﷽
வழங்குபவர்: அபூ அப்துர் ரஹ்மான் நவ்வாஸ் அல்-ஹிந்தி (ஹபிழஹுல்லாஹ்)
ஜுமுஆ உரை: அரபு (தமிழ் மொழியில் தொகுக்கப்பட்டுள்ளது)
அரபி மொழி உரை: கீழே இணைக்கப்பட்டுள்ளது
பதிவு செய்யப்பட்ட திகதி: 24 ரமலான் 1447
நிகழ்த்தப்பட்ட இடம்: ஜாமிஉல் ஸாஹிர் மஸ்ஜித், ஸாஹிர் பகுதி, வாடி அமத், உள் ஹள்ரமௌத் (யெமன்)
நிச்சயமாகப் புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது
நிச்சயமாகப் புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது. நாம் அவனைப் புகழ்கிறோம்; அவனிடமே உதவி தேடுகிறோம்; அவனிடமே பாவமன்னிப்புக் கோருகிறோம். நமது ஆத்மாக்களின் தீமைகளிலிருந்தும், நமது தீய செயல்களிலிருந்தும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறோம். அல்லாஹ் யாரை நேர்வழியில் செலுத்துகிறானோ அவரை எவரும் வழிகெடுக்க முடியாது. அவன் யாரை வழிகேட்டில் விட்டுவிடுகிறானோ அவரை எவரும் நேர்வழியில் செலுத்த முடியாது. வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்றும், முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் தூதரும் ஆவார்கள் என்றும் நான் சாட்சி கூறுகிறேன்.
“ஓ மனிதர்களே! உங்களைப் படைத்த உங்கள் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்…” (அல்குர்ஆன் 4:1). “ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வை அஞ்ச வேண்டிய முறைப்படி அஞ்சுங்கள்; மேலும், முஸ்லிம்களாக அன்றி மரணிக்காதீர்கள்” (அல்குர்ஆன் 3:102). “ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; நேர்மையான பேச்சையே பேசுங்கள். அவன் உங்கள் செயல்களைச் சீர்ப்படுத்துவான்; உங்கள் பாவங்களை மன்னிப்பான்” (அல்குர்ஆன் 33:70-71).
செய்திகளில் உண்மையானது அல்லாஹ்வின் வேதமாகும். வழிகாட்டல்களில் சிறந்தது முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்களின் வழிகாட்டலாகும். காரியங்களில் மிகக் கெட்டது மார்க்கத்தில் புதிதாக உருவாக்கப்பட்டவை ஆகும். புதிதாக உருவாக்கப்பட்டவை அனைத்தும் பித்அத் ஆகும்; ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும்; ஒவ்வொரு வழிகேடும் நரகிற்கு இட்டுச் செல்லும்.
இஸ்லாத்தின் தூண்களும் ஸகாத்தும்
அல்லாஹ்வின் அடியார்களே! நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் முஆத் பின் ஜபல் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களை யெமனுக்கு அனுப்பியபோது கூறினார்கள்: “நிச்சயமாக நீங்கள் வேதக்காரர்களிடம் செல்கிறீர்கள். எனவே, நீங்கள் அவர்களை முதலில் அழைப்பது ‘அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை, முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அல்லாஹ்வின் தூதர்’ என்ற சாட்சியத்தின் பக்கமாக இருக்கட்டும்”. மற்றொரு அறிவிப்பில், “அல்லாஹ்வை ஒருமைப்படுத்த (தவ்ஹீத்) அழையுங்கள்” என்றுள்ளது.
அவர்கள் இதற்குக் கட்டுப்பட்டால், “அல்லாஹ் ஒரு நாளில் ஐந்து வேளைத் தொழுகைகளைக் கடமையாக்கியுள்ளான் என்பதை அவர்களுக்கு அறிவியுங்கள்.” அதற்கும் அவர்கள் கட்டுப்பட்டால், “செல்வந்தர்களிடமிருந்து பெற்று ஏழைகளுக்கு வழங்கப்பட வேண்டிய ஸகாத்தை அல்லாஹ் கடமையாக்கியுள்ளான் என்பதை அவர்களுக்கு அறிவியுங்கள்” என்று கூறினார்கள். மேலும், மக்களின் உயர்தரமான செல்வங்களைத் தேர்ந்தெடுத்து எடுப்பதைத் தவிர்க்குமாறும், பாதிக்கப்பட்டவனின் துஆவிற்கு அஞ்சுமாறும் நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் எச்சரித்தார்கள்.
இஸ்லாம் ஐந்து தூண்களின் மீது கட்டமைக்கப்பட்டுள்ளது:
1 – கலிமா (சாட்சி கூறுதல்)
2 – தொழுகையை நிலைநாட்டல்
3 – ஸகாத் வழங்குதல்
4 – ரமலான் நோன்பு நோற்றல்
5 – ஹஜ் செய்தல்.
குர்ஆனில் பல இடங்களில் தொழுகையோடு இணைந்தே ஸகாத் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால்தான் அபூபக்கர் (சித்தீக்) ரழியல்லாஹு அன்ஹு அவர்கள், “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்களிடம் கொடுத்து வந்த ஒரு ஒட்டகக் கயிற்றை ஸகாத்தாகத் தர மறுத்தாலும், அதற்காக நான் அவர்களுடன் போரிடுவேன்” என்று கூறினார்கள்.
ஸகாத்தின் அளவுகளும் (நிஸாப்) சட்டங்களும்
அல்லாஹ் கூறுகிறான்: “அவர்களுடைய செல்வங்களிலிருந்து ஸகாத்தை எடுப்பீராக! அது அவர்களைத் தூய்மைப்படுத்தும்…” (அல்குர்ஆன் 9:103).
1 – வெள்ளி: 5 அவ்கியாக்கள் (200 திர்ஹம்கள்) ஒருவரிடம் இருந்தால் ஸகாத் கடமை. இது தற்கால அளவில் 595 கிராம் வெள்ளியாகும்.
2 – தங்கம்: 20 தீனார்கள் என்பது இதன் அளவு. இது தற்கால அளவில் 85 கிராம் தங்கமாகும்.
3 – விகிதம்: நிஸாப் அளவை எட்டிய செல்வத்தில் 2.5% (நாற்பதில் ஒன்று) ஸகாத்தாக வழங்கப்பட வேண்டும்.
4 – ஆண்டு நிறைவு: செல்வம் நிஸாப் அளவை அடைந்து ஒரு முழு வருடம் பூர்த்தியாக வேண்டும். சிறுவர்கள் அல்லது மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் செல்வத்திலும் ஸகாத் கடமையாகும்; அவர்களின் பொறுப்பாளர்கள் அதை நிறைவேற்ற வேண்டும்.
5 – ஆபரணங்கள்: பெண்கள் அணியும் தங்க ஆபரணங்கள் நிஸாப் அளவை எட்டினால், அதற்கும் ஸகாத் கொடுப்பதே அறிஞர்களின் வலுவான கருத்தாகும்.
ஸகாத் கொடுக்காதவர்களுக்கு எச்சரிக்கை
யார் ஸகாத் கொடுக்க மறுக்கிறார்களோ, அவர்களுக்குக் கியாமத் நாளில் அவர்களது செல்வமே நெருப்புத் தட்டுகளாக மாற்றப்பட்டு விலாவிலும் முதுகிலும் சூடு போடப்படும். நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: “யாருக்கு அல்லாஹ் செல்வத்தைக் கொடுத்து அவன் அதன் ஸகாத்தை நிறைவேற்றவில்லையோ, கியாமத் நாளில் அச்செல்வம் இரு கருப்புப் புள்ளிகளுடைய ஒரு நச்சுப் பாம்பாக (ஷுஜாஉன் அக்ரஃ) மாற்றப்பட்டு அவன் கழுத்தைச் சுற்றிக்கொள்ளும். பின் அது அவனது தாடைகளைக் கவ்விக்கொண்டு ‘நானே உனது செல்வம், நானே உனது புதையல்’ என்று கூறும்”.
விவசாயம் மற்றும் கால்நடைகளின் ஸகாத்
• கால்நடைகள்: 5 ஒட்டகங்களுக்கு ஒரு ஆடு, 40 ஆடுகளுக்கு ஒரு ஆடு, 30 மாடுகளுக்கு ஒரு கன்று என ஸகாத் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
• விவசாயம்: தானியங்கள் மற்றும் பழங்கள் 5 அவ்சக் (சுமார் 300 ஸாவு – 650 கிலோவுக்கு மேல்) எட்டும்போது ஸகாத் கடமை.
• • மழை நீர் அல்லது ஊற்று நீரால் விளைந்தால் 10% (உஷுர்) ஸகாத்.
• • இயந்திரங்கள் மூலம் நீர் பாய்ச்சி விளைவித்தால் 5% (நிஸ்ஃபுல் உஷுர்) ஸகாத். விவசாய விளைச்சலுக்கு ஆண்டு நிறைவு நிபந்தனையல்ல; அறுவடை நாளிலேயே அதைக் கொடுத்துவிட வேண்டும் (அல்குர்ஆன் 6:141).
ஸகாத் பெறத் தகுதியுடையவர்கள்
அல்லாஹ் எட்டுப் பிரிவினரை ஸகாத் பெறத் தகுதியுடையவர்களாகக் குறிப்பிடுகிறான்: ஏழைகள் (ஃபக்கீர்), வறியவர்கள் (மிஸ்கீன்), ஸகாத் வசூலிப்பவர்கள், உள்ளங்கள் ஈர்க்கப்பட வேண்டியவர்கள்(புதிதாக இஸ்லாத்தை ஏற்றோர்), அடிமை விடுதலைக்காக, கடன் பட்டவர்கள், அல்லாஹ்வின் பாதையில் (ஜிஹாத்), மற்றும் வழிப்போக்கர்கள். ஸகாத்தை முதலில் நெருங்கிய உறவினர்களில் உள்ள ஏழைகளுக்கு வழங்குவது சிறந்தது. இது ஸகாத்தாகவும் உறவைப் பேணிய நன்மையாகவும் அமையும். ஆனால், எவருடைய வாழ்வாதாரத்திற்கு நீங்கள் பொறுப்பாளிகளோ (தாய், தந்தை, பிள்ளைகள்) அவர்களுக்கு ஸகாத் வழங்கக் கூடாது.
ஸகாத்துல் ஃபித்ர்
ரமலான் மாத முடிவில் வழங்கப்படுவது ஸகாத்துல் ஃபித்ர் ஆகும். இது ஒவ்வொரு முஸ்லிமான சுதந்திரமானவர், அடிமை, ஆண், பெண், சிறியவர், பெரியவர் என அனைவர் மீதும் கடமையாக்கப்பட்டுள்ளது.
• நோக்கம்: நோன்பாளி நோன்பின் போது செய்த வீணான பேச்சுகள் மற்றும் தவறுகளிலிருந்து அவரைத் தூய்மைப்படுத்தவும், ஏழைகளுக்கு உணவாகவும் இது கடமையாக்கப்பட்டது.
• அளவு: ஒரு ‘ஸாவு’ அளவு உணவுப் பொருள் (பேரீச்சம்பழம், கோதுமை, அரிசி போன்றவை). ஒரு ஸாவு என்பது தோராயமாக 3 கிலோ ஆகும்.
• நேரம்: பெருநாள் தொழுகைக்கு முன்பாக இதை வழங்கிவிட வேண்டும். தொழுகைக்குப் பின் வழங்கினால் அது சாதாரண தர்மமாகவே கருதப்படும்.
அல்லாஹ் நமது ரமலான் அமல்களை ஏற்றுக்கொள்வானாக! நமது நாட்டிலும் முஸ்லிம் நாடுகளிலும் அமைதியையும் பாதுகாப்பையும் நிலவச் செய்வானாக!
எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.


