بسم الله الرحمن الرحيم
ஸலாதுல் இப்ராஹீமிய்யாஹ் / ஸலாதுல் முஹம்மதிய்யாஹ்
இமாம் அல்-அல்லாமஹ் இப்னு ஹுஸைமீன் ரஹிமஹுல்லாஹ் அவர்களிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. (அல்-மனாயி அல்-லப்லீய்யாஹ்- கேள்வி பதில்-470)
கேள்வி: நபி ﷺ அவர்களுக்கு ஸலவாத்து சொல்லும் போது; ஸெய்யாதினா என்ற வார்த்தையை இணைத்து அல்லாஹும்ம ஸல்லி “அலா ஸெய்யதினா முஹம்மத்.” என்று கூற முடியுமா?
பதில்: நபி ﷺ அவர்கள் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பிள்ளைகளில் மிகவும் சிறந்தவர் அதேபோன்று தலைவராகவும் இருக்கின்றார் என்பதில் எந்த ஒரு புத்திசாலியும் சந்தேகம் கொள்ளமாட்டார்.
ஒவ்வொரு புத்திசாலியும் நபி ﷺ அவர்கள்; ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பிள்ளைகளின் தலைவர் என்று ஈமான் கொண்டுள்ளார்கள்.
ஸெய்யித்-தலைவர் என்றால்; கண்ணியத்திற்குச் சொந்தக்காரன்; மேலும் வழிப்படுவதற்கு சொந்தக்காரன்; இன்னும் நிர்வகிக்கக்கூடியவன்.
நபி ﷺ அவர்கள் கொண்டுவந்த வஹியைப் பின்பற்றுவது அல்லாஹ்வை வழிப்படுவது போன்றதாகும்.
மேலான அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்:
مَنْ يُّطِعِ الرَّسُوْلَ فَقَدْ اَطَاعَ اللّٰهَ
எவர் (அல்லாஹ்வுடைய) தூதருக்கு (முற்றிலும்) கீழ்ப்படிந்து நடக்கின்றாரோ அவர், நிச்சயமாக அல்லாஹ்வுக்கே கீழப்படிந்து விட்டார். (ஸூரத்துன் நிஸா: 80)
முஃமீன்கள், முஸ்லிம்கள் மற்றும் நாம் அனைவரும் நபி ﷺ அவர்கள் எங்களது தலைவர் என்று ஒருமித்துக் கூறுகின்றோம்.
எங்களில் மிகச் சிறப்புக்குறியவர் நபி ﷺ அவர்கள் என்றும் ஒருமித்துக் கூறுகின்றோம்.
மேலும் அல்லாஹுத் தஆலாவிடமும் மிகச் சிறப்புக்குறியவர் எங்களுடைய நபி முஹம்மத் ﷺ அவர்கள் ஆவார்கள். என்பதை ஒருமித்துக் கூறுகின்றோம். இதில் எங்களுக்கு எவ்வித சந்தேகமும் இல்லை.
நபி ﷺ அவர்கள் எதனை ஏவினார்களோ; அதனை நாம் எடுத்து நடப்பதன் மூலமாக நாம் ரஸூலுல்லாஹி ﷺ அவர்களைப் பின்பற்றுகின்றோம்.
நபி ﷺ அவர்கள் பின்பற்றத் தகுதியானவர் மேலும் பின்பற்றுபவர்களின் தலைவருமாவார் என்பது எமது கொள்கைக் கோட்பாடாகும்.
ரஸூலுல்லாஹி ﷺ அவர்கள் ஒரு செயலை ஏவினால், ஒரு செயலை செய்துகாட்டினால், மேலும் அவர் ஒரு கொள்கை கோட்பாட்டை கூறினால் அதில் நாம் எல்லை மீற மாட்டோம்.
நபி ﷺ அவர்கள் தொழுகையின் இறுதி இருப்பில் எவ்வாறு ஸலவாத்துக் கூற வேண்டும் என்பதை எங்களுக்கு பின்வருமாறு கற்றுத் தந்துள்ளார்கள்.
اللهُمَّ! صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ وعلى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ. اللهُمَّ بَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيمَ وعلى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ
இந்த முறையிலேயே நபி ﷺ அவர்களுக்கு ஸலவாத்துக் கூறுமாறு எங்களுக்குக் கற்றுத் தந்துள்ளார்கள்.
கேள்வி கேட்ட சகோதரர் அல்லாஹும்ம ஸல்லி ஆலா செய்யதினா முஹம்மத் என்று கூறிய அடிப்படையில் ரஸூலுல்லாஹ்வுக்கு ஸலவாத் கூறும் முறை ஹதீஸ்களில் எங்காவது வந்திருக்கிறாதா என்று தேடிப்பார்த்தால்; எனக்குத் தெரியாது. என்று ஷெய்க் அவர்கள் கூறுகின்றார்கள்
அல்லாஹும்ம ஸல்லி அலா செய்யதினா முஹம்மத்.. என்ற அடிப்படையில் நபி ﷺ அவர்கள் எங்களுக்கு ஸலாதுல் இப்ராஹீமிய்யாவைக் காட்டித்தரவில்லை.
எனவே ஹதீஸ்களில் இல்லாத ஒரு விடயத்தை நாம் ஸலாதுல் இப்ராஹீமிய்யாவில் கூறாமல் இருப்பதுதான் மிகவும் சிறந்தது. அதுதான் ஸுன்னாஹ்.
நபி ﷺ அவர்கள் எங்களுக்கு எந்த முறையில் ஸலவாத்து கூறும்படி கற்றுத்தந்தார்களோ அந்த முறையில் அதனைச் செய்வதுதான் ரஸூலுல்லாஹ்வை வழிப்படுவதாகும்.
இந்த சந்தர்ப்பத்தில் மிக முக்கியமான ஒரு விடயத்தை கூற ஆசைப்படுகின்றேன்; எவரெல்லாம் நபி ﷺ அவர்கள் எங்களுடைய தலைவர் என்று நம்புகின்றார்களோ; அவர்கள் நபி ﷺ அவர்கள் கற்றுத்தந்த மேலும் மார்க்கம் என்று காட்டித்தந்த விடயங்களில் புதிதாக எதனையும் அதிகரிக்கக் கூடாது. அதேபோன்று அதில் எதனையும் குறைத்துவிடவும் கூடாது. இது ஈமானில் மிக முக்கியமான ஒரு அடிப்படையாகும்.
எனவே ரஸூலுல்லாஹி ﷺ அவர்கள் எவ்வாறு எங்களின் தலைவர் ஆகின்றார் என்பதை இந்த விடயம் எங்களுக்கு மிக அழகாக சுட்டிக்காட்டுகின்றது.
இது இமாம் இப்னு ஹுஸைமீன் ரஹிமஹுல்லாஹ் அவர்களின் மிக மிக அழகான பதில் ஆகும்.
▣ இங்கு ஷெய்க் அவர்கள்; ஸெய்யதினா – நபி ﷺ அவர்கள் எங்களுடைய தலைவர் என்பதை மறுக்கவில்லை.
▣ இபாதாக்களில்; நபி ﷺ அவர்களின் வழிகாட்டல்களில் ஒன்றைக் கூட்டுவதோ குறைப்பதோ கூடாது என்பதை தெளிவுபடுத்தியுள்ளார்கள்.
▣ அல்-இபாதாத்து தவ்கீபிய்யது – என்ற கோட்பாட்டை விளங்கிக் கொள்ள வேண்டும்; நபி ﷺ அவர்கள் கொண்டுவந்த ஒவ்வொரு இபாதாத்துக்களும் (வணக்க வழிபாடுகளும்) அது அதனுடைய முறைகளில் நின்றுவிட்டன.
அல்பரா இப்னு ஆஸிம் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு; நபி நபி ﷺ அவர்கள்: தூங்கச் செல்லும் போது ஓதுகின்ற ஒரு துஆவைக் கற்றுக் கொடுக்கின்றார்கள். அதில் ⟪“வபி நபியிகல்லதீ அர்ஸல்த”⟫ என்ற ஒரு வாசகம் இடம் பெறுகின்றது. பிரகு நபி ﷺ அவர்கள் அந்த ஸஹாபியிடம் இருந்து கற்றுக் கொடுத்ததை செவிமடுக்கின்றார்கள் அப்போது அல்பரா இப்னு ஆஸிம் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் ⟪“வபி ரஸூலிகல்லதீ அர்ஸல்த”⟫ என்று கூறுகின்றார்கள். அப்போது நபி ﷺ அவர்கள்; நான் எவ்வாறு கற்றுத்தந்தேனோ அவ்வாறு கூறு; என்று அவரைத் திருத்துகின்றார்கள். இந்த ஹதீஸ் ‘அல்-இபாதாத்து தவ்கீபிய்யது’ என்பதை விளக்குகின்றன.
இன்ஷா அல்லாஹ் நாம் ரஸூலுல்லஹி ﷺ அவர்கள் கற்றுத்தந்த விடயங்களைக் கொண்டு போதுமாக்கிக் கொள்வோம்!
எங்களுடைய சகோதரர் அபூ ஜுலைபீப் ஸாஜித் இப்னு (சுப்யான்) நஸ்ருதீன் அஸ்ஸெய்லானி அவர்களின்; தஃலீமுஸ் ஸிபியான் அத்-தவ்ஹீத் என்ற 13வது தொடர் பாடத்தின் விரிவுரையிலிருந்து தொகுக்கப்பட்து.
தொகுப்பு: அபூ அப்ஸர்
எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.