• Home
  • மீலாதுன் நபி
  • நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களின் பிறந்தநாளை கொண்டாடினார்களா?

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களின் பிறந்தநாளை கொண்டாடினார்களா?

Facebook
Twitter
Telegram
WhatsApp

بسم الله الرحمن الرحيم

அஷ்-ஷெய்க் இப்னு உதைமீன் ரஹிமஹுல்லாஹ் அவர்களிடம் கீழ்க்காணும் கேழ்வி கேட்கப்பட்டது.

தமிழ் மொழி மூலம்: அபூ ஜுலைபீப் ஸாஜித் இப்னு (சுப்யான்) நஸ்ருதீன் அஸ்ஸெய்லானி வப்பகஹுல்லாஹ்

கேள்வி:

சிறப்புக்குரிய ஷெய்க் அவர்களே!

இன்று சிலர்கள் கொண்டாடுவதை போன்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களின் பிறந்தநாளை கொண்டாடக் கூடியவர்களாக இருந்தார்களா, இல்லையா?

இந்த விடயம் சம்மந்தமாக உங்களிடம் உங்களுடைய வழிகாட்டல்களையும், உபதேசங்களையும் எதிர்பார்க்கின்றோம். அல்லாஹ் உங்களுக்கு நற்கூலி வழங்குவானாக.

பதில்:

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவர்களுடைய பிறந்தநாளை  கொண்டாடக்கூடியவராக இருக்கவில்லை. அபூ பக்கர், உமர், உஸ்மான், அலீ இவர்களும், இவர்கள் அல்லாத ஏனைய சங்கைமிக்க ஸஹாபாக்கள் ரழியல்லாஹு அன்ஹும் எவருமே நபியவர்களின் பிறந்தநாளைக் கொண்டாடவில்லை.

மேலும் அவர்களை நல்ல முறையில் பின்பற்றி வந்த தாபியீன்கள், அவர்களுக்கு பிறகு வந்த தபஉத் தாபியீன்கள் மற்றும் முஸ்லிம்களுடைய இமாம்கள் எவருமே நபியவர்களின் பிறந்தநாளை கொண்டாடக் கூடியவர்களாக இருக்க வில்லை.

மாறாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறந்தநாளை கொண்டாடும் வழிமுறை; நான்காவது நூற்றாண்டின் இடைப்பட்ட காலங்களில் உருவாக்கப்பட்டது ஆகும். அதாவது ஹிஜ்ரத்துக்கு பின் முந்நூறு வருடங்கள் கழிந்த பிறகாகும்.

எந்த ஒரு சந்தேகமும் இன்றி இந்தக் கொண்டாட்டத்தை கொண்டாடுவதற்கு  அவர்களைத் தூண்டியது; அல்லாஹ்வின் நாட்டப்படி அது ரசூலுல்லாஹி அலைஹிஸ் ஸலாது வஸ்ஸலாம் அவர்களின் மேலிருந்த அவர்களின் நேசமாகும்.

ஆனால் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மேல் நேசம் இருக்கின்றது என்பது; அவரைப் பின்பற்றுவதன் மூலம்தான் யதார்த்தமாக தெளிவாகின்றது.

எவரெல்லாம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அதிகமாக நேசிப்பவராக இருக்கின்றாரோ! அவர் எந்த சந்தேகமும் இன்றி நபியவர்களை சரியான முறையில் பின்பற்றக் கூடியவராகவும் இருப்பார்.

எவர் நபியவர்களை சரியான முறையில் பின்பற்றக் கூடியவராக இருக்கின்றாரோ! அதுதான் அவர் நபியவர்கள் மேல் அதிக நேசம் வைத்திருக்கின்றார் என்பதற்கான மிக மேலான ஆதாரமாகும்.

என்றாலும் பித்அத்வாதிகள்; ஸுன்னாவைப் பின்பற்றி அதைப் பற்றிப்பிடிக்கும் அஹ்லுஸ் ஸுன்னாவினரை நோக்கி; “இவர்கள் ரஸூலுல்லாஹி அலைஹிஸ் ஸலாத்து வஸ்ஸலாம் அவர்களை நேசிப்பவர்களாக இல்லை” என்று கூறுகின்றார்கள்.

நாங்கள் அவர்களிடம் கேட்கின்றோம்; எங்களில் யார் ரஸூலுல்லாஹி அலைஹிஸ்-ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் மீது மிக நேசத்துக்குரியவர்களாக இருப்பதற்கு மிக சமீபமானவர்கள்?

நபியவர்கள் கொண்டுவந்த இந்த மார்க்கத்தில் இல்லாத ஒன்றை மார்க்கமாக்கிக் கொண்டவர்களா?

அல்லது நபியவர்களுடைய நேர்வழியையும், வழிகாட்டலையும் எடுத்து நடந்து போதுமாக்கிக் கொண்டவர்களா?

அதற்கான பதில்:

எந்த ஒரு சந்தேகமும் இன்றி நிச்சயமாக அவர்கள் இரண்டாவது சாரார்களாகத்தான் இருப்பார்கள்.

நிச்சயமாக நபியவர்களுடைய நேர்வழியையும், வழிகாட்டலையும் எடுத்து நடந்து போதுமாக்கிக் கொண்டு; அதனை பலமாக பற்றிப் பிடித்துக் கொள்ளக்கூடியவன்; ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கொண்டுவந்த மார்க்கத்தில்  அவர்கள் மார்க்கமாக்கி வைக்காதவற்றை பித்அத்களாக உருவாக்கி கொள்கின்றவனை விட மிக அதிகமாக ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மேல் நேசம் வைத்தவனாக இருக்கின்றான். 

மேலும், அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் மார்க்கம் என்று உள்ள (பித்அத்கள்) நூதனமானவைகள்; ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது குறை சுமத்தக் கூடியவைகளாக இருக்கின்றன.

அந்த பித்அத்களை மேற்கொள்ளும் பித்அத்வாதி சொல்வது எப்படி உள்ளது என்றால்;

இந்த பித்அத் மார்க்கமான ஒன்று என்பதை ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அறியாதவர்களாக இருந்தார்கள். அல்லது அந்த நூதனமான செயல் மார்க்கமான ஒன்று என்பதை நபியவர்கள் அறிந்திருந்தார்கள்; ஆனால் அவரோ அவருடைய சமூகத்திற்கு அதை எத்திவைக்காமல் மறைத்து விட்டார்கள்.

இவ்விரண்டு விடயங்களும் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய விடயத்தில் தெட்டத் தெளிவாக குறை கூறுவதாகவே அமைகின்றது.

ஒரு பித்அத்வாதி அவன் மேற்கொள்ளும் பித்அத்தான செயல்கள் எத்தகைய மோசமான விஷயங்களை கொண்டிருக்கிறது என்பதை நன்கு அவன் கவனம் செலுத்திப் பார்த்தால்; அவ்விடயங்களில் இருந்து அவன் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருவான். மேலும் எந்த ஒரு உபதேசம் செய்யக்கூடியவனும் இன்றி அவன் உடனடியாக நபியவர்களின் ஸுன்னா- வழிமுறையின் பக்கம் திரும்பிவிடுவான்.

மேலே கேட்கப்பட்ட கேள்விகளுக்கான சுருக்கமான பதில்கள் பின்வருமாறு:

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களுடைய பிறந்தநாளை கொண்டாடக்கூடியவராக ஒருபோதும் இருக்க வில்லை.

மேலும் நேர்வழி பெற்ற (குலபாக்கள்) தலைவர்கள், மேலும் ஸஹாபாக்கள், தாபியீன்கள், அவர்களைத் தொடர்ந்து வந்த தபஉத் தாபியீன்கள், முஸ்லிம்களுடைய இமாம்கள்; எவருமே நபியவர்களின் பிறந்த நாளை கொண்டாடக்கூடியவர்களாக இருக்க வில்லை.

மாறாக இந்த மீலாத் விழாக் கொண்டாட்டம் ஆரம்பமாக சில ஆட்சியாளர்களால் அரங்கேற்றப் பட்டதாகும். எனவே அதனைத்தான் மக்கள் இன்றுவரை செய்துவருகின்றார்கள்.

என்றாலும் இந்த இஸ்லாமிய சமூகத்தின் இளைஞர்களுக்கிடையே இருக்கும் அபிவிரித்தியான, அவர்களுடைய விழிப்புணர்வு; இந்த பித்அத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்று நான் அல்லாஹ்வின் உதவியைக் கொண்டு உறுதியாக நம்புகின்றேன்.

மேலும் எப்படி சில இஸ்லாமிய நாடுகளில்; அந்த மக்களுக்கு இதுகுறித்து அறிவுறுத்தப்பட்ட போது அதனை அறிந்து கொண்டார்களோ! உபதேசம் செய்யப்படும் போது உபதேசமாக எடுத்துக் கொண்டார்களோ! மேலும் இந்த பித்அத்தான காரியத்தின் பக்கம் திரும்பவில்லையோ! அதுபோன்றே நமக்கு மத்தியிலும் இந்த விடயம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து போய் விடும்.

இப்படியான கொண்டாட்டங்களை மேற்கொள்ளும் பித்அத்வாதி சில நேரம் இப்படிக் கூறலாம்:

என்னைப் பொறுத்தவரை நீங்கள் சொல்வதைப் போல் நான் புதிதாக ஒரு செயலை செய்யவில்லை. நானோ  (இந்த நாளன்று) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலவாத்துச் சொல்கிறேன்; அவரைப் பற்றி நல்லவற்றை கூறுகிறேன்; அவரைப் புகழ்கிறேன்; இதயங்களில் அவருடைய நினைவை உயிர்ப்பிக்கின்றேன்.

நாங்கள் கூறுகின்றோம்; இது நல்ல விடயம்தான்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ஸலவாத்துத் சொல்வதும்; அவரை உரியமுறையில் புகழ்வதும்; அதேபோன்று அவருடைய நினைவை உயிர்பிப்பதும் புகழுக்குரிய செயல்களாகும்.

ஆனால் அல்லாஹ் ஸுப்ஹானஹூ வதஆலாவும் அவனுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும்; நீங்கள் செய்யும் இந்த முறையில் அல்லாமல் நபியவர்களைப் பற்றிய நினைவையும், நேசத்தையும் உண்டாக்குவதற்குரிய பல சரியான வழிமுறைகளைக் காட்டித்தந்துள்ளார்கள்.

ஒவ்வொரு (இபாதத்) வணக்கத்தின் போதும் நாம் ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நினைவு கூறுகின்றோம்.

ஒவ்வொரு வணக்கத்தின் போதும் ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நினைவுகூர்வதைத்தான் நாம் செய்யக் கூடியவர்களாக இருக்க வேண்டும்.

ஏனெனில் அனைத்து வணக்க வழிபாடுகளும் இரண்டு காரியங்களின் மீது நிறுவப்பட்டுள்ளது;

1 அல்லாஹ்வுக்காக மாத்திரம் செய்கின்றேன் என்ற உளத்தூய்மை.

2 ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பின்பற்றிச் செய்தல்.

நீங்கள் ஒரு இபாதத்தில் ஈடுபடும் போது; அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை பின்பற்றி செய்கின்றேன் என்று உணரும் போது; அது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நினைவு கூறுவதாக அமைகிறது.

மேலும் இதே போன்றுதான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை ஒவ்வொரு நாளும் காலையிலும் மாலையிலும் ஐந்து முறைகள் மிக மேலான இடங்களில் (அதான்) பாங்கின் போது நபியவர்களை நினைவு கூறுகின்றோம். அவரை மேன்மைப் படுத்துகின்றோம்.

எல்லா பாங்கு (அதான்)களிலும் சொல்லுகின்றோம்;

أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ

நிச்சயமாக முஹம்மத் அல்லாஹ்வுடைய தூதராவார் என்று நான் சாட்சி கூறுகின்றேன்.

இது அவருடைய நினைவை உயிர்பிக்கக் கூடியதோடு;  மேலும் உயர்ந்த சப்தங்களிலே  ஒலி பெருக்கிகளின் மூலம் அவரை மேன்மை படுத்துவதாகவும் இருக்கின்றது.

மேலும் நாம் இரண்டாவது தடவையாக இகாமத்தின் போது தொழுகைக்காக எழுந்து நிற்கும் போதும் கூறுகின்றோம்:

أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ

நிச்சயமாக முஹம்மத் அல்லாஹ்வுடைய தூதராவார் என்று நான் சாட்சி கூறுகின்றேன்.

இந்த நினைவு கூறல்களை விட எந்த நினைவு கூறல்கள் மிக மகத்தானது?

அதே போன்றுதான் வுழூ செய்த பின்னரும் கூறுகின்றோம்;

أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا الله، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُ الله وَرَسُولُهُ

உண்மையாக வணங்கி வழிபட தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை என்றும், மேலும் முஹம்மதாகின்றவர் அல்லாஹ்வுடைய அடியானாகவும் தூதராகவும் இருக்கின்றார் என்றும் நான் சாட்சி கூறுகின்றேன்.

அதே போன்றுதான் தொழுகையில் தஷஹ்ஹுதிலும் கூறுகின்றோம்;

 أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا الله، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُه وَرَسُولُهُ

எங்களுடைய எல்லா சூழ்நிலைகளிலும், மேலும் எங்களுடைய எல்லா இபாதத்துக்களிலும் நாம் ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நினைவு கூறிக் கொண்டுதான் இருக்கின்றோம்.

ஏனெனில், நிச்சயமாக இபாதத் என்பது மனத்தூய்மையையும் பின்பற்றுவதையும் கொண்டதாகும்.

அகிலத்தாரின் இரட்சகனுக்காக இஹ்லாஸ் – உளத்தூய்மையும்

அகிலத்தாரின் இரட்சகனுடைய தூதரை பின்பற்றுவதும் ஆகும்.

எனவே  நபியவர்களுடைய நினைவை உயிர்ப்பிப்பதற்காக அல்லாஹ்வுடைய மார்கத்தில்; அதில் இல்லாத ஒரு விடயத்தை புதிதாக உண்டுபன்ன வேண்டிய தேவை கிடையாது.

பின்னர், சில உலமாக்கள் கூறுவதைப் போன்று;

ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய நினைவை இந்த – மீலாத் விழா – நாள் இரவில் உயிர்ப்பிப்பது; இந்த இரவுடனே ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய நினைவு மறந்து போய் விடுவதையும்; மேலும் (இந்த கொண்டாட்டங்களை அரங்கேற்றுகின்ற) இவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய நினைவை உயிர்பிப்பதற்கு இந்த – மீலாத் விழா –  நாள் இரவு வர வேண்டும் என்று காத்துக் கொண்டு இருப்பதையும் அவசியப்படுத்துகின்றது.

அல்லாஹ்வுத்தஆலா கூறுகின்றான்;

وَٱلسَّـٰبِقُونَ ٱلۡأَوَّلُونَ مِنَ ٱلۡمُهَـٰجِرِینَ وَٱلۡأَنصَارِ وَٱلَّذِینَ ٱتَّبَعُوهُم بِإِحۡسَـٰنࣲ

முஹாஜிர்களிலும் அன்ஸார்களிலும் எவர்கள் (இஸ்லாமில்) முதலாவதாக முந்திக் (கொண்டு நம்பிக்கை) கொண்டார்களோ அவர்களையும், நற்செயல்களில் அழகிய முறையில் (மெய்யாகவே) இவர்களைப் பின்பற்றியவர்களையும் பற்றி அல்லாஹ் திருப்தியடைகிறான். இவர்களும் அல்லாஹ்வைப் பற்றி திருப்தியடைகின்றனர்.

இந்த அளவுகோலை கவனிக்க வேண்டும்;

وَٱلَّذِینَ ٱتَّبَعُوهُم بِإِحۡسَـٰنࣲ

நற்செயல்களில் அழகிய முறையில் (மெய்யாகவே) இவர்களைப் பின்பற்றியவர்களையும்

இஹ்ஸான்- அழகிய முறை என்பது;

உண்மையாகவே அவர்கள் செய்ததை செய்து, விட்டதை விட்டு அவர்களுடைய அடிச்சவடுகளை பின்பற்றுவதாகும்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகின்றார்கள்:

فَعَلَيْكُمْ بِسُنَّتِي وَسُنَّةِ الْخُلَفَاءِ الْمَهْدِيِّينَ الرَّاشِدِينَ، تَمَسَّكُوا بِهَا، وَعَضُّوا عَلَيْهَا بِالنَّوَاجِذِ ، وَإِيَّاكُمْ وَمُحْدَثَاتِ الْأُمُورِ ؛ فَإِنَّ كُلَّ مُحْدَثَةٍ بِدْعَةٌ، وَكُلَّ بِدْعَةٍ ضَلَالَةٌ.

எனது வழிமுறையையும் எனது வழிமுறையை கடவாய் பற்களால் கடித்துகொண்ட, நேர்வழிபெற்ற நேர்மையான கலீபாக்களின் வழிமுறையையும் பிடித்துக் கொள்ளுங்கள். (மார்க்கத்தில்) புதுமையான விஷயங்களை விட்டும் உங்களை எச்சரிக்கிறேன். ஒவ்வொரு புதுமையும் வழிகேடாகும்.

எனவே உலகின் அனைத்துப் பாகங்களிலும் உள்ள நமது முஸ்லீம் சகோதரர்கள் இந்த விஷயத்தை பற்றி ஆராய்ந்து பார்ப்பதற்காகவும், நன்கு தெளிவு பெருவதற்கும்; ஆராய்ந்து சிந்தனை செய்து பாருங்கள். மேலும் தங்களுக்குள் கேட்டுப்பாருங்கள்.

நாங்களா மிகச் சிறந்தவர்கள் அல்லது ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய ஸஹாபாக்களா?!

நலவாக இருந்தால் அவர்கள் எங்களுக்கு முன்பு அதை செய்திருப்பார்கள்.

அல்லது நாங்கள் நபியவர்களுடைய ஸஹாபாக்களை விட வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவதில் மிக அதிக ஆசையுடன் இருக்கின்றோமா?

இந்த அனைத்துக்குமான பதில்; இல்லை என்பதாகும்.

இந்த அனைத்துக்குமான பதில் இல்லை என்றால்;

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய பிறந்தநாளை கொண்டாடுவது குறித்த பதிலும் இல்லை என்றே இருக்கட்டும்.

மேலும் அவர்கள் அறிந்து கொள்ளட்டும்! அவர்கள் இந்த மீலாத் விழா கொண்டாட்டத்தை அல்லாஹ் ஸுப்ஹானஹூ வதஆலாவுக்காகவும்  ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பின்பற்ற வேண்டும் என்பதற்காகவும் விட்டு விடுவார்களாயின்; அவர்கள் ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவள்களை நினைவு கூறுகின்றோம் என்று வாதாடிக்கொண்டு; இந்தக் கொண்டாட்டங்களில் ஈடுபட்ட போது, பெற்றுக் கொள்ளாத; அல்லாஹ்வினதும் அவனுடைய தூதரினதும் ஈமானையும், அவர்களைப் பற்றிய நேசத்தையும் அவர்களுடைய உள்ளங்களில் அல்லாஹ் ஏற்படுத்துவான்.  

✽✽ பதாவா நூருன் அலத் தர்ப் ஒலி நாடா: 280

✽✽✽✽✽✽✽✽

எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.

அண்மைய இடுகைகள் Recent Posts

அண்மைய ஜுமுஆக்கள்

பிரிவுகள் (Catagories)