بسم الله الرحمن الرحيم
நூல்: ஷரஹ் லாமியா இப்னு தைமிய்யா
ஆசிரியர்: அஷ்-ஷெய்க் ஸெய்த் இப்னு முஹம்மத் இப்னு ஹாதி அல்-மத்கலி ரஹிமஹுல்லாஹ்
தமிழ் மொழி மூல விளக்க உரை: அபூ ஜுலைபீப் ஸாஜித் இப்னு (சுப்யான்) நஸ்ருதீன் அஸ்-ஸெய்லானி
தொகுப்பு: அபூ அப்ஸர்
பாடம்: 02
அகீதாவிலிருந்து வழிசறுகக்கூடிய காரணங்களும் அதிலிருந்து பாதுகாப்புப் பெறும் வழி முறைகளும்.
யாரெல்லாம் சரியான அகீதாவைவிட்டும் வழி சறுகிச் செல்கின்றார்களோ; அது அவர்களை பேரழிவுக்கு இட்டுச் செல்லும். அவர்களை அது வீணாக்கிவிடும்.
3 – தக்லீத் – கண்மூடித்தனமான பின்பற்றல்
அகீதா விடயத்தில் மக்கள் முன் வைக்கும் கருத்துக்களை, சரியான ஆதாரம் எதுவுமில்லாமல், அவை சரியானவையா என்று சீர்தூக்கிப் பார்க்காமல் கண்மூடித்தனமாக அவற்றைப் பின்பற்றுதல்.
தக்லீத் என்றால் என்ன?
எவருடைய கூற்று ஆதாரமற்ற கூற்றாக இருக்கின்றதோ அந்தக் கூற்றைப் பின்பற்றுவது. தக்லீத் ஆகும். என்று உலமாக்கள் வரைவிலக்கணப்படுத்தி உள்ளார்கள்.
எனவே ஆதாரங்களுடன் செயல்படுவது எங்களின் கடமை ஆகும். ஆதாரங்கள் இல்லாமல் செயல்படுவது எங்களை வழி சறுகச் செய்யும் என செய்க் அவர்கள் தெளிவுபடுத்துகிறார்கள்.
அகீதா மற்றும் அதுவல்லாத விடயங்களில் சரியான ஆதாரம் எதுவுமில்லாமல், வழி தவறிய இமாம்களை கண்மூடித்தனமாக யாரெல்லாம் பின்பற்றினார்களோ அவர்களின் வழித்தோன்றல்கள்தான் “ஜஹ்மிய்யா, முஃதஸிலா, அஷாஇறா, ஸூபிய்யா, அவர்கள் அல்லாத ஏனைய பிரிவினர்கள்”.
இஸ்லாத்தில் இந்தக் கூட்டங்கள் எப்போது தோற்றம் பெற்றன?
எப்போது இவர்கள் வழி சறுகிச்சென்ற இமாம்களை கண்மூடித்தனமாகப் பின்பற்றினார்களோ அப்போது இந்தப் பிரிவினைகள் தோற்றம் பெற்றன.
ஜஹ்மிய்யா:
நபி ﷺ அவர்கள் காலத்தில் இவர்கள் இருக்கவில்லை.
தோற்றம்: ஹிஜ்ரி இரண்டாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தோன்றினார்கள்.
தோற்றுவித்தவன்: அல்-ஜஹ்ம் இப்னு ஸப்வான் அத்-திர்மிதி.
இவர்கள் அஹ்லுஸ்-ஸுன்னாவின் கருத்துக்களுக்கு மாற்றமாக எப்போது கருத்துச் சொன்னார்களோ! அப்போது உலமாக்கள் அவர்களை வழி சறுகிய கூட்டமாக அறிமுகம் செய்தார்கள்.
அவர்களின் கொள்கை: அல்-குர்ஆன் படைக்கப்பட்டது என வாதிடுதல், மறுமை நாளில் அல்லாஹ்வின் முகத்தை பார்க்கமுடியாது என்று கூறுகின்றனர், சுவனம் நரகம் நிரந்தரமில்லை அது அழியக்கூடியது என்று கூறுகின்றனர்.
இவர்களுக்கு மறுப்பாக உலமாக்கள் பல புத்தகங்களை எழுதியுள்ளார்கள். அவ்வாறு இமாம் அஹ்மத் பின் ஹம்பல் ரஹிமஹுல்லாஹ் அவர்களால் எழுதப்பட்ட ஒரு புத்தகம்; “அர்-ரத்து அஸ்-ஸனாதிகா வல்-ஜஹ்மிய்யா”
முஃதஸிலா:
நபி ﷺ அவர்கள் காலத்தில் இவர்கள் இருக்கவில்லை. அஹ்லுஸ் ஸுன்னாவினருக்கு மாற்றமாக நடந்தவர்கள்.
தோற்றம்: ஹிஜ்ரி இரண்டாம் நூற்றாண்டில் பஸராவில் தோன்றினார்கள்.
தோற்றுவித்தவர்கள்: வாஸில் இப்னு அதா, அம்ர் இப்னு உபைத்.
இவர்கள் அஹ்லுஸ்-ஸுன்னாவின் கருத்துக்களுக்கு மாற்றமாக எப்போது கருத்துச் சொன்னார்களோ! அப்போது உலமாக்கள் அவர்களை வழி சறுகிய கூட்டமாக அறிமுகம் செய்தார்கள்.
அவர்களின் கொள்கை: அஹ்லுஸ் ஸுன்னாக்களின் கொள்கை கோட்பாட்டிற்கு மாற்றமான பல கொள்கைகளைக் கொண்டவர்கள்; அல்-குர்ஆன் படைக்கப்பட்டுள்ளது,
பெயர்வரக் காரணம்: இமாம் ஹஸனுல் பஸரி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் ஒரு மாணவன் வாஸில் இப்னு அதா; அவன் இமாம் அவர்களின் சபையில் இருக்கும்போது, பெரும்பாவம் செய்யக்கூடிய ஒருவன் ஈமானின் எல்லையிலிருந்து வெளியேற மாட்டான். மாற்றமாக அவன் முஃமினாக இருப்பான். ஆனால், அவனின் ஈமானில் குறைபாடு இருக்கிறது. அவனின் ஈமான் பூரணமான ஈமான் அல்ல. என்று இமாம் அவர்கள் பெரும் பாவம் செய்தவனின் விடயத்தில் அகீதது அஹ்லுஸ்ஸுன்னா உலமாக்களின் கொள்கையை தெளிவுபடுத்தினார்கள். (அவன் ஒரு முஃமினாக இருக்கின்றான் மேலும் அவன் கெட்டவிடயம் செய்ததால் பாஸிக்காகவும் இருக்கின்றான்). இந்த நேரத்தில் இமாம் அவர்களின் மாணவனான வாஸில் இப்னு அதா; பெரும் பாவம் செய்யக்கூடியவன் இரண்டு நிலைகளில் ஒரு நிலையில் இருப்பான்; அவன் முஃமினாகவோ காபிராகவோ இருக்கமாட்டான். அவன் மறுமை நாளில் நரகத்தில் நிரந்தரமாக இருப்பான். என்று அஹ்லுஸ்ஸுன்னாவிற்கு மாற்றமான ஒரு கொள்கையைக் கூறிவிட்டு இமாம் அவர்களின் சபையை விட்டும் ஒதுங்கிச் சென்றான். எனவேதான் அவர்கள் முஃதஸிலாக்கள் (ஒதுங்கிச் சென்றவர்கள்) என்று அழைக்கப்படுகின்றார்கள்.
அஷாஇறா:
இமாம் அபுல் ஹஸன் அல்-அஷ்அரி ரஹிமஹுல்லாஹ் அவர்கள்தான் இந்த பிரிவின் ஆரம்ப கருத்தாவாக இருந்தார்கள். ஆனால் அவர்கள் பிற்பட்ட காலத்தில் இந்த கொள்கையிலிருந்து வெளியேறி இந்த கொள்கைக்கு எதிராக ஒரு புத்தகத்தையும் தொகுத்தார்கள். அஹ்லுஸ்ஸுன்னாவின் கொள்கையை ஏற்றுக்கொண்டு அஷாஇரா கொள்கையிலிருந்து வெளியேறுவதாக இமாம் அவர்கள் தனது மரணத்திற்கு முன் எழுதிவிட்டுச் சென்றார்கள்.
கொள்கை: அல்லாஹ்வின் திருநாமங்கள், பண்புகள் விடயத்தில் கருத்துக் கூறும்போது; அதில் (தஃவீல்கள், தக்ழீல்கள்) அஹ்லுஸ்ஸுன்னாக்களுக்கு மாற்றமான கருத்துக்களைக் கொடுத்து விளக்கம் கூறினார்கள்.
எனவே அஸ்மாஉஸ்ஸிபாவின் விடயத்தில் அவர்கள் அஹ்லுஸ்ஸுன்னாக்களுக்கு மாற்றமான கருத்துக்களைக் கூறி வழிதவறிச் சென்றார்கள்.
ஸூபிய்யா – மத்ஹபுத் தஸவ்வுப்:
தோற்றம்: ஹிஜ்ரி மூன்றாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இது ஒரு தனிப்பட்ட போக்காக ஆரம்பிக்கப்பட்டது.
கொள்கை: ஆரம்பத்தில் பத்தினித்தனம், அதிகமாக இபாதாக்கள் செய்யவேண்டும் என்ற போக்கில் சில தனி நபர்களால் கடைபிடிக்கப்பட்ட ஒன்றாக இருந்தது. பிறகு அதற்கு என்று சில வழிமுறைகளுடன் ஒரு கூட்டமாக தோற்றுவிக்கப்பட்டது. அது ஸூபிய்யாக்கள் அல்லது மத்ஹபுத் தஸவ்வுப் என்று அறிமுகப்படுத்தப்பட்டது.
ஸூபிய்யாக்களில் பல தரீக்காக்கள் –பல வழிமுறைகள் (பல கூட்டங்கள்) இருக்கின்றன. ஷாதுலிய்யாஹ், அன்-நக்ஷபந்தியா, அல்-மௌலவிய்யா, அல்-காதரிய்யா, அல்-அக்பரிய்யா.
இவர்கள் அஹ்லுஸ்ஸுன்னா வல்-ஜமாஅத்தினரின் கொள்கை கோட்பாட்டிற்கு மாற்றமாக நடந்தவர்கள்.
மேற்கூறப்பட்ட அவர்கள் அல்லாதவர்களும் பிழையான அகீதாவை; அவர்களுக்கு முன்னால் வழிகேட்டில் சென்ற அவர்களின் தலைவர்கள் மற்றும் இமாம்களை கண்மூடித்தனமாக எப்போது பின்பற்றினார்களோ அப்போது சரியான அகீதாவை விட்டும் வழி தவறிச் சென்றார்கள்.
எனவே இஸ்லாத்தில் பிரிவினைகள் தோன்றுவதற்கு முதல் காரணம் அத்-தக்லீத் (கண்மூடித்தனமான பின்பற்றல்) ஆகும்.
4 – அவ்லியாக்கள் – அல்லாஹ்வின் நல்லடியார்கள் விடயத்தில் எல்லை மீறிச் செல்லல்:
அல்லாஹ்வின் அவ்லியாக்கள் மற்றும் ஸாலிஹீன்களுக்கு கொடுக்க வேண்டிய அந்தஸ்துகளை; அந்த நல்லடியார்களுக்கு அவர்களின் அந்தஸ்துக்களை விட அதிகமாக எல்லை மீறி கொடுப்பதனால் ஏற்படும் வழிகேடு ஆகும்.
❖ அவ்லியாக்கள் மற்றும் ஸாலிஹீன்கள் விடயத்தில் எல்லை மீறல், மேலும் அல்லாஹ்வையன்றி வேறு எவராலும் செய்ய இயலாத பயன் தரும் காரியம் எதனையும் செய்யவும், தீமையைத் தடுத்து நிறுத்தவும் கூடிய ஆற்றல் அவர்களிடமும் உண்டென்று நம்பி அவர்களை அவர்களின் தரத்திற்கும் மேலாக உயர்த்துதல்,
❖ இன்னும் தங்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவும், பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்படவும் என அல்லாஹ்வுக்கும் தங்களுக்கும் இடையில் அந்த அவ்லியாக்கள் மற்றும் ஸாலிஹீன்களை இடைத் தரகர்களாக ஆக்கிக் கொண்டு, அல்லாஹ்வுக்குப் பதிலாக அவர்களை வழிப்படுதல்,
❖ அவர்களின் கப்ர்-மண்ணறைகளுக்குச் சென்று காணிக்கைகளைச் சமர்ப்பித்தல், பிராணிகளை அறுத்துப் பழியிடுதல்,
❖ அங்கு துஆ பிரார்த்தனையில் ஈடுபடுதல், அவர்களிடம் பாதுகாப்பும் உதவியும் தேடி மன்றாடுதல்,
மேற்கூறப்பட்ட காரியங்கள்தான் நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் சமூகத்தினரால் அவ்லியாக்கள் மற்றும் ஸாலிஹீன்கள் விடயத்தில் எல்லை மீறி மேற்கொள்ளப்பட்டது.
இக்காரியங்களை விட்டு விட வேண்டாம் என்று அவர்கள் தங்களின் சகாக்களை வேண்டிக் கொண்டனர். அவர்களின் இந்நிலைப்பாட்டை மேலான அல்லாஹுத்தஆலா இவ்வாறு குறிப்பிடுகின்றான்:
وَ قَالُوْا لَا تَذَرُنَّ اٰلِهَتَكُمْ وَلَا تَذَرُنَّ وَدًّا وَّلَا سُوَاعًا ۙ وَّ لَا يَغُوْثَ وَيَعُوْقَ وَنَسْرًا ۚ
“மேலும், அவர்கள் (தம் சமூகத்தாரிடம்) உங்களுடைய (வணக்கத்திற்குரிய) தெய்வங்களை நிச்சயமாக நீங்கள் விட்டுவிடாதீர்கள், வத்து ஸுவாஉ, எகூஸ், யஊக், நஸ்ர், (ஆகிய விக்கிரகங்)களையும் நிச்சயமாக நீங்கள் விட்டுவிடாதீர்கள்” என்றும் கூறினார்கள். (ஸூரத்து நூஹ்: 23)
எப்போது அவ்லியாக்கள் மற்றும் ஸாலிஹீன்கள் விடயத்தில் எல்லை மீறிச் சென்றார்களோ அப்போது அது அவர்களை வணங்ககுகின்ற நிலைக்கு கொண்டு சென்றது.
எனவே அவ்லியாக்கள் மற்றும் ஸாலிஹீன்கள் விடயத்தில் அஹ்லுஸ்ஸுன்னாக்கள் எவ்வாறு நடந்து கொண்டார்களோ அவ்வாறு நடந்துகொள்வதுதான் முஸ்லிமான ஒவ்வொரு ஆண் மற்றும் பெண்ணின் மீதும் கடமையாகும்.
இன்-ஷா அல்லாஹ் தொடரும்..
எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.