ஷரஹ் – லாமிய்யா இப்னு தைமிய்யா கவிதைத் தொகுப்பு – Notes-03

Facebook
Twitter
Telegram
WhatsApp

بسم الله الرحمن الرحيم

நூல்ஷரஹ் லாமியா இப்னு தைமிய்யா

ஆசிரியர்அஷ்-ஷெய்க் ஸெய்த் இப்னு முஹம்மத் இப்னு ஹாதி அல்-மத்கலி ரஹிமஹுல்லாஹ்

தமிழ் மொழி மூல விளக்க உரைஅபூ ஜுலைபீப் ஸாஜித் இப்னு (சுப்யான்) நஸ்ருதீன் அஸ்-ஸெய்லானி

தொகுப்புஅபூ அப்ஸர்

பாடம்: 03

அகீதாவிலிருந்து வழிசறுகக்கூடிய காரணங்களும் அதிலிருந்து பாதுகாப்புப் பெறும் வழி முறைகளும்.

யாரெல்லாம் சரியான அகீதாவைவிட்டும் வழி சறுகிச் செல்கின்றார்களோ; அது அவர்களை பேரழிவுக்கு இட்டுச் செல்லும். அவர்களை அது வீணாக்கிவிடும்.

5 – உலகில் இருக்கும் அல்லாஹ்வின் அத்தாட்சிகளையும், அவனின் அல்-குர்ஆன் வசனங்களையும் பற்றி மக்கள் சிந்திக்க மறந்து போனமையும், நவீன மனித கண்டுபிடிப்புக்கள் பொருளாதார வளங்களின் மேன்மைகள்; இவைகள் யாவும் மனித பலத்தின் சாதனை என அவர்கள் நினைத்தமையும்.

அல்லாஹ்வின் உலகம் சார்ந்த அத்தாட்சிகளையும், அவனின் அல்குர்ஆன் வசனங்களையும் பற்றி சிந்திப்பது எமது அகீதாவைப் பலப்படுத்தும்.

நவீன மனித நாகரீக வளர்ச்சியின் கண்டுபிடிப்புக்களைப் பார்த்து பிரமித்து இவைகள் மனித பலத்தின் சாதனை என அவர்கள் நினைத்தனர்.

அல்லாஹ்வின் அத்தாட்சிகளையும், அவனின் அல்குர்ஆன் வசனங்களையும் பற்றி மக்கள் சிந்திக்காததன் காரணமாக அவர்கள் அல்லாஹ்வை மறந்து (அல்லாஹ்வுக்கும் இந்த படைப்புக்களுக்கும் எந்த தொடர்புமில்லை) இவை யாவும் மனித முயற்சியால் மாத்திரம் ஏற்பட்ட சாதனைகள் என்று அந்த மனிதர்களைப் பாராட்டவும் அவர்களை கெளரவிக்கவும் முற்பட்டனர்.

இதன் காரணமாக அல்லாஹ்வின் அத்தாட்சி மற்றும் அவனின் வசனங்களைப் பற்றி சிந்திக்காமல் பிழையான அகீதாவின் பால் மெது மெதுவாக நகர்ந்து கொண்டிருக்கின்றனர்.

இன்று உலகில் காணப்படுகின்ற மனித கண்டுபிடிப்புக்கள் அனைத்தும்; அல்லாஹ் மனிதனுக்கு அந்த படைப்புக்களைப் பற்றிய அறிவையும் வழிகாட்டல்களையும் கொடுத்தன் காரணமாகத்தான் அவன் கண்டுபிடிக்கின்றான்.

மேலான அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்:

وَاللّٰهُ خَلَقَكُمْ وَمَا تَعْمَلُوْنَ

“உங்களையும், நீங்கள் செய்கின்றவற்றையும் அல்லாஹ்வே படைத்தான்” (ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்: 96)

எனவே அல்லாஹ்வின் வசனங்களைப் பற்றி நாங்கள் சிந்தித்தால்; மனிதர்களையும் மனித படைப்புக்களையும் அல்லாஹ்வே படைக்கின்றான் என்ற அடிப்படையைப் புரிந்துகொள்ள முடியும்.

மனித முயற்சியால் மாத்திரம் ஏற்பட்ட சாதனைகள் என்றுதான் காரூனும் கூறினான்.  எனவே அவனுடைய (அவனைப் போன்றவர்களின்) நிலைப்பாட்டை பற்றி மேலான அல்லாஹுத்தஆலா பேசுகின்றான்:

قَالَ اِنَّمَاۤ اُوْتِيْتُهٗ عَلٰى عِلْمٍ عِنْدِىْ  اَوَلَمْ يَعْلَمْ اَنَّ اللّٰهَ قَدْ اَهْلَكَ مِنْ قَبْلِهٖ مِنَ الْقُرُوْنِ مَنْ هُوَ اَشَدُّ مِنْهُ قُوَّةً وَّاَكْثَرُ جَمْعًا

‌அதற்கவன் “(என்னிடம் இருக்கும்) பொருள்களை எல்லாம் என்னுடைய சொந்த அறிவி(ன் திறமையி)னால்தான் நான் அடைந்தேன். (இதில் அல்லாஹ்வின் அருள் ஒன்றுமில்லை)” என்று (பதில்) கூறினான். இவனுக்கு முன்னிருந்த கூட்டத்தார்களில் இவனைவிட பலசாலிகளாகவும், இவனைவிட அதிகப் பொருள் உடையவர்களாகவும் இருந்த எத்தனையோ பேர்களை அல்லாஹ் நிச்சயமாக அழித்திருக்கின்றான் என்பதை இவன் அறிய வில்லையா? (ஸூரத்துல் கஸஸ்: 78)

وَلَٮِٕنْ اَذَقْنٰهُ رَحْمَةً مِّنَّا مِنْۢ بَعْدِ ضَرَّآءَ مَسَّتْهُ لَيَقُوْلَنَّ هٰذَا لِىْ ۙ

எனினும் அவனைத் தீண்டியிருந்த கெடுதிக்குப் பின் நாம் அவனை நம் ரஹ்மத்தை – கிருபையைச் சுவைக்கச் செய்தால், அவன் “இது எனக்கு உரியதே யாகும்; (ஸூரத்து புஸ்ஸிலத்: 50)

மேலும் இன்னும் ஒரு வசனத்தில் மேலான அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்:

فَاِذَا مَسَّ الْاِنْسَانَ ضُرٌّ دَعَانَا ثُمَّ اِذَا خَوَّلْنٰهُ نِعْمَةً مِّنَّا ۙ قَالَ اِنَّمَاۤ اُوْتِيْتُهٗ عَلٰى عِلْمٍ‌ؕ بَلْ هِىَ فِتْنَةٌ وَّلٰـكِنَّ اَكْثَرَهُمْ لَا يَعْلَمُوْنَ

ஆகவே, மனிதனை ஏதேனும் துன்பம் தொட்டுவிடுமானால் (அதனை நீக்கிவிடுமாறு பிரார்த்தித்து) அவன் நம்மை அழைக்கின்றான், (அதனை நீக்கிய பின் நம்மிடமிருந்து) அவனுக்கு யாதோர் அருட்கொடையை நாம் கொடுத்தால், “இதை நான் கொடுக்கப்பட்டதெல்லாம் (என்) அறிவினால் தான்” என்று அவன் கூறுகிறான், அவ்வாறல்ல! அது (அவர்களுக்கு) ஒரு சோதனையாகும், எனினும், அவர்களில் பெரும்பாலானோர் (இதனை) அறியமாட்டார்கள். (ஸூரத்துஸ் ஸுமர்: 49)

எனவேதான் இன்று அல்லாஹ்வின் அத்தாட்சிகளும் அவனின் வசனங்களும் சிந்திக்கப்படாத காரணத்தால், மனித கண்டுபிடிப்புக்கள் அவர்களின் படைப்புக்களாகவே பார்க்கப்படுகின்றன. அது அல்லாஹ்வின் படைப்பு என்று பார்க்கப்படாத நிலைக்குள் உலகம் சென்றுவிட்டது.

மனிதன் அல்லாஹ் இவ்வுலகில் ஏற்படுத்தி வைத்துள்ள அவனின் நிஃமத்துக்களையும் அதன் உயரிய சிறப்புக்களையும் பயன்பாடுகளையும் பார்க்கவோ அது பற்றிச் சிந்திக்கவோ இல்லை. மேலும் அல்லாஹ்தான் மனிதனைப் படைத்து இவற்றை வெளிக் கொண்டு வரும் ஆற்றலையும் அறிவையும் அவனுக்கு வழங்கினான் என்பதையும் அவன் நினைத்துப் பார்க்கவில்லை. இதனால் அவன் அல்லாஹ்வின் அல்-குர்ஆனிய வசனங்களில் இருந்து தூரமாகினான். மேலும் அவன் சரியான அகீதாவிலிருந்து தூரமாகி பிழையான அகீதாவின் பால் செல்கின்றான். என்று ஷெய்க் அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.

 இது பற்றி மேலான அல்லாஹுத்தஆலா குறிப்பிடும் போது;

اَوَلَمْ يَنْظُرُوْا فِىْ مَلَـكُوْتِ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَمَا خَلَقَ اللّٰهُ مِنْ شَىْءٍ ۙ  وَّاَنْ عَسٰٓى اَنْ يَّكُوْنَ قَدِ اقْتَرَبَ اَجَلُهُمْ‌ ۚ

வானங்கள், பூமியினுடைய ஆட்சியையும் அல்லாஹ் படைத்திருக்கும் மற்ற பொருள்களையும் அவர்கள் பார்க்க வில்லையா? அவர்களுடைய (மரண) தவணை நெருங்கி இருக்கக் கூடும் என்பதையும் (அவர்கள் எண்ணவில்லையா? (ஸூரத்துல் அஃராஃப்: 185)

மேலும் மேலான அல்லாஹுத்தஆலா பேசும் போது;

اَللّٰهُ الَّذِىْ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ وَاَنْزَلَ مِنَ السَّمَآءِ مَآءً فَاَخْرَجَ بِهٖ مِنَ الثَّمَرٰتِ رِزْقًا لَّـكُمْ‌ ۚ وَسَخَّرَ لَـكُمُ الْـفُلْكَ لِتَجْرِىَ فِى الْبَحْرِ بِاَمْرِهٖ‌ۚ وَسَخَّرَ لَـكُمُ الْاَنْهٰرَ‌ۚ‏

அல்லாஹ் எத்தகையவனென்றால், அவன் தான் வானங்களையும் பூமியையும் படைத்தான், அவனே வானத்திலிருந்து மழை பொழியச் செய்து பின்னர், அதைக் கொண்டு உங்களுக்கு உணவாக(ப் பற்பல) கனிவர்க்கங்களையும் வெளிப்படுத்தினான், மேலும், (நீங்கள் பிரயாணம் செய்வதற்காகக்) கப்பலை தன் கட்டளைப்படி கடலில் அது செல்வதற்காக உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்தான், மேலும், ஆறுகளையும் உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்தான். (ஸூரத்து இப்ராஹீம்: 32)

وَسَخَّرَ لَـكُمُ الشَّمْسَ وَالْقَمَرَ دَآٮِٕبَيْنِ‌ۚ وَسَخَّرَ لَـكُمُ الَّيْلَ وَالنَّهَارَ‌ۚ‏

சூரியனையும், சந்திரனையும் (முறைப்படி தத்தம் வழிகளில்) அவ்விரண்டும் சென்று கொண்டேயிருக்க, அவன் உங்களுக்கு வசப்படுத்தித் தந்தான், மேலும், (மாறி மாறி வரும்) இரவையும், பகலையும் உங்களுக்கு அவன் வசப்படுத்தித் தந்தான். (ஸூரத்து இப்ராஹீம்: 33)

وَاٰتٰٮكُمْ مِّنْ كُلِّ مَا سَاَلْـتُمُوْهُ‌ ؕ وَاِنْ تَعُدُّوْا نِعْمَتَ اللّٰهِ لَا تُحْصُوْهَا ؕ اِنَّ الْاِنْسَانَ لَـظَلُوْمٌ كَفَّارٌ

இவையன்றி) மேலும், எவற்றை நீங்கள் அவனிடம் கேட்டீர்களோ அவற்றில் ஒவ்வொன்றிலிருந்தும் அவன் உங்களுக்குக் கொடுத்தான், ஆகவே அல்லாஹ்வுடைய அருட்கொடைகளை நீங்கள் எண்ணுவீர்களாயின் அவற்றை நீங்கள் கணக்கிட்டு (எண்ணி வரையறுத்து) விட மாட்டீர்கள்; நிச்சயமாக மனிதன் மிக்க அநியாயக்காரன்; மிக்க நன்றி கெட்டவன். (ஸூரத்து இப்ராஹீம்: 34)

6 – வீடுகள் சரியான அகீதாவில் உருவாக்கப்படாமை – மனைவி, பிள்ளைகள், குடும்பங்களுக்கு சரியான அகீதாவின் பால் வழிகாட்டப் படாமை.

(பிள்ளைகள் செல்ல வேண்டிய) சரியான பாதையை சீரமைத்துத் தரும் விடயத்தில் பெற்றோரின் பங்களிப்பு மிகப் பாரியது, எனினும் இல்லங்களில் அதற்கான நல்ல வழிகாட்டல் எதுவும் காணப்பட வில்லை.

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كُلُّ مَوْلُودٍ يُولَدُ عَلَى الْفِطْرَةِ فَأَبَوَاهُ يُهَوِّدَانِهِ أَوْ يُنَصِّرَانِهِ أَوْ يُمَجِّسَانِهِ

அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள்; நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: “பிறக்கின்ற எல்லா குழந்தைகளுமே இயற்கையான (மார்க்கத்)திலேயே பிறக்கின்றன. அவர்களின் தாய், தந்தையர்களே அவர்களை யூதர்களாகவோ அல்லது கிறித்தவர்களாகவோ அல்லது நெருப்பை வணங்குபவர்களாகவோ ஆக்கி விடுகின்றனர். (புகாரி, முஸ்லிம்)

பெற்றோர்கள் எவ்வாறு ஒரு பிள்ளையை வளர்க்கின்றார்களோ அவ்வாறே அக்குழந்தையும் வளரும். சரியான அகீதாவில் ஒரு பிள்ளை வளர்க்கப்பட்டால் அப்பிள்ளையும் சரியான அகீதாவிலேயே வளரும். எப்போது பிழையான சிந்தனைகளை பிள்ளைகளுக்கு  கொடுக்கின்றோமோ அப்போது அப்பிள்ளையும் பிழையான சிந்தனையில் வளரும்.

எனவே எங்கள் வீடுகளையும் சூழலையும் சரியான அகீதாவின் பால் கொண்டுவரவேண்டும்.

எங்கள் பிள்ளைகளின் பாவச் சுமைகளை சுமக்கின்ற நிலைக்கு நாம் ஆளாகக் கூடாது.

நபி ﷺ அவர்கள் கூறுகின்றார்கள்; அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: நான் என்னுடைய அடியார்களை எனக்கு கட்டுப்படுகின்றவர்களாகவே படைத்திருக்கின்றேன். ஆனால் ஷைத்தான்கள் (மனித அல்லது ஜின் ஷைத்தான்கள்) அவர்களின் பித்ரா – இயற்கை விடயத்தில் விளையாடினார்கள். பாதில்களை அவர்களின் விடயத்தில் கொண்டு சென்றான். மேலும் அல்லாஹ்வுக்கு இணைவைக்குமாறும் ஏவினார்கள். அதன் அடிப்படையில் அந்த பிள்ளைகள் வளர்ந்து வந்தன…

எனவே பித்ராவின் மீது பிறக்கின்ற பிள்ளைகளை அந்த இயற்கையிலேயே வளர்க்க வேண்டும். அப்போதுதான் அப்பிள்ளை சரியான வழிமுறையில் வளர்ந்து வரும். வீடுகள் சரியான அகீதாவில் நிலைபெறும்.

7 – பெரும்பாலான இஸ்லாமிய நாடுகளிலுள்ள கல்வி, தகவல் ஊடகங்கள் அவற்றின் உண்மையான கடமைகளைச் செய்ய முடியாதவாறு தடுக்கப் பட்டுள்ளன.

இந்த இஸ்லாமிய நாடுகளில் பாடத் திட்டங்களில் மார்க்க விடயங்களுக்குப் பெரிய அளவில் இடம் கொடுக்கப்படவில்லை. அல்லது மார்க்க விடயத்திற்கு  முற்றாக முக்கியத்துவம் செலுத்தப்பட வில்லை.

இதற்கு மாறாக தெலைக்காட்சி, வானொலி, பத்திரிகை மற்றும் சமூக வலைத் தளங்கள் போன்ற  ஊடகங்கள் அநேகமாக அழிவின் பக்கமும், மற்றும் சரியான வழிகளுக்குப் பதிலாக பிழையான வழிகளின் பக்கமும் திசை திருப்பும் சாதனங்களாக மாறியுள்ளன.  

அல்லது சரியான அகீதாவையும் நல்ல ஒழுக்க விழுமியங்களையும் கற்றுக் கொடுக்கும்படியான விடயங்களின் பக்கமும், தவறான அகீதாவை முன்னெடுத்துச் செல்லும் சக்திகளை எதிர்க்கக் கூடிய விடயங்களின் பக்கமும் கவனம் செலுத்தாது வெறும் பொருளாதார மற்றும் ஆடம்பர விடயங்களின் பக்கம் அதாவது உலக மோகத்தின் பக்கம் அவை நாட்டம் கொண்டுள்ளன.,

இதனால் உண்மையான அகீதாவை இழந்து பிழையான சக்திகளை எதிர்க்க முடியாத பலமற்ற பரம்பரை தோன்றியுள்ளது. இது அந்த சக்திகளை எதிர்க்க முடியாமல் அவற்றின் முன்னால் கோழைகளாக ஈடேற்றமும் பதுகாப்பும் இல்லாமல் நிற்கிறது.

ஈமான், தவக்குள், அல்லாஹ்விடம் உதவி தேடல் போன்ற அனைத்து விடயங்களிலும் பலவீனப்பட்ட பரம்பரையாக இந்த சமூகம் இருக்கிறது.

8 – ஹிதாயத்– நேர்வழி

ஆதாரம்:

எனவேதான் ஒவ்வொரு தொழுகையிலும்

اِيَّاكَ نَعْبُدُ وَاِيَّاكَ نَسْتَعِيْنُؕ‏

(இறைவா!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம். (அல்ஃபாத்திஹா: 05)

என்று கூறுகின்றோம். ஏனெனில் அல்லாஹ்வின் ஹிதாயா (நேர்வழி) கிடைக்காமல் எதனையும் செய்ய முடியாது.

நபி ﷺ அவர்கள் ஹிதாயத்தையும் சரியான அகீதாவில் உறுதியையும் கேட்டு அல்லாஹ்விடம் அடிக்கடி பிரார்த்திப்பவர்களாக இருந்திருக்கிறார்கள்.

اللَّهُمّ يَا مُقَلِّبَ القُلُوبِ ثَبِّتْ قَلْبِي عَلَى دِينِكَ

உள்ளங்களைப் புரட்டக் கூடியவனே! என் உள்ளத்தை உனது மார்க்கத்தில் உறுதியாக ஆக்கி வைப்பாயாக (திர்மிதி)

اللَّهُمَّ مُصَرِّفَ القُلُوْبِ صَرِّفْ قُلُوْبَنَا عَلَى طَاعَتِكَ

உள்ளங்களைத் திருப்புகின்றவனே! எங்கள் உள்ளங்களை உனக்குக் கீழ்ப்படிவதற்குத் திருப்புவாயாக!” (முஸ்லிம்)

உமர் இப்னுல் கத்தாப் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் பிவருமாறு பிரார்த்திக்கக் கூடியவர்களாக இருந்தார்கள்:

اَللّٰهُمَّ أَرِنَا الْحَقَّ حَقًّا وَّارْزُقْنَا اتِّبَاعَهٗ وَاَرِنَا الْبَاطِلَ بَاطِلًا وَّارْزُقْنَا اجْتِنَابَهُ

யா அல்லாஹ்! சத்தியத்தை சத்தியமாகக் காட்டி அதனை பின்பற்ற எங்களுக்கு உதவி புரிவாயாக! அதேபோன்று பாத்திலை-பொய்யை பொய்யாகக் காட்டி அதைத் தவிர்ப்பதற்கு எங்களுக்கு உதவி புரிவாயாக!

அபூதர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள்; ஹதீஸுல் குத்ஸியில் நபி ﷺ அவர்கள் கூறுகின்றார்கள்: அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்:  என் அடியார்களே! நீங்கள் அனைவரும் வழி தவறியவர்கள் தாம். எனினும் நான் நேர்வழியில் நடத்துபவர்ளைத் தவிர, ஆகவே நேர் வழியைக் காட்டுமாறு என்னிடம் கேளுங்கள். நான் (உங்களுக்கு) நேர்வழியைக் காட்டுகிறேன். (முஸ்லிம்)

எனவே சரியான அகீதாவில் நிலைத்திருப்பதற்கு அல்லஹ்வின் ஹிதாயத்-நேர்வழி அத்தியாவசியமாகும்.

இன்-ஷா அல்லாஹ் தொடரும்..

எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.

அண்மைய இடுகைகள் Recent Posts

அண்மைய ஜுமுஆக்கள்

பிரிவுகள் (Catagories)