ஷரஹ் – லாமிய்யா இப்னு தைமிய்யா கவிதைத் தொகுப்பு – Notes-04

Facebook
Twitter
Telegram
WhatsApp

بسم الله الرحمن الرحيم

நூல்ஷரஹ் லாமியா இப்னு தைமிய்யா

ஆசிரியர்அஷ்-ஷெய்க் ஸெய்த் இப்னு முஹம்மத் இப்னு ஹாதி அல்-மத்கலி ரஹிமஹுல்லாஹ்

தமிழ் மொழி மூல விளக்க உரைஅபூ ஜுலைபீப் ஸாஜித் இப்னு (சுப்யான்) நஸ்ருதீன் அஸ்-ஸெய்லானி

தொகுப்புஅபூ அப்ஸர்

பாடம்: 04

பிழையான அகீதாவை விட்டும் சரியான அகீதாவின் பால் இட்டுச் செல்லும் வழிமுறைகள்:

1 – சரியான அகீதாவை (கொள்கையை) அல்-குர்ஆன் மற்றும் அஸ்-ஸுன்னாவிலிருந்து பெற்றுக் கொள்ளல். அத்துடன் தவறான அகீதா-கொள்கை பற்றி அறிந்து கொள்ளல்.

அல்-குர்ஆன் மற்றும் அஸ்-ஸுன்னாவில் இருந்து அகீதாவைப் பெற்றுக் கொள்கின்றவன் ஒரு போதும் பிழையான அகீதாவைப் பெற்றுக் கொள்ள மாட்டான்.

ஸலபுஸ் ஸாலிஹீன்கள் (முன்னோர்கள்) அல்-குர்ஆன் மற்றும் அஸ்-ஸுன்னாவிலிருந்துதான் சரியான அகீதாவைப் பெற்றுக் கொண்டார்கள். அவர்கள் பெற்றுக் கொண்ட அந்த சரியான அகீதாவே அவர்களை நேர்வழிப்படுத்தியது.

قال أبو عبد الله مالك بن أنس رحمه الله “لن يَصلُحَ آخرُ هذه الأمة إلا بما صَلَح به أولها؛ فما لم يكن يومئذٍ دينًا، لا يكون اليوم دينًا”

இமாம் அபூ அப்தில்லாஹ் மாலிக் இப்னு அனஸ் அல்-அஸ்பஹி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்:

இந்த உம்மத்தின் ஆரம்ப கால சந்ததியினரை எது  சீர்திருத்தியதோ!  அதன் மூலமே தவிர இந்த உம்மத்தின் இறுதி கால சந்ததியினரை சீர்திருத்த முடியாது. அதே போன்று அன்று (ஸஹாபாக்களிடத்தில்) எது மார்க்கமாக இருக்கவில்லையோ! இன்றும் அது மார்க்கமாக இருக்காது.

எனவே ஆரம்பகால சந்ததியினரை சீர்திருத்தியது அல்-குர்ஆனும்  அஸ்-ஸுன்னாவும் ஆகும். அவர்கள் இவை இரண்டுக்கும் கட்டுப்பட்ட போது ஈடேற்றம் பெற்றவர்களாக மாறினார்கள்.

அன்றைய ஜாஹிலிய்யா சமூகத்திற்கு மத்தியில் நபி ﷺ அவர்கள் அல்-குர்ஆனை கொண்டு வந்து அதனை மக்கள் மத்தியில் போதித்த போது; அந்த ஸஹாபாக்களான எங்களுடைய முன்னோர்கள். அல்-குர்ஆனையும் நபி ﷺ அவர்களின் வழிமுறையையும் ஏற்று கட்டுப்பட்டு பின்பற்றினார்கள். அதன் மூலமாக அல்லாஹ் ஸுப்ஹானஹூ தஆலா அந்த சமுதாயத்தை சீரான ஒரு சமுதாயமாக ஆக்கினான்.

எனவே அவர்களிடத்தில் இருந்த அல்-குர்ஆன் அஸ்-ஸுன்னாவின் பற்று அவர்களை நேர்வழிப்படுத்தியது. மேலும் அதிலே உறுதியாக இருப்பதற்காக, அவர்கள் அவை இரண்டையும் இறுகப் பற்றிப்பிடித்து அவர்களுக்கு மத்தியில் ஒருவருக்கு ஒருவர் உதவி புரிந்து கொண்டார்கள். இன்னும் உண்மையாளர்களாகவும் இருந்தார்கள். மேலும் அவர்கள் சரியான அகீதாவின் பால் ஏனையவர்களையும் சீர் திருத்தினார்கள்.

இந்த விடயத்தைதான் ஸூரத்துல் அஸ்ர் பேசுகின்றது; மேலான அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்:

وَالْعَصْرِۙ

 காலத்தின் மீது சத்தியமாக!

اِنَّ الْاِنْسَانَ لَفِىْ خُسْرٍۙ

நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கிறான்.

اِلَّا الَّذِيْنَ اٰمَنُوْا وَ عَمِلُوا الصّٰلِحٰتِ وَتَوَاصَوْا بِالْحَقِّ   ۙ وَتَوَاصَوْا بِالصَّبْرِ

விசுவாசங்கொண்டு நற்கருமங்களையும் செய்து, சத்தியத்தை ஒருவருக்கொருவர் உபதேசம் செய்தும், (பாவங்களை விடுவதிலும், நன்மைகளைச் செய்வதிலும் ஏற்படும் கஷ்டங்களைச் சகித்து) பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களே அத்தகையோரைத் தவிர, (ஸூரத்துல் அஸ்ர்)

எனவேதான் மேற்கூறப்பட்ட இமாம் அபூ அப்தில்லாஹ் மாலிக் இப்னு அனஸ் அல்-அஸ்பஹி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் கூற்று மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு கூற்று ஆகும். இமாம் அவர்கள் அல்-முஅத்தா ஹதீஸ் நூலுக்குச் சொந்தமானவர்.

“இந்த உம்மத்தின் ஆரம்ப கால சந்ததியினரை எது சீர்திருத்தியதோ!  அதன் மூலமே தவிர இந்த உம்மத்தின் இறுதி கால சந்ததியினரை சீர்திருத்த முடியாது.”

எனவே அல்-குர்ஆன் அஸ்-ஸுன்னாவைக் கொண்டுதான் அகீதா-கொள்கைக் கோட்பாடுகள் சீர் பெறும். மேலும் பிழையான அகீதாவில் இருந்து பாதுகாப்பும் இருக்கும்.

இமாம் மாலிக் இப்னு அனஸ் ரஹிமஹுல்லாஹ் அவர்களைத் தொட்டும் இந்த அதர் பல அறிவிப்புக்கள் அடிப்படையில் வந்திருக்கிறது.

இது ஒரு ஸஹீஹான கூற்றாகும். இக்கூற்றை, இமாம் அல்-காலி இயாழ் ரஹிமஹுல்லாஹ் அவர்கள், அஷ்-ஷிபா எனும் நூலிலும்; ஷெய்குல் இஸ்லாம் இப்னு தைமிய்யாஹ் ரஹிமஹுல்லாஹ் அவர்கள், மஜ்மூ அல்-பதாவா, மின்ஹாஜுஸ் ஸுன்னா, இக்திழா அஸ்-ஸிராத் அல்-முஸ்தகீம் போன்ற பல புத்தகங்களில் இந்தக் கூற்றை கூறியுள்ளார்கள்.

இமாம் அஷ்-ஷாதிபி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் அல்-இஃதிஸாம் எனும் நூலில் பின்வருமாறு கூறுகின்றார்கள்:

قال الإمام مالك – رحمه الله -: ( لَن يَّأْتِيَ آخِرُ هَذِهِ الأُمَّة بِأَهْدَى مِمَّا كَانَ عَلَيْهِ أَوَّلُهَا )

இந்த உம்மத்தில் ஆரம்பத்தில் இருந்தவர்கள் பெற்ற நேர்வழியை  இறுதியில் வருபவர்கள் பெறமாட்டார்கள்.

எனவே இந்த உம்மத்தின் ஆரம்பத்தை நெறிப்படுத்தியது அல்-குர்ஆனும் அஸ்-ஸுன்னாவும்  ஆகும்.

அகீதாவைப் பற்றி அறியாத மக்களிடம், குர்ஆன், சுன்னாவை முறையாகக் கடைப்பிடித்து வாழும் அஹ்லுஸ்ஸுன்னாக்களுக்கு இது ஓர் கடுமையான ஆதரவற்ற அநாதரவான நிலையாகும். அநாதரவான இவர்கள், படைத்தவனின் சுபசோபனத்திற்குரியவர்கள்!

عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏ بَدَأَ الإِسْلاَمُ غَرِيبًا وَسَيَعُودُ كَمَا بَدَأَ غَرِيبًا فَطُوبَى لِلْغُرَبَاءِ ‏”‏ (صحيح مسلم)

அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் ஹதீஸ்; நபி ﷺ அவர்கள் கூறினார்கள்:

இஸ்லாம் அநாதரவான நிலையிலேயே ஆரம்பத்தில் இருந்தது. திரும்பவும் அது அநாதரவான நிலைக்கே செல்லும். எனவே, ஆதரவற்று அநாதரவாக இருப்போருக்கு நன்மாராயம் உண்டாகட்டும்! நூல்: ஸஹீஹ் முஸ்லிம்

இன்னும் ஒரு அறிவிப்பில் அநாதரவாளர்களைப் பற்றி  வர்ணிக்கும்போது;

«إِنَّ الإِسْلاَمُ بَدَأَ غَرِيْباً وَسَيَعُوْدُ غَرِيْباَ كَمَا بَدَأَ ، فَطُوبَى لِلْغُرَبَاءِ »، قيل: من هم يا رسول الله؟ قال: « الَّذِيْنَ يَصْلُحُوْنَ إذَا فَسَدَ النَّاس» (سلسلة الأحاديث الصحيحة ، رقم 1273.)

இஸ்லாம் அநாதரவான நிலையிலேயே ஆரம்பத்தில் இருந்தது. திரும்பவும் அது அநாதரவான நிலைக்கே செல்லும். எனவே, ஆதரவற்று அநாதரவாக இருப்போருக்கு நன்மாராயம் உண்டாகட்டும்! அப்போது நபியிடம், ‘அவர்கள் யார்? அல்லாஹ்வின் தூதரே!’ என வினவப்பட்டது. அதற்கு நபியவர்கள்; மக்கள் சீர்கெட்டவர்களாக வாழ்ந்து கொண்டிருக்கும் போது (அதனை) சீர்திருத்துபவர்கள்தான் அவர்கள்!’ எனப் பதிலளித்தார்கள்”. 

இன்னும் ஒரு அறிவிப்பில்;

«إِنَّ الإِسْلاَمُ بَدَأَ غَرِيْباً وَسَيَعُوْدُ غَرِيْباَ كَمَا بَدَأَ ، فَطُوبَى لِلْغُرَبَاءِ »، قيل: من هم يا رسول الله؟ قال: « هُمُ الَّذِيْنَ يُصْلِحُوْنَ مَا أَفْسَدَ النَّاسُ مِنْ سُنَّتِي » (سلسلة الأحاديث

இஸ்லாம் அநாதரவான நிலையிலேயே ஆரம்பத்தில் இருந்தது. திரும்பவும் அது அநாதரவான நிலைக்கே செல்லும். எனவே, ஆதரவற்று அநாதரவாக இருப்போருக்கு நன்மாராயம் உண்டாகட்டும்! அப்போது நபியிடம், ‘அவர்கள் யார்? அல்லாஹ்வின் தூதரே!’ என வினவப்பட்டது. அதற்கு நபியவர்கள்; என்னுடைய ஸுன்னா மக்கள் மத்தியில் சீர்கெட்டிருக்கும்போது (அதனை) சீர்திருத்துபவர்கள்தான் அவர்கள்!’ ‘ எனப் பதிலளித்தார்கள்”.

மேலும் இன்னும் ஒரு அறிவிப்பில்;

قال رسول الله صلى الله عليه وسلم: « طوبى للغرباء » ، قيل: ومن الغرباء يا رسول الله؟ قال: « أُنَاسٌ صَالِحُوْن قليل فِيْ أُنَاسٍ سُوْءً كَثِيْر، وَمَن يَعْصِيْهِمْ أَكْثَرُ مِمَّن يَّطِيعُهُم » (سلسلة الأحاديث الصحيحة، رقم1619)

அநாதரவான அவர்கள் யார்? அல்லாஹ்வின் தூதரே!’ என வினவப்பட்டது. அதற்கு நபியவர்கள், பல சீர்கெட்ட மக்களுக்கு மத்தியில் வாழும் ஸாலிஹான மனிதர்கள்; சிறிய ஒரு கூட்டத்தினரைத் தவிர அதிகமானவர்கள் இவர்களது பேச்சுக்கு கீழ்படிவதில்லை. அவர்கள்!’ எனப் பதிலளித்தார்கள்”.

மேற்கூறப்பட்ட அனைத்து ரிவாயத்துக்களையும் இமாம் நாஸிருத்தீன் அல்பானீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் ஸஹீஹ் என கூறியுள்ளார்கள்.

அல்-குர்ஆனையும் அஸ்-ஸுன்னாவையும் பற்றிப்பிடித்து தங்கள் கொள்கை கோட்பாடுகளை அமைத்துக் கொண்டவர்கள்; அதன் பிரகாரம் அமல் செய்பவர்கள்; மேலும் சீர்கேடுகளுக்கு மத்தியில் சீர் திருத்தம் செய்பவர்கள். அதாவது நன்மையை ஏவி தீமையைத் தடுக்கின்றவர்கள். இவர்கள்தான் உண்மையான அகீதாவைச் சுமந்தவர்கள்; உரபாக்கள்-அநாதரவானவர்கள். நபி ﷺ அவர்களின் நன்மாராயத்திற்கு உரியவர்கள்.

தீமையைப் பற்றி அறிந்து கொள்ளாதவன் அதில் மாட்டிக் கொள்ளும் வாய்ப்புக்கள் உண்டு என்றபடியால் வழி தவறிய கொள்கை வாதிகளின் கொள்கையை மறுத்துரைக்க வேண்டும். மேலும் அதிலிருந்து எச்சரிக்கையாக இருக்கவும் அவர்களின் தவறான கொள்கையையும், அவர்களின் ஆட்சேபனைகளையும் பற்றி அறிந்து கொள்வதும் அவசியமாகும்.

2 – முன்னோர்களான ஸலபுஸ் ஸாலிஹீன்களின் சரியான அகீதா கொள்கையைக் கற்றுக் கொடுக்கும் விடயத்தில் விசேட கவணம் செலுத்துதல்.

சரியான அகீதாவை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆண் பெண் இரு பாலருக்கும் கற்றுக் கொடுக்க வேண்டும். அதேபோல் மக்களும் அகீதா விடயத்தில் விசேட கவனம் செலுத்தி கற்க வேண்டும்.

3 – ஸலபுஸ் ஸாலிஹீன் (முன்னோர்)களின் சரியான புத்தகங்களை போதித்தல் மற்றும் வழிதவறிய கூட்டத்தினரின் புத்தகங்களை ஓரம் கட்டிவிடல்.

முன்னோர்களின் சரியான புத்தகங்களை போதித்தல் வேண்டும். மக்களும் அந்த ஸாலிஹீன்களின் புத்தகங்களில் இருந்து கற்க வேண்டும். அத்துடன் ஸூபிஸ, ஜஹ்மிய்யா, முஃதஸிலா, அஷாஇரிய்யா, மற்றும் மாதுரீதிய்யா போன்ற வழிதவறிய கூட்டத்தினரின் புத்தகங்களை ஓரம் கட்டிவிட வேண்டும். மேலும் அப்புத்தகங்களில் இருந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

4 – ஸலபுஸ் ஸாலிஹீன்களின் சரியான அகீதாவை மக்களுக்குப் போதித்தல், மற்றும் வழிதவறிய கூட்டத்தவரின் வழிகேடுகளை மக்களுக்கு  பிரச்சாரம் செய்தல்.

ஸலபுஸ் ஸாலிஹீன்களின் சரியான அகீதாவை மக்களுக்குப் போதித்து, வழிதவறிய கூட்டத்தவரின் வழிகேடுகளை மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்ய வேண்டும். சீர்திருத்தவாதிகளான பிரச்சாரகர்கள் இந்த அகீதா விடயத்தில் மிகக் கவனமாகச் செயல்பட வேண்டும்.

இன்-ஷா அல்லாஹ் தொடரும்..

எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.

அண்மைய இடுகைகள் Recent Posts

அண்மைய ஜுமுஆக்கள்

பிரிவுகள் (Catagories)