بسم الله الرحمن الرحيم
நூல்: ஷரஹ் லாமியா இப்னு தைமிய்யா
ஆசிரியர்: அஷ்-ஷெய்க் ஸெய்த் இப்னு முஹம்மத் இப்னு ஹாதி அல்-மத்கலி ரஹிமஹுல்லாஹ்
தமிழ் மொழி மூல விளக்க உரை: அபூ ஜுலைபீப் ஸாஜித் இப்னு (சுப்யான்) நஸ்ருதீன் அஸ்-ஸெய்லானி
தொகுப்பு: அபூ அப்ஸர்
பாடம்: 06
லாமிய்யா கவிதை அடிகள் ஷெய்குல் இஸ்லாம் இப்னு தைமிய்யா ரஹிமஹுல்லாஹ் அவர்களுடையது என்பதே மிகப் பிரபல்யமான கருத்தாகும்.
இவ்விடயத்தில் உலமாக்கள் மத்தியில் இரண்டு பிரதான கருத்துக்கள் நிலவுகின்றன.
இவ்விரு கருத்துக்களில் லாமிய்யா கவிதைத் தொகுப்பு ஷெய்குல் இஸ்லாம் இப்னு தைமிய்யாஹ் ரஹிமஹுல்லாஹ் அவர்களுக்கு சொந்தமானது என்பதே சரியான கருத்தாகும்.
ஷெய்குல் இஸ்லாம் இப்னு தைமிய்யா ரஹிமஹுல்லாஹ் அவர்களுடன் லாமிய்யா கவிதைத் தொகுப்பு இணைக்கப்படுவதற்கான காரணங்கள்:
- லாமிய்யா கவிதை அடிகள் எழுதப்பட்ட காலம் தொடக்கம் இன்றுவரை அதிகமான உலமாக்கள்; அது ஷெய்குல் இஸ்லாம் இப்னு தைமிய்யா ரஹிமஹுல்லாஹ் அவர்களுக்குரிய கவிதைத் தொகுப்பு என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்கள். (அவர்களின் புத்தகங்களும், (மஜ்லிஸுகள்) லாமிய்யா ஷரஹுக்கான அமர்வுகளும் இதை உறுதிப்படுத்தியுள்ளன.)
அல்-அல்லாமா நுஃமான் அல்-ஆலூஸி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் ஜலாஉல் அய்னைன் பீ முஹாகமதில் அஹ்மதைன் என்ற தங்களுடைய புத்தகத்தில்; லாமிய்யா கவிதை அடிகள் ஷெய்குல் இஸ்லாம் இப்னு தைமிய்யா ரஹிமஹுல்லாஹ் அவர்களுக்குச் சொந்தமானது. அது அவர்களின் பக்கமே இணக்கப்பட வேண்டும் என உறுத்திப்படுத்தியுள்ளார்கள்.
அல்-லஆலி அல் பஹிய்யா ஷரஹ் லாமிய்தி ஷெய்கில் இஸ்லாம் இப்னு தைமிய்யாஹ் என்ற நூல் லாமிய்யா கவிதைத் தொகுப்பிற்கு ஆரம்பமாக எழுதப்பட்ட விளக்கவுரையாகும். இந்த நூலை எழுதிய அல்-இமாம் அஹ்மத் இப்னு அப்துல்லாஹ் அல்-மர்தாவி அல்-ஹம்பலி ரஹிமஹுல்லாஹ் அவர்கள்; லாமிய்யா கவிதை அடிகள் ஷெய்குல் இஸ்லாம் இப்னு தைமிய்யா ரஹிமஹுல்லாஹ் அவர்களுக்குச் சொந்தமானது என்று உறுதிப்படுத்தியுள்ளார்கள்.
- லாமிய்யா கவிதை அடிகள் ஷெய்குல் இஸ்லாம் இப்னு தைமிய்யாஹ் ரஹிமஹுல்லாஹ் அவர்களுடையதுதான் என்பது அவர்களது மாணவர்கள் மற்றும் உலமாக்களுக்கு மத்தியில் பிரசித்தி பெற்றிருக்கிறது.
- லாமிய்யா கவிதை அடிகள் ஷெய்குல் இஸ்லாம் இப்னு தைமிய்யாஹ் ரஹிமஹுல்லாஹ் அவர்களைத் தவிர வேறு எவரின் பாலும் இணைக்கப்படவில்லை.
- ஷெய்குல் இஸ்லாம் இப்னு தைமிய்யாஹ் ரஹிமஹுல்லாஹ் அவர்களின் சில புத்தகங்களுடன் இணைத்து கையெழுத்து பிரதிகளாக லாமிய்யா கவிதை அடிகள் எழுதப்பட்டிருந்ததை உலமாக்கள் பார்த்திருக்கின்றார்கள்.
- லாமிய்யா கவிதை அடிகளில் ஷெய்குல் இஸ்லாம் இப்னு தைமிய்யாஹ் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் பேசி இருக்கும் அகீதா-கொள்கைக் கோட்பாட்டை; அவர்களின் ஏனைய நூல்களில் தம்முடைய கொள்கை கோட்பாடாக ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
- ஷெய்குல் இஸ்லாம் இப்னு தைமிய்யாஹ் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் லாமிய்யா கவிதை அடிகளை எழுதுவதற்கு மிகவும் அறிவு பெற்றவர்களாகவும் தகுதியுடையவர்களாகவும் இருந்தார்கள். மேலும் அது அவர்களுக்கு மிகவும் இலகுவான ஒரு விடயமாகும். அவருடைய ஏனைய புத்தகங்கள் இதற்கு சான்று பகர்கின்றன. அஹ்லுஸ்-ஸுன்னாக்களுக்கு மாற்றமாக கத்ர்-விதி பற்றிய அம்சத்தை சிலர் பேசினார்கள். அதற்கு மறுப்பாக இமாம் அவர்கள் கிட்டத்தட்ட 100 அடிகளை உள்ளடக்கிய தாஇய்யா கவிதைத் தொகுப்பை ஒரே அமர்வில் எழுதி முடித்திருக்கிறார்கள்.
லாமிய்யா கவிதைத் தொகுப்பு ஷெய்குல் இஸ்லாம் இப்னு தைமிய்யா ரஹிமஹுல்லாஹ் அவர்களின் பால் இணைக்கப்படக் கூடாது என்பதற்கான காரணங்களும் அதற்கான பதில்களும்.
- அஷ்-ஷெய்க் அப்துர்-ரஹ்மான் இப்னு முஹம்மத் இப்னு காஸிம் அல்-ஆஸிமி அன்-நஜிதி ரஹிமஹுல்லாஹ் அவர்கள்; ஷெய்குல் இஸ்லாம் இப்னு தைமிய்யா ரஹிமஹுல்லாஹ் அவர்களின் அதிகமான புத்தகங்களை ஒன்று சேர்த்தவர் ஆவார். இவர்தான் மஜ்மூ அல்-பதாவாவை தொகுத்தவர். இத் தொகுப்பில் லாமிய்யா இடம் பெறவில்லை.
எனவே ஷெய்குல் இஸ்லாம் இப்னு தைமிய்யாஹ் ரஹிமஹுல்லாஹ் அவர்களுடன் லாமிய்யா கவிதை அடிகள் இணைக்கப்பட கூடாது என்பதற்கு இது ஒரு பிரதான காரணம் ஆகும்.
அதற்கான பதில்: அஷ்-ஷெய்க் அப்துர்-ரஹ்மான் இப்னு முஹம்மத் இப்னு காஸிம் அல்-ஆஸிமி அன்-நஜிதி ரஹிமஹுல்லாஹ் அவர்கள்; ஷெய்குல் இஸ்லாம் இப்னு தைமிய்யா ரஹிமஹுல்லாஹ் அவர்களின் அனைத்து நூல்களையும் ஒன்று திரட்டி மஜ்மூ அல்-பதாவாவை எழுதவில்லை. அவர்களின் சக்திக்கு உட்பட்ட வகையில் இமாமவர்களின் புத்தகங்களை ஒன்று திரட்டி எழுதினார்கள்.
ஷெய்குல் இஸ்லாம் இப்னு தைமிய்யா ரஹிமஹுல்லாஹ் அவர்களின் புத்தகங்கள் இவ்வளவுதான் என்று அவர் வரையறுக்கவில்லை.
- ஷெய்குல் இஸ்லாம் இப்னு தைமிய்யா ரஹிமஹுல்லாஹ் அவர்களுக்கு பிரசித்தி பெற்ற மாணவர்கள் இருக்கின்றார்கள். (இமாம் இப்னுல் கைய்யிம் ரஹிமஹுல்லாஹ், இமாம் இப்னு அப்தில் ஹாதி ரஹிமஹுல்லாஹ், இமாம் இப்னு கஸீர் ரஹிமஹுல்லாஹ், இமாம் அத்-தஹபி ரஹிமஹுல்லாஹ்) அவர்களின் மாணவர்கள் லாமிய்யா கவிதை அடிகளை தங்களின் புத்தகங்களில் குறிப்பிடவில்லை.
அதற்கான பதில்: ஷெய்குல் இஸ்லாம் இப்னு தைமிய்யா ரஹிமஹுல்லாஹ் அவர்களின் மாணவர்கள் இமாமவர்களின் அனைத்து புத்தகங்களையும் தங்களது புத்தகங்களில் குறிப்பிடவில்லை.
ஷெய்குல் இஸ்லாம் இப்னு தைமிய்யா ரஹிமஹுல்லாஹ் அவர்களின் புத்தகங்கள் இவ்வளவுதான் என்று அவர்கள் வரையறுக்கவில்லை. மாறாக தங்களின் அறிவுக்கு உட்பட்ட வகையில் புத்தகங்களைத் தொகுத்துள்ளார்கள்.
- قُبْحاً لِمَنْ نَبَذَ القرآن وراءَهُ *** و إِذا اسْتَدَلَّ يقولُ قالَ الأخطَلُ
யார் அல்-குர்ஆனை தன்னுடைய முதுகுக்குப் பின்னால் எறிந்தாரோ அவருக்கு நாசம் *** ஆதாரங்களைக் கேட்கும் போது அல்-அக்தல் கூறினார் என்று கூறுவர்.
ஷெய்குல் இஸ்லாம் இப்னு தைமிய்யா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் இந்த கவிதை அடியை மஜ்மூ அல்-பதாவாவில் ஒரு இடத்தில் வேறு ஒருவர் கூறுவது போல மேற்கோள் காட்டுகிறார்கள். எனவே வேறு ஒருவர் கூறுவது போன்று இமாம் அவர்களே குறிப்பிடுகின்றார்கள் என்றால் லாமிய்யா கவிதை ஷெய்குல் இஸ்லாம் இப்னு தைமிய்யா ரஹிமஹுல்லாஹ் அவர்களுக்கு சொந்தமானதல்ல என்ற ஒரு வாதத்தை சில உலமாக்கள் வைக்கின்றார்கள்.
அதற்கான பதில்: ஷெய்குல் இஸ்லாம் இப்னு தைமிய்யா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் ஒரு விடயத்திற்குரிய ஆதாரங்களைக் கூறும் போது தங்களுடைய சில கவிதை அடிகளையும் கூறுவார். அவ்வாறு கூறும் போது; “ஒருவர் கூறுகின்றார்” என்று கூறி தன்னுடைய கவிதை அடிகளைக் கூறுவார். இது இமாம் அவர்களின் ஒரு போக்காக இருந்தது.
உதாரணமாக தர் அத்-தஆருழ் அல்-அக்ல் வன்-நஃக்ல் என்ற நூலில் இமாம் அவர்கள் ஒருவரின் கூற்று என்று கூறிவிட்டு; தன்னுடைய ஒரு கவிதை அடியைக் குறிப்பிடுகின்றார். இது இமாம் அவர்களின் கூற்று என்பது அனைவரும் அறிந்த ஒரு உண்மை ஆகும். அதனை இமாம் இப்னுல் கைய்யிம் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் இது ஷெய்குல் இஸ்லாம் இப்னு தைமிய்யா ரஹிமஹுல்லாஹ் அவர்களின் கூற்று என்று உறுதிப்படுத்தியுள்ளார்கள். இவ்வாறு கூறுவது இமாம் அவர்களின் ஒரு வழமையாகும்.
- லாமிய்யா கவிதைத் தொகுப்பில் வரும் ஒரு சொல்,
وَأَقـُولُ فِي القُرآنِ ما جاءَتْ بِـه *** آياتُـهُ فَهُوَ القَدِيمُ المُنْـزَلُ
லாமிய்யா கவிதைத் தொகுப்பின் ஐந்தாவது அடி; ஆல்குர்ஆனை ‘கதீம் பழைய வார்த்தை’ என்று பேசுகிறது. இவ்வாறான ஒரு வார்த்தையை ஷெய்குல் இஸ்லாம் இப்னு தைமிய்யா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் ஒரு போதும் கூறமாட்டார்கள். ஏனெனில் இவ்வாறான வார்த்தைகளை எதிர்த்து இமாம் அவர்கள் தன்னுடைய ஏனைய புத்தகங்களில் பேசியுள்ளார்கள். எனவே லாமிய்யா கவிதை அடிகள் ஷெய்குல் இஸ்லாம் அவர்களுக்குச் சொந்தமானதல்ல என்று ஒரு வாதத்தை சில உலமாக்கள் முன்வைக்கிறார்கள்.
அதற்கான பதில்: லாமிய்யா கவிதை அடிகளின் ஐந்தாவது அடியில் வரும் ‘கதீம்’ என்ற சொல் எழுதும் போது தவறுதலாக விடப்பட்ட ஒரு பிழை என்று உலமாக்கள் குறிப்பிடுகின்றார்கள். ஷெய்குல் இஸ்லாம் இப்னு தைமிய்யா ரஹிமஹுல்லாஹ் அவர்களின் கையெழுத்துப் பிரதிகளில் ஐந்தாவது அடி பின்வருமாறு (‘அல்-கரீம்’ ‘அல்-ஹகீம்’) என்று உறுதியாக எழுதப்பட்டுள்ளது:
وَأَقـُولُ فِي القُرآنِ ما جاءَتْ بِـه *** آياتُـهُ فَهُوَ الكَرِيمُ المُنْـزَلُ
கரீம் – அல்லாஹ்வின் பேச்சுக்கள் கண்ணியமானவை.
وَأَقـُولُ فِي القُرآنِ ما جاءَتْ بِـه *** آياتُـهُ فَهُوَ الحَكِيمُ المُنْـزَلُ
ஹகீம் – அல்லாஹ்வின் வார்த்தைகள் ஹிக்மத்தானவை – ஞானமுள்ளவை.
எனவே லாமிய்யா கவிதைகளின் ஐந்தாவது அடியில் வரும் ‘கதீம்’ என்ற சொல் உறுதியானது அல்ல. ஷெய்குல் இஸ்லாம் இப்னு தைமிய்யா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் அல்-குர்ஆனை பழைய வார்த்தைகள் என்று கூறுவதை மிகவும் கண்டித்துள்ளார்கள்.
ஆகவே இது ஷெய்குல் இஸ்லாம் இப்னு தைமிய்யா ரஹிமஹுல்லாஹ் அவர்களின் கவிதைத் தொகுப்புதான் என்பதை விளங்கிக் கொள்ள முடியும்.
அஷ்-ஷெய்க் இப்னு உதைமீன் ரஹிமஹுல்லாஹ் அவர்கள்; லாமிய்யா கவிதைத் தொகுப்பை ஷெய்குல் இஸ்லாம் இப்னு தைமிய்யா ரஹிமஹுல்லாஹ் அவர்களின் பக்கம் இணைக்க கூடாது என தங்களது சில நூல்களில் குறிப்பிட்டுள்ளார்கள். இணைக்கப்படுவதற்குரிய சரியான ஆதாரம் எங்கும் பதியப்படவில்லை என்று கூறியுள்ளார்கள்.
- அஷ்-ஷெய்க் இப்னு உதைமீன் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் லாமிய்யா கவிதைத் தொகுப்பு ஷெய்குல் இஸ்லாம் இப்னு தைமிய்யா ரஹிமஹுல்லாஹ் அவர்களுடையது அல்ல என்று மறுத்தாலும்; ஏனைய உலமாக்கள் லாமிய்யா கவிதைத் தொகுப்பு ஷெய்குல் இஸ்லாம் இப்னு தைமிய்யா ரஹிமஹுல்லாஹ் அவர்களுடையதுதான் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்கள்.
இந்த கருத்து வேறுபாடுகளை அடிப்படையாக வைத்து உலமாக்கள் இந்த நூலுக்கு விரிவுரை செய்து பெயர் சூட்டும் போது; ‘அல்-மன்ஸூபா இலா ஷெய்குல் இஸ்லாம்’ (ஷெய்குல் இஸ்லாம் இப்னு தைமிய்யா ரஹிமஹுல்லாஹ் அவர்களின் பக்கம் இணைக்கப்படும்) என்ற வார்த்தையையும் இணைத்து பெயர் சூட்டியுள்ளார்கள்.
இன்-ஷா அல்லாஹ் தொடரும்..
எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.