بسم اللــــه الرحمـــــــــن الرحيم
ஹதீஸ் விளக்கம்
அபூ அஸ்மா மில்ஹான் இப்னு ஹனீபா
ஆயிஷா رضي الله عنهاகூறினார்.
‘நபி ﷺ அவர்களுக்குத் துவக்கத்தில் இறைச்செய்தி தூக்கத்தில் தோன்றும் நல்ல கனவுகளிலேயே வந்தது. அப்போது அவர்கள் எந்தக் கனவு கண்டாலும் அது அதிகாலைப் பொழுதின் விடியலைப் போன்று தெளிவாக இருக்கும். பின்னர் தனிமையிலிருப்பது அவர்களின் விருப்பமாயிற்று. ஹிரா குகையில் அவர்கள் தனித்திருந்தார்கள். தங்களின் குடும்பத்தாரிடம் திரும்பி வருவதற்கு முன் பல இரவுகள் (அங்கே தங்கியிருந்து) வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தார்கள். அந்த நாள்களுக்கான உணவைத் தம்மோடு கொண்டு செல்வார்கள். (அது முடிந்ததும்) மீண்டும் (தங்களின் துணைவியார்) கதீஜா رضي الله عنها அவர்களிடம் திரும்புவார்கள். அதே போன்று பல நாள்களுக்குரிய உணவைக் கொண்டு செல்வார்கள். இந்த நிலை ஹிரா குகையில் அவர்களுக்கு சத்தியம் வரும் வரை நீடித்தது. (ஒருநாள்) ஒரு வானவர் அவர்களிடம் வந்து, ‘ஓதும்’ என்றார். அதற்கவர்கள் ‘நான் ஓதத் தெரிந்தவனில்லையே!’ என்றார்கள்.
இறைத்தூதர் ﷺ அவர்கள் இந்நிலையைப் பின் வருமாறு விளக்கினார்கள்.
‘அவர் என்னைப் பிடித்து நான் சிரமப்படும் அளவிற்கு இறுகக்கட்டியணைத்தார். பிறகு என்னைவிட்டுவிட்டு மீண்டும் ‘ஓதும்’ என்றார். (அப்போதும்) நான் ஓதத் தெரிந்தவனில்லையே! என்றேன். இரண்டாவது முறையும் அவர் என்னைப் பிடித்து நான் சிரமப்படும் அளவிற்கு இறுகக்கட்டி அணைத்து என்னைவிட்டுவிட்டு மீண்டும் ‘ஓதும்’ என்றார். (அப்போதும்) நான் ஓதத் தெரிந்தவனில்லையே! என்றேன். அவர் என்னைப் பிடித்து மூன்றாவது முறையும் கட்டி அணைத்துவிட்டுவிட்டு,
‘படைத்தவனாகிய உம்முடைய இரட்சகனின் திருப்பெயரால் ஓதும்! அவனே மனிதனை ‘அலக்’கில் (கருவளர்ச்சியின் ஆரம்பநிலை) இருந்து படைத்தான். ஓதும்! உம்முடைய இரட்சகன் கண்ணியம் மிக்கவன்’ என்றார்.’ மேலும், ஆயிஷா رضي الله عنها கூறினார். பிறகு இதயம் படபடத்தவர்களாக அந்த வசனங்களுடன் (தம் துணைவியார்) குவைலிதின் மகள் கதீஜா رضي الله عنها விடம் நடந்த செய்தியைத் தெரிவித்துவிட்டுத் தமக்கு ஏதும் நேர்ந்து விடுமோ என தாம் உறுதியாக அஞ்சுவதாகவும் கூறினார்கள். அப்போது கதீஜா رضي الله عنها அவர்கள் ‘அவ்வாறு கூறாதீர்கள்; அல்லாஹ்வின் மீது ஆணையாக உங்களை ஒருபோதும் அல்லாஹ் இழிவுபடுத்தமாட்டான்; (ஏனெனில்) தாங்கள் உறவினர்களுடன் இணங்கி இருக்கிறீர்கள்; (சிரமப்படுவோரின்) சுமைகளைத் தாங்கள் சுமந்து கொள்கிறீர்கள்; வறியவர்களுக்காக உழைக்கிறீர்கள்; விருந்தினர்களை உபசரிக்கிறீர்கள்; உண்மையான சோதனைகளில் (ஆட்பட்டோருக்கு) உதவி புரிகிறீர்கள்’ என்றார்கள். பின்னர் நபி ﷺ அவர்களைத் தம் தந்தையின் உடன் பிறந்தவரான நவ்ஃபல் என்பவரின் மகன் ‘வராக’விடம் அழைத்துச் சென்றார்கள். நவ்ஃபல், அசது என்பவரின் மகனும் அசது, அப்துல் உஸ்ஸாவின் மகனுமாவார்.
‘வராக’ அறியாமைக் காலத்திலேயே கிறித்தவ சமயத்தைத் தழுவியவராக இருந்தார். மேலும் அவர் ஹீப்ரு மொழியில் எழுதத் தெரிந்தவராகவும் இஞ்ஜீல் வேதத்தை, ஹீப்ரு மொழியில் அவர் எழுத வேண்டும் என்று அல்லாஹ் நாடிய அளவுக்கு எழுதுகிறவராகவும் கண் பார்வையற்ற பெரும் வயோதிகராகவும் இருந்தார். அவரிடம் கதீஜா رضي الله عنها, ‘என் தந்தையின் சகோதரன் மகனே! உம் சகோதரன் மகன் கூறுவதைக் கேளுங்கள்’ என்றார்கள். அப்போது வரகா நபி ﷺ அவர்களிடம், ‘என் சகோதரர் மகனே! நீர் எதைக் கண்டீர்?’ எனக் கேட்டார். நபி ﷺ அவர்கள் தாம் பார்த்த செய்திகளை அவரிடம் கூறினார்கள். (அதைக் கேட்டதும்) வரகா, (நபி ﷺ அவர்களிடம்) ‘இவர்தாம், மூஸாவிடம் இறைவன் அனுப்பிய ‘நாமூஸ்’ (ஜிப்ரீல்) ஆவார்’ என்று கூறிவிட்டு, ‘உம்முடைய சமூகத்தார் உம்மை உம்முடைய நாட்டிலிருந்து வெளியேற்றும் சமயத்தில் நான் உயிருடன் திடகாத்திரமான இளைஞனாக இருந்திருக்க வேண்டுமே!’ என்றும் அங்கலாய்த்தார்.
அப்போது நபி ﷺ அவர்கள், ‘மக்கள் என்னை வெளியேற்றவா போகிறார்கள்?’ என்று கேட்டார்கள். அதற்கவர்கள் ‘ஆம்! நீர் கொண்டு வந்திருப்பது போன்ற சத்தியத்தைக் கொண்டு வந்த எந்த மனிதரும் (மக்களால்) பகைத்துக் கொள்ளப்படாமல் இருந்ததில்லை. (நீர் வெளியேற்றப்படும்) அந்நாளை நான் அடைந்தால் உமக்குப் பலமான உதவுவேன்’ என்று கூறினார். அதன்பின்னர் வரகா நீண்ட நாள் வாழாமல் இறந்துவிட்டார். இந்த முதற் செய்தியுடன் வஹீ (இறைச்செய்தி) சிறிது காலம் நின்று போயிற்று. (ஸஹீஹ் அல்-புகாரி)
இன்-ஷா அல்லாஹ்! மேல்காணும் ஹதீஸ் கற்பிக்கும் பிரயோசனங்களை ஆதாரங்களுடன் கீழ்க்காணும் உரையை செவிமடுத்து கற்றுக்கொள்வோம்!
எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.