بسم الله الرحمن الرحيم
நூல்: ஷரஹ் லாமியா இப்னு தைமிய்யா
ஆசிரியர்: அஷ்-ஷெய்க் ஸெய்த் இப்னு முஹம்மத் இப்னு ஹாதி அல்-மத்கலி ரஹிமஹுல்லாஹ்
தமிழ் மொழி மூல விளக்க உரை: அபூ ஜுலைபீப் ஸாஜித் இப்னு (சுப்யான்) நஸ்ருதீன் அஸ்-ஸெய்லானி
தொகுப்பு: அபூ அப்ஸர்
பாடம்: 07
அணிந்துரை
உங்கள் மத்தியில் காணப்படும் இந்த விளக்கவுரை இஸ்லாமிய அகீதாவைப் பற்றிப் பேசுகின்ற மிக மகத்தான சில கவிதை அடிகளுக்கு சுருக்கமாக செய்யப்பட்ட விரிவுரையாகும்.
இந்த லாமிய்யா கவிதை அடிகள் அறிவில் முதிர்ச்சியும் தேர்ச்சியும் பெற்ற ஷெய்குல் இஸ்லாம் அஹ்மத் இப்னு தைமிய்யா அல்-ஹர்ரானி ரஹிமஹுல்லாஹ் அவர்களால் எழுதப்பட்டதாகும்.
இமாம் அவர்கள் அகீததுஸ் ஸலபிய்யாவை அதாவது அஹ்லுஸ்ஸுன்னாக்களின் அகீதாவை இந்த கவிதை அடிகளில் பேசியுள்ளார்கள்.
இமாம் இப்னு தைமிய்யா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் பல போராட்டங்களுக்கும் சிறமங்களுக்கும் மத்தியில் முயற்சிகள் செய்து சரியான அகீதாவை மக்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும் என்ற நோக்கில்; நடு நிலையாகவும் சுருக்கமாகவும் அவருடயை ஏனைய புத்தகங்களிலும் அஹ்லுஸ்ஸுனாக்களின் அகீதாவை பேசியுள்ளார்கள்.
அல்-கஸீம் என்ற பிரதேசத்தில் இமாம் அப்துல்லா இப்னு முஹம்மத் அல்-கர்ஆவி அவர்களின் பெயரில் ஒரு தவ்ரா-பாடநெறி அமர்வு நிகழ்த்தப்பட்டது. அந்த நிகழ்வில் லாமிய்யாவின் கவிதை அடிகளுக்கு என்னால் செய்யப்பட்ட விரிவுரையே இந்த புத்தகம்.
சரியான மார்க்க அறிவைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற நோக்கில்; பல பிரதேசங்களில் இருந்து அதிகமான மாணவர்கள் இந்த தவ்ராவில் பங்கேற்றார்கள்.
மார்க்க அறிவை கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் நமக்கு ஏற்பட்டால் அது அல்லாஹ் நமக்குச் செய்த ஒரு அருட்கொடையாகும். இதன் மூலம் நாம் மார்க்க அறிவைக் கற்றுத் தெளிவு பெற்றால் அல்லாஹ்வின் பாதுகாப்பைப் பெறலாம்.
1 – என்னுடைய மாணவர்களே! சகோதரர்களே! இல்மை – மார்க்க அறிவைக் கற்றுக் கொள்வதற்கும். அதிலே தெளிவு பெறுவதற்கும் உங்களை நீங்கள் முயற்சியாளர்களாக ஆயத்தப்படுத்திக் கொள்ளுங்கள். இது நான் உங்களுக்குச் செய்யும் முதல் உபதேசமாகும்.
2 – உலமாக்களின் புத்தகங்கள் மற்றும் அவைகளுக்கான விளக்கங்களிலிருந்து இல்மைக் கற்றுக் கொள்ளுங்கள்.
3 – ஸலபுஸ்-ஸாலிஹீன்களின் மன்ஹஜ் (வழிமுறை)யில் எவர்கள் எல்லாம் சரியான இல்மை, அகீதாவை கற்பிக்கின்றார்களோ! அவ்வாறான உலமாக்களிடம் சென்று கால்மடித்து கற்றுக் கொள்ளுங்கள். மேலும் அறிவைத் தேடிக் கற்றுக் கொள்வதில் தொடர்ச்சியாக இருந்துகொள்ளுங்கள்.
4 – நீங்கள் உங்ககுக்கு மத்தியில் ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து; அல்லாஹ்வின் இறையச்சத்தை ஏற்படுத்தும் நன்மையான காரியங்களில் ஒத்துழைப்புடனும்; மேலும் உங்களுக்கு மத்தியில் பகைமையை ஏற்படுத்தும் பாவமான காரியங்களை விட்டும் தூரமாகவும் இருந்து கொள்ளுங்கள்.
5 – நான் கூறிய விடயங்களை சரியான முறையில் நீங்கள் கடைபிடித்தால்; அப்போதுதான் நேர்மையான முறையில் அறிவைச் சுமந்தவர்களாக இருப்பீர்கள்.
6 – பின்னர் அறிவை சுமந்த நீங்கள் உங்களுக்கு பின்னால் வரும் சமுதாயத்தினருக்கு; அல்-குர்ஆனையும் மார்க்கத்தின் சட்டதிட்டங்களையும் அழகான முறையில் எத்திவையுங்கள். மேலும் மக்களுக்கு மத்தியில் ஒரு உண்மையான ஆலிமாக இருந்து கொள்ளுங்கள். ஏனெனில் மனிதர்கள் அன்று தொடக்கம் இன்று வரை எல்லாக் காலங்களிலும் உலமாக்களின் பால் தேவையுடையவர்களாகவே இருந்து வருகிறார்கள்.
நீங்கள் உலமாக்களுக்கு மத்தியில் இருந்தால் அவர்களுடைய ஞானம் உங்களை நேர்வழிப்படுத்தும். ஒரு ஆலிம் அறியாதவருக்கு அறிவைக் கற்றுக் கொடுக்கின்றார். தன்னிடத்தில் கேட்டுத் தெரிந்து கொள்ள வருபவருக்கு அவருடன் அமர்ந்து மார்க்கத்தை கற்றுக் கொடுக்கின்றார். தன்னிடத்தில் மார்க்கத் தீர்ப்புக்களை கேட்பவர்களுக்கு மார்க்க தீர்ப்புக்களை வழங்குகின்றார். தன்னால் முடியுமான உபதேசங்களையும் வழிகாட்டல்களையும் வழங்குகின்றார்.
அல்லாஹ்வின் அடியார்களில் எவரெல்லாம் சீர்திருத்தவாதிகளாக இருக்கின்றார்களோ அவர்கள் இவ்வாறுதான் இருப்பார்கள். யாரெல்லாம் இவ்வாறு இருக்கிறார்களோ இவர்களுக்குத்தான் அல்லாஹ்விடத்தில் முழுமையான நற்கூலி இருக்கிறது.
இதனைத்தான் அல்லாஹ் ஸுப்ஹானஹூ வதஆலா ஸூரத்துல் அஸ்ரில் பின்வருமாறு பேசுகின்றான்.
وَالْعَصْرِۙ
காலத்தின் மீது சத்தியமாக!
اِنَّ الْاِنْسَانَ لَفِىْ خُسْرٍۙ
நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கிறான்.
اِلَّا الَّذِيْنَ اٰمَنُوْا وَ عَمِلُوا الصّٰلِحٰتِ وَتَوَاصَوْا بِالْحَقِّ ۙ وَتَوَاصَوْا بِالصَّبْرِ
விசுவாசங்கொண்டு நற்கருமங்களையும் செய்து, சத்தியத்தை ஒருவருக்கொருவர் உபதேசம் செய்தும், (பாவங்களை விடுவதிலும், நன்மைகளைச் செய்வதிலும் ஏற்படும் கஷ்டங்களைச் சகித்து) பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களே அத்தகையோரைத் தவிர, (ஸூரத்துல் அஸ்ர்)
இந்த சிறிய சூராவைத்தான் அஷ்-ஷெய்க் ஸெய்த் இப்னு ஹாதி அல்-மத்கழி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தன்னுடைய அணிந்துறையில் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.
உலமாக்களைத் தேடிச் சென்று கால்மடித்து இல்மைக் கற்றுக் கொள்ளவும், உலமாக்களின் புத்தகங்கள், ஒலிப்பதிவுகள் மூலம் கற்றுக் கொள்ளவும் மேலும் சமூக வலைத்தளங்களினூடாக உலமாக்களுடன் தொடர்புகளை மேற்கொண்டு இல்மைக் கற்றுக் கொள்ளவும் அல்லாஹுத்தஆலா இன்று பல வழிகளை திறந்து தந்துள்ளான். இது அல்லாஹுத்தஆலா எங்களுக்குச் செய்திருக்கின்ற மாபெரும் நிஃமா-அருட்கொடையாகும்.
இல்மைக் கற்றுக் கொள்வதற்கு அல்லாஹுத் தஆலா எமக்கு இலகுபடுத்தி தந்திருக்கின்ற இந்த மாபெரும் அருட்கொடைகள் எங்களை விட்டுச் செல்லும் முன் அதனைப் பேணிப் பாதுகாத்துக் கொள்வோம்!
اَلنِّعْمُ إِذَا شُكِرَتْ قَرَّتْ ، وَإِذَا كُفِرَتْ فَرَّتْ
எந்த அருட்கொடைகள் நன்றி செலுத்தப்படுகின்றதோ! அந்த அருட்கொடைகள் நிலைத்து நிற்கும். எந்த அருட்கொடைகள் நன்றி செலுத்தப்படவில்லையோ! அந்த அருட்கொடைகள் கடந்து சென்றுவிடும்.
இன்-ஷா அல்லாஹ் தொடரும்..
எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.