய்தியாகும்.
நூல்: அல்-மனார் அல்-முனீப்: 107.
இமாம் முல்லா அலீ காரீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்: இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களில் மிக அசிங்கமான ஒரு ஹதீஸாகும்.
நூல்: அல்-அஸ்ரார் அல்-மர்பூஅஃ: 1/497.
எனவே நகம் வெட்டும் போது பேணுவதற்கென்றே தனியானதொரு ஒழுங்குமுறைக்கு நபிவழியில் எவ்வித அடிப்படையும் இல்லை என்பதை அறிந்து கொண்டோம். அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்! அல்லாஹ் நம் அனைவருக்கும் அனுகூலம் புரியவேன்டும்.
5. நகம் வெட்டுவதற்குறிய விரும்பத்தக்க நாள் அல்லது நேரம்.
இந்த விடயத்தில் பல கருத்துக்கள் உள்ளன:
அதிகமான உலமாக்கள் வெள்ளிக்கிழமை நாளன்று நகம் வெட்டுதல் அது போன்ற இயற்கை மரபு செயல்களை செய்தல் இன்னும் நறுமணம் பூசுதல், அழகான ஆடைகளை அணிதல் விரும்பத்தக்க காரியமாகும் என்று கூறியுள்ளார்கள்.
இமாம் அந்-நவவீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்: இமாம் அஷ்ஷாபிஈ மற்றும் அவர்களுடைய போக்கில் உள்ளவர்கள் ரஹிமஹுமுல்லாஹ் நகங்களை வெள்ளிக்கிழமை நாளன்று வெட்டுவது விரும்பத்தக்க காரியம் என்று கூறியுள்ளார்கள்.
அல்-மஜ்மூஃ: 1/340
இன்னும் சில உலமாக்கள் வியாழக்கிழமை நாளன்று நகம் வெட்டுவது விரும்பத்தக்க விடயம் என்று கூறியுள்ளார்கள்.
இன்னும் சிலர் அது தேர்வுக்குறிய காரியமாகும் என்று கூறியுள்ளார்கள்.
இவைகளில் சரியான கருத்து மேலும் ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நபிவழிக்கு நெருக்கமான கருத்து:
இமாம் அஸ்ஸஹாவீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்: நகம் வெட்டும் போது பேணப்படும் ஒழுங்கு முறைகள், மற்றும் நகம் வெட்டுவதற்கென்று குறிப்பிட்ட நாள் சம்மந்தமாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை தொட்டு வரும் ஒன்றுமே உறுதியானவைகள் அல்ல.
நூல்: அல்-மகாஸித் அல்-ஹஸனா: 422.
இமாம் அல்-ஹாபில் இப்னு ரஜப் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள் : இந்த விடயம் சம்பந்தமாக இப்னு அப்பாஸ், ஆஇஷா, அனஸ் ரழியல்லாஹு அன்ஹும் போன்றோரின் ஹதீஸ்கள் இடம் பெற்றுள்ளன. அவை அனைத்து ஹதீஸ்களின் அறிவிப்புவரிசைகளும் சரியானவை அல்ல.
நூல்: பத்ஹுல் பாரி 5/359
இமாம் அல்-முஹத்திஸ் அல்-அல்பானீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தங்களுடைய – அஸ்-ஸில்ஸிலத்துல் அஹாதீஸ் அல்-லஈபாவில்; (ஹதீஸ் இலக்கங்கள்: 1112,1816, 3239) – இது சம்மந்தமாக வரும் ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானது. இன்னும் இட்டுக்கட்டப் பட்டவைகள் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
எனவே குறிப்பிட்ட ஒரு நாளன்று அல்லது குறிப்பிட்ட ஒரு நேரத்தில் நகம் வெட்டுவது விரும்பத்தக்கது என்று நபியவர்களைத் தொட்டு வரும் அனைத்து செய்திகளும் உறுதி இல்லாதவைகள் ஆகும் என்பதை நாம் அறிந்து கொண்டோம். அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.
6. இரவு நேரத்தில் நகம் வெட்டுதல்
சிறு பராயம் முதல் நாம் எமது முன்னோர்களிடமிருந்து செவிமடுக்கக்கூடிய ஒன்றுதான்; இரவு நேரங்களில் நகம் வெட்டுவது கூடாது.
இது சம்மந்தமாக உலமாக்கள் என்ன கூறியிருக்கின்றார்கள் என்பதை பார்க்கலாம்:
அஷ்ஷெய்க் அல்-இமாம் அப்துல் அஸீஸ் இப்னு பாஸ் ரஹிமஹுல்லாஹ் அவர்களிடம் பின்வரும் கேள்வி கேட்கப்பட்டது:
கேள்வி: இரவில் நகங்களை வெட்டுவது தடைசெய்யப்பட்டதா இல்லையா?
பதில்: இரவு நேரங்களில் மற்றும் பகல் பொழுதுகளில் நகங்களை வெட்டுவது ஆகுமான ஒரு செயலாகும்; இரவு மற்றும் பகல் அனைத்து நேரங்களிலும் நகங்களை வெட்டிக் கொள்ளலாம்.
மஜ்மூஉ அல் பதாவா இப்னு பாஸ்.
எனவே இரவு பகல் வித்தியாசம் இன்றி எல்லா நேரங்களிலும் நகம் வெட்டுவது கூடும். இரவு நேரங்களில் நகம் வெட்டுவது கூடாது அல்லது வெறுக்கத்தக்கது என்று கூறுவது அடிப்படையற்ற கருத்தாகும்.
7. பெரும் தொடக்கு ஏற்பட்டவர் அல்லது மாதவிடாய் காலத்தில் உள்ள ஒரு பெண் நகங்களை வெட்டுவதன் சட்டம்.
அஷ்-ஷெய்க் இப்னு உஸைமீன் ரஹிமஹுல்லாஹ் அவர்களிடம் பின்வரும் கேள்வி கேட்கப்பட்டது
கேள்வி: மாதவிடாய் காலத்தில் இருக்கும் போது தலை முடி சீவுதல், நகம் வெட்டுதல், குளித்துக் கொள்ளல் போன்ற செயல்களைச் செய்வது கூடாது என்று நான் செவிமடுத்துள்ளேன். இது சரியானதா இல்லையா?
பதில்: இது சரியான கருத்தல்ல; மாதவிடாய் காலத்தில் இருக்கும் ஒரு பெண் நகங்களை வெட்டுவது, மற்றும் தலைமுடி சீவுவது ஆகுமானவையாகும். மக்கள் மன்றத்தில் பிரபல்யமாக காணப்படும் இந்த கூற்றுக்கு மார்கத்தில் எவ்வித அடிப்படையும் இல்லை.
பதாவா நூறுன் அலத் தர்ப்: 63
அஷ்-ஷெய்க் இப்னு பாஸ் ரஹிமஹுல்லாஹ் அவர்களிடம் பின்வரும் கேள்வி கேட்கப்பட்டது.
கேள்வி: குளித்து சுத்தம் செய்யாமல் பெரும் தொடக்கு ஏற்பட்டிருக்கும் நிலையில் இருக்கும் ஒரு மனிதர் தலை முடி வெட்டுதல், நகங்களை வெட்டுதல் போன்றவைகளை செய்வது கூடுமா?
பதில்: அதில் எந்தத் தவறும் இல்லை; வெட்ட வேண்டிய அவசியம் இருந்தால் அவர் நகங்களை வெட்டுவது அல்லது தலை முடி வெட்டுவது அல்லது தலை முடியை குறைத்துக் கொள்வது அதில் தவறில்லை. ஆனால் அவர் தாடியை வெட்டுவது கூடாது. மாறாக அவர் மீசை அல்லது அக்குல் அல்லது மறும உருப்பின் முடிகளை வெட்டுவதில் எவ்வித குற்றமும் இல்லை. அவர் சுத்தம் செய்து கொள்ளாத நிலையில் இருந்தாலும் சரியே! இன்னும் அவர் பெரும் தொடக்கு ஏற்பட்டிருக்கும் நிலையில் இருந்தாலும் சரியே! எவ்விதமான குற்றமும் இல்லை.
மஜ்மூஉ அல்-பதாவா இப்னு பாஸ்.
ஆகவே பெரும் தொடக்கு ஏற்பட்டவர் அல்லது மாதவிடாய் காலத்தில் உள்ள ஒரு பெண் நகங்களை வெட்டுவது ஆகுமான ஒன்றாகும். இக்கருத்தை வலுவாக ஷெய்குல்-இஸ்லாம் இப்னு தைமிய்யாஹ் ரஹிமஹுல்லாஹ் அவர்களும் பல இடங்களில் குறிப்பிட்டுள்ளார்கள்.
மேலும் சிலர் எண்ணுவது போன்று நகம் வெட்டுவதற்கு முன்பு வுழூ செய்ய வேண்டும் என்பதும் பிழையான மார்கம் வழிகாட்டாத அடிப்படை அற்ற நூதனமான காரியமாகும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அல்லாஹ் நம் அனைவருக்கும் இரக்கம் காட்டுவானாக.
8. நகம் வெட்டுதல் வுழூவை முறிக்குமா ❓
நகம் வெட்டுவது வுழூவை முறிக்கும் காரியங்களில் ஒன்றாகும் என்று அல்-குர்ஆன் அஸ் ஸுன்னா ஆதாரங்களில் எங்கும் இடம் பெறவில்லை.
வுழூவை முறிக்கும் காரியங்களை உலமாக்கள் பட்டியல் படுத்தியிருக்கிறார்கள். அவைகளில் நகம் வெட்டுவது வுழூவை முறிக்கும் என்று எவரும் குறிப்பிட வில்லை.
மாறாக நகம் வெட்டுவது வுழூவை முறிக்காது என்பதில் பிக்ஹ் கலை உலமாக்கள் ஒருமித்த கருத்தில் இருக்கின்றார்கள்.
இமாம் ஸகரிய்யா அல்-அன்சாரீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்: ஒருவர் வுழூ செய்த பிறகு தன்னுடைய கையில் அல்லது காலில் ஏதேனும் ஒரு பகுதி வெட்டப்பட்டாலோ அல்லது அவர் தலை முடியை வெட்டினாலோ அல்லது நகம் வெட்டினாலோ அவர் அவருடைய வுழூவிலேதான் இருக்கிறார்.
நூல்: ஷரஹ் அல்-பஃஜா: 1/93.
அஷ்ஷெய்க் இப்னு உஸைமீன் ரஹிமஹுல்லாஹ் அவர்களிடம் பின்வரும் கேள்வி கேட்கப்பட்டது:
கேள்வி: ஒருவர் வுழூ செய்த பிறகு (தேவை ஏற்பட்டு) நகங்களை வெட்டுவது வுழூவை முறிக்குமா?
பதில்: வுழூ செய்த பிறகு (தேவை கருதி) நகம் வெட்டினால் அது வுழூவை முறிக்காது..
பதாவா நூறுன் அலத் தர்ப்: 337.
எனவே நகம் வெட்டுவது வுழூவை முறிக்காது; வுழூவை முறிக்கும் என்று மக்கள் மன்றத்தில் பிரபல்யமாக காணப்படும் இந்த கூற்றுக்கு மார்க்கத்தில் எவ்வித அடிப்படையும் இல்லை.
9. வெட்டிய நகங்களை என்ன செய்வது ❓
நகங்களை வெட்டியதன் பிறகு அவைகளை புதைப்பது கட்டாயமா; அவ்வாறு புதைக்காமல் அதை வீசுவது பாவமான காரியமா?
வெட்டிய நகங்களை புதைப்பது அல்லது ஒரு குப்பைத் தொட்டியில் போடுவது நல்லது. மாறாக அவைகளை புதைப்பது கட்டாயம் இல்லை. அவர் அவைகளை புதைக்காமல் வீசினால் அதில் எவ்வித குற்றமும் இல்லை.
இமாம் அல்-பைககீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்: வெட்டப்பட்ட முடிகள், நகங்கள் போன்றவற்றை புதைக்க வேண்டும் என்று பல முறைகளில் ஹதீஸ்கள் அறிவிக்கப் பட்டுள்ளது. ஆனால் அனைத்து செய்திகளும் பலவீனமானதாகும்.
நூல்கள்: ஷுஅபுல் ஈமான், நஸ்புர் ராயா: 1/189.
அஷ்ஷெய்க் இப்னு பாஸ் ரஹிமஹுல்லாஹ் அவர்களிடம் பின்வரும் கேள்வி கேட்கப்பட்டது.
கேள்வி: சில மனிதர்கள் கூறுவதை நான் செவிமடுத்துள்ளேன்: அதாவது நகங்களை வெட்டியதன் பிறகு கட்டாயம் அவைகளை ஒரு இடத்தில் புதைக்க வேண்டும், மற்றும் புதைக்கும் சந்தர்ப்பத்தில் குர்ஆனிய சில அத்தியாயங்களை ஓதவேண்டும். உதாரணமாக மூன்று குல் சூராக்கள். இன்னும் அவைகளை எறிவது கூடாது என்பதாக; எனவே இதன் சட்டம் என்ன?
பதில்: இது அடிப்படை அற்ற ஒன்றாகும். ஒருவர் நகங்களை வெட்டியதன் பிறகு அவைகளை எறியலாம் அதில் குற்றம் இல்லை. அவைகளை புதைப்பது அல்லது புதைக்கும் போது குர்ஆன் ஓதுவது அவசியமில்லை மாறாக இவை மூட நம்பிக்கையாகும். அடிப்படை அற்ற விடயமாகும். மேலும் ஒரு ஆணோ பெண்ணோ நகங்களை வெட்டிய பிறகு அவற்றை எங்கு வீசினாலும் தவறில்லை.
மஜ்மூஉ பதாவா இப்னு பாஸ்.
10. நகம் வெட்டும் விடயத்தில் மக்கள் மத்தியில் காணப்படும் மூட நம்பிக்கைகள்.
இரவு நேரங்களில் நகம் வெட்டுவது கூடாது.
வீட்டில் வைத்து நகம் வெட்டுவது தறித்திரியம்.
வெள்ளிக்கிழமை அல்லது வியாழக்கிழமை நாளன்று நகம் வெட்டுவது விரும்பத்தக்கது.
வெட்டிய நகங்களை புதைப்பது கட்டாயம்; புதைக்காமல் வீசுவது பாவமான காரியம்.
நகங்களை புதைக்கும் போது கலிமா சொல்லி அல்லது குர்ஆன் ஓதி புதைக்க வேண்டும்.
நகங்களை வெட்டும் போது அதன் ஒழுங்கு முறைப்படி வெட்ட வேண்டும். அது செல்வத்தை அதிகரிக்கும்.
நான் மேலே குறிப்பிடாத இன்னும் பல நூதனமான மற்றும் மூட நம்பிக்கைகள் நகம் வெட்டும் விடயத்தில் மக்கள் மன்றத்தில் பிரபல்யமாக காணப்படுகின்றன. இந்த விடயங்களுக்கு மார்கத்தில் எவ்வித அடிப்படையும் இல்லை.
ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கின்றார்கள்; நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகின்றார்கள்: நம்முடைய இந்த (மார்க்க) விவகாரத்தில் அதில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகிறானோ அவனுடைய அந்தப் புதுமை நிராகரிக்கப்பட்டதாகும்.
நூல்: புகாரி, முஸ்லிம்.
இமாம் அல் முஹத்திஸ் அல்-அல்பானீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்: நீ (ஸுன்னா) நபிவழியை அறிந்து கொள்; (பித்அத்) நூதனமானவைகளை அறிந்து கொள்வாய்; ஆனால் நீ பித்ஆக்களை அறிந்து கொண்டால் நபிவழியை உன்னால் அறிந்திட முடியாது.
நூல்: ஸில்ஸிலத்துல் ஹுதா வன் நூர்: 715.
நகம் வெட்டுவது சம்மந்தமாக இன்னும் பல விடயங்கள் குறிப்பிட வேண்டிய அவசியம் இருந்தாலும், மேலே குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் இன்ஷா அல்லாஹ்! போதுமானவை.
அல்லாஹ்வே மிக அறிந்தவன்.
والحمد لله رب العالمين
எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.