بسم الله الرحمن الرحيم
அஷ்-ஷெய்க் அப்துல் அஸீஸ் இப்னு பாஸ் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்:
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறந்த நாளை கொண்டாடுவது மார்க்கம் வழிகாட்டாத ஒரு செயலாகும். மாறாக இது பித்அத்தாகும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோ! அவர்களுடைய தோழர்களோ! நபியவர்களின் பிறந்தநாளை கொண்டாடவில்லை.
இவ்வாறுதான் அலீ, ஹுஸைன், அப்துல் காதர்-அல் ஜீலானி; மேலும் இவர்கள் அல்லாதவர்களின் பிறந்தநாளை கொண்டாடுவதும் மார்க்கம் வழிகாட்டாத காரியமாகும். பிறந்த நாள் கொண்டாட்டங்களைப் பொருத்தவரைக்கும் (பித்ஆ) மார்க்கம் வழிகாட்டாத புதுமையாகும்.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை பொருத்தவரைக்கும், அவர் எல்லா நலவுகளின் பாலும் அழைக்கக்கூடியவர்; அவர்தான் இந்த சமூகத்தை வழிநடாத்திய ஆசான்.
அல்லாஹ் அவர்களை அனைத்து நன்மையின் பாலும் அழைக்கக்கூடியவராகவும்; நற்செய்தி கூறுபவராகவும்; அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவும்; பிரகாசிக்கும் ஒரு விளக்காகவும் அனுப்பிவைத்தான்.
நபியவர்களை குறித்து அல்லாஹ் கூறுகிறான்:
وَمَاۤ أَرۡسَلۡنَـٰكَ إِلَّا كَاۤفَّةࣰ لِّلنَّاسِ بَشِیرࣰا وَنَذِیرࣰا
(நபியே!) நாம் உம்மை (இவ்வுலகில் உள்ள) எல்லா மனிதர்களுக்குமே நற்செய்தி கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிப்பவராகவும் அனுப்பிவைத்திருக்கிறோம். (சூரா அஸ் ஸபா: 28)
மேலும் நபியவர்களை குறித்து அல்லாஹ் கூறுகிறான்:
یَـٰۤأَیُّهَا ٱلنَّبِیُّ إِنَّاۤ أَرۡسَلۡنَـٰكَ شَـٰهِدࣰا وَمُبَشِّرࣰا وَنَذِیرࣰا وَدَاعِیًا إِلَى ٱللَّهِ بِإِذۡنِهِۦ وَسِرَاجࣰا مُّنِیرࣰا
நபியே! நிச்சயமாக நாம் உம்மை (மனிதர்களுக்குச்) சாட்சியாளராகவும், நற்செய்தி கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவும் அனுப்பி வைத்திருக்கிறோம். மேலும், அல்லாஹ்வுடைய உத்தரவுப்படி (மக்களை நீர்) அவன் பக்கம் அழைப்பவராகவும் பிரகாசிக்கும் ஒரு விளக்காகவும் (இருக்கிறீர்). (சூரா அல் அஹ்ஸாப்: 45, 46)
மேலும் நபியவர்களை குறித்து அல்லாஹ் கூறுகிறான் :
قُلۡ یَـٰۤأَیُّهَا ٱلنَّاسُ إِنِّی رَسُولُ ٱللَّهِ إِلَیۡكُمۡ جَمِیعًا
நபியே!) கூறுவீராக: ‘‘மனிதர்களே! (நீங்கள் எந்த நாட்டவர் ஆயினும் எவ்வகுப்பாராயினும்) நிச்சயமாக நான் உங்கள் அனைவருக்கும் அல்லாஹ்வினால் அனுப்பப்பட்ட தூதர் ஆவேன். (சூரா அல் அஃராஃப்: 158)
எனவே, நபியவர்கள் தன்னுடைய சமூகத்தை பிறந்தநாள் கொண்டாடும் படி வழிநடாத்தவில்லை. மேலும் அவர் தன் வாழ்நாளில் அவருடைய பிறந்தநாளை கொண்டாடுபவராக இருக்கவும் இல்லை.
அஸ்-ஸித்தீக் (அபூ பக்ர்), உமர், உஸ்மான், அலீ மற்றும் இவர்கள் அல்லாத ஏனைய ஸஹாபாக்கள் (ரலியல்லாஹு அன்ஹும்);
மேலும் சிறப்புக்குரிய முதலாவது இரண்டாவது மூன்றாவது நூற்றாண்டுகளில் வாழ்ந்தவர்கள் எவருமே (இத்தகைய பிறந்த நாளை) கொண்டாடியது இல்லை.
மாறாக இந்த கொண்டாட்டத்தை (மார்க்கம் என்ற போர்வையில்) புதுமையாக உருவாக்கியவர்கள் ராபிழாக்கள்; பிறகு இவர்களை பின்பற்றி நபியவர்களின் சுன்னாவின் பக்கம் தங்களை இணைத்துக் கொள்(வதாக கூறிக்கொள்)ளும் சிலர்கள் இத்தகைய காரியங்களை மேற்கொண்டார்கள்.
தமிழாக்கம்: அபூ ஜுலைபீப் ஸாஜித் இப்னு (சுப்யான்) நஸ்ருதீன் அஸ்ஸெய்லானி வப்பகஹுல்லாஹ்
அஷ்-ஷெய்க் இப்னு பாஸ் ரஹிமஹுல்லாஹ் அவர்களின் இணையதளத்தில் இருந்து பெறப்பட்டது.
எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.