லா இலாஹ இல்லல்லாஹ் என்பதன் விளக்கம்-01

Facebook
Twitter
Telegram
WhatsApp

புத்தகம்: معنى لا إله إلا الله – (மஅனா லா இலாஹ இல்லல்லாஹ்) லா இலாஹ இல்லல்லாஹ் என்பதன் விளக்கம்

ஆசிரியர்: ஷெய்குல் இஸ்லாம் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் ரஹிமஹுல்லாஹ்

விளக்கவுரை: அபூ அப்திர் ரஹ்மான் நவ்வாஸ் அல் ஹிந்தி அஸ் ஸெய்லானி ஹபிழஹுல்லாஹ்

தொகுப்பு: அபூ ஆஇஷா அப்துல்லாஹ் அல் ஹிந்தி வப்பகஹுல்லாஹ்

பாடம்: 01

முன்னுரை

ஷெய்குல் இஸ்லாம் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் ரஹிமஹுல்லாஹ் அவர்களின் வரலாறு. (சுருக்கம்)

ஷெய்குல் இஸ்லாம் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் ரஹிமஹுல்லாஹ்  அவர்கள் ஹிஜ்ரி 1115 ஆம் ஆண்டு பிறந்தார்கள்.

ஷெய்க் அவர்களின் (குன்யா) புனைப்பெயர் அபூ அப்தில்லாஹ் அல்லது அபுல் ஹுசைன்.

இமாமவர்கள் இன்றைய சஊதி அரேபியாவில் உள்ள நஜ்து பகுதியில் பிறந்தார்கள். நஜ்து என்பது தற்பொழுது சவூதி அரேபியாவில் உள்ள ரியாத் ஆகும். அதனால் தான் இமாம் அவர்களின் பெயர் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் அந் நஜ்தி அத் தமீமி என்று அழைக்கப்படுகிறது.

இமாமவர்கள் சஊதி அரேபியாவில் ஷிர்க் நிறைந்திருந்த  காலகட்டத்தில் தவ்ஹீதை புதுப்பித்து தவ்ஹீதை நிலைநாட்டினார்கள். அதன் பிறகு இந்த தஃவா சஊதியிலிருந்து இந்தியா இலங்கை உட்பட உலகம் முழுக்க பரவியது. இத்தகைய தவ்ஹீத் அடிப்படையிலான தஃவா பரவிய போது அதைப் பொறுத்துக் கொள்ள முடியாத சூஃபியாக்கள் இதற்கு (வஹ்ஹாபிசம்) என்று பெயர் வைத்தனர்.

நஜ்து பகுதியின் ஆட்சியாளராக இருந்த  முஹம்மது இப்னு சஊது ரஹிமஹுல்லாஹ் அவர்கள் இமாம் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் ரஹிமஹுல்லாஹ்  அவர்களுடைய தஃவாவிற்கு உற்சாகம்  கொடுத்து உதவி செய்து தவ்ஹீதை நிலைநாட்டினார்கள். ஆட்சியாளர் முஹம்மது இப்னு சஊது அவர்களுக்குப் பிறகு அவர்களது சந்ததியினர்கள் தவ்ஹீதை நிலைநாட்டினார்கள்.

இமாம் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் ரஹிமஹுல்லாஹ் பனூ தமீம் கோத்திரத்தை சார்ந்தவர் ஆவார்.          

அல்லாஹ் சுப்ஹானஹூ வ தஆலா கூறுகிறான்:

وَجَعَلۡنَٰكُمۡ شُعُوبٗا وَقَبَآئِلَ لِتَعَارَفُوٓاْۚ

ஒருவர் மற்றவரை அறிந்துகொள்ளும் பொருட்டு, உங்களைக் கிளைகளாகவும் கோத்திரங்களாகவும் ஆக்கினோம்.  அல்குர்ஆன் 49:13

இமாமவர்களுடைய சந்ததியில் வரக்கூடிய உலமாக்களை ஆலுஷ்ஷெய்க் என்று  அழைக்கப்படுகிறார்கள். இமாம் அவர்களின் சந்ததியில் வந்தவர்கள் ஆலிம்களாக உருவாகி புத்தகங்களையும் எழுதியுள்ளார்கள். இமாம் அவர்களுக்கு அப்துல்லாஹ், அலி, சுலைமான், இப்ராஹிம், ஹுஸைன்,  ஹஸன் என்று ஆறு மகன்கள் இருந்தனர்; அவர்களில் சிலர் பெரும் ஆலிம்களாகவும் இருந்தனர். மேலும் இமாம் அவர்களுக்கு நான்கு மகள்களும் இருந்தனர். ரஹிமஹுமுல்லாஹ்.  இமாம் அவர்களின் பேரன் அப்துர்ரஹ்மான் இப்னு ஹஸன் இப்னு முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் ஃபத்ஹுல் மஜீத் என்ற சிறப்பான புத்தகத்தை எழுதிய மாபெரும் இமாம் ஆவார்கள்.  தற்போது சஊதி அரேபியாவின் முப்தியாக இருப்பவரும்  அல் இமாம் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் ரஹிமஹுல்லாஹ் அவர்களின் பரம்பரையை சார்ந்த ஷெய்க் அப்துல் அஸீஸ் ஆலுஷ்ஷெய்க் ஹபிழஹுல்லாஹ் ஆவார்கள். இவ்வாறாக ஹிஜ்ரி பன்னிரண்டாம் நூற்றாண்டு தொடங்கி தற்போதுள்ள ஹிஜ்ரி 15ஆம் நூற்றாண்டு வரை இமாமவர்களின் சந்ததியிலிருந்து உலமாக்கள் வந்துகொண்டே இருக்கிறார்கள்.

முஹம்மது இப்னு சஊது ரஹிமஹுல்லாஹ் அவர்களின் சந்ததியில் வரக்கூடியவர்களை ஆலு சஊத் என்று அழைக்கப்படுகிறார்கள். மன்னர் அப்துல் அஸீஸ், ஃபஹத், ஃபைஸல், அப்துல்லாஹ் உட்பட  கடந்த 12ம் நூற்றாண்டிலிருந்து இன்று வரை இவரது பரம்பரையை சார்ந்தவர்கள் தான் சஊதி அரேபியாவின் ஆட்சியாளராக இருக்கிறார்கள்.

அல் இமாம் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் மக்களை தவ்ஹீதின் பக்கம் அழைத்தார்கள். தவ்ஹீது இல்லாத வணக்க வழிபாடுகள் ஏற்றுக்கொள்ளப்படாது என்பதை மக்களுக்கு விளக்கினார்கள். இமாமவர்கள் மக்கா, மதினா, ஈராக் போன்ற இடங்களுக்கு சென்று உலமாக்களிடம் உட்கார்ந்து கல்வி பயின்றார்கள்.  முஹம்மது ஹயாத் அஸ் ஸிந்தி; அப்துல்லாஹ் இப்னு இப்ராஹிம் போன்ற மக்கா மதினாவில் இருந்த பல்வேறு ஆலிம்களிடம் கல்வியை கற்றுக் கொண்டார்கள். அதேபோன்று ஈராக்கில் பஸரா பாக்தாத் ஆகிய நகரங்களில் இருந்த உலமாக்களிடமிருந்தும் கல்வியை எடுத்துக் கொண்டார்கள். ரஹிமஹுமுல்லாஹ். அதேபோன்று கல்வியைத் தேடி ஷாம் தேசத்திற்கு இமாம் அவர்கள் சென்ற பொழுது வழிப்பறிக் கொள்ளையர்கள் இமாம் அவர்களை தாக்கி அவர்களிடம் இருந்த பொருட்களை எடுத்துக் கொண்டனர் இதனால் இமாம் அவர்களால் ஷாம் தேசத்திற்கு சென்று கல்வி தேட முடியவில்லை.

இமாம் அவர்களுடைய பாட்டன்மார்களின் பரம்பரை ரசூலுல்லாஹ் ﷺ அவர்களின் பரம்பரையோடு சென்று சேர்கிறது. சுமார் 30 பாட்டன்மார்களுக்கு முன்பு இமாம் அவர்களுடைய பாட்டனும் நபி ﷺ அவர்களுடைய பாட்டனும் ஒன்றாகும்.

இந்தியா உட்பட உலகின் பல்வேறு பகுதிகளை சார்ந்த மாணவர்கள் இமாம்  அவர்களிடமிருந்து கல்வி பயின்று சென்றுள்ளார்கள்.

இமாம் அவர்கள் தன்னுடைய 91 வது வயதில், ஹிஜ்ரி 1206 ஆம் ஆண்டு  இறந்தார்கள். இமாமவர்கள் நிறைய புத்தகங்களையும், உலமாக்களையும் மாணவர்களையும் விட்டுச் சென்றார்கள். இது  அல்லாஹ் சுபஹானஹு வ தஆலா இமாம் அவர்களுக்கு செய்த பரக்கத் ஆகும்.

இன்-ஷா அல்லாஹ்! தொடரும்..

எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.

அண்மைய இடுகைகள் Recent Posts

அண்மைய ஜுமுஆக்கள்

பிரிவுகள் (Catagories)