﷽
புத்தகம்: معنى لا إله إلا الله – (மஅனா லா இலாஹ இல்லல்லாஹ்) லா இலாஹ இல்லல்லாஹ் என்பதன் விளக்கம்
ஆசிரியர்: ஷெய்குல் இஸ்லாம் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் ரஹிமஹுல்லாஹ்
விளக்கவுரை: அபூ அப்திர் ரஹ்மான் நவ்வாஸ் அல் ஹிந்தி அஸ் ஸெய்லானி ஹபிழஹுல்லாஹ்
தொகுப்பு: அபூ ஆஇஷா அப்துல்லாஹ் அல் ஹிந்தி வப்பகஹுல்லாஹ்
பாடம்: 02
அல் இமாம் அல் முஜத்திது முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் ரஹிமஹுல்லாஹ் அவர்களின் தஃவாவின் தனித்துவமும்; இமாமவர்கள் எழுதிய புத்தகங்களின் முக்கியத்துவமும்:
இமாம் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தவ்ஹீதை பரப்புவதற்கு கடுமையாக பாடுபட்டார்கள். இமாம் அவர்கள் மேற்கொண்ட தவ்ஹீது அடிப்படையிலான தஃவா என்பது (PJ) பிஜே அல்லது ஜமாதுத் தவ்ஹீது போன்ற வழிகெட்ட கூட்டங்களைப் போல் அல்லாமல் உண்மையான தவ்ஹீதை பரப்புவதாக இருந்தது.
இமாமவர்கள் சஊதி அரேபியாவில் ஷிர்க் நிறைந்திருந்த காலகட்டத்தில் தவ்ஹீதை புதுப்பித்து; தவ்ஹீதின் பக்கம் மக்களை அழைத்து; தவ்ஹீதை நிலைநாட்டினார்கள். தவ்ஹீது இல்லாத வணக்க வழிபாடுகள் ஏற்றுக்கொள்ளப்படாது என்பதை மக்களுக்கு விளக்கினார்கள். அதன் பிறகு இந்த தஃவா சஊதியிலிருந்து இந்தியா இலங்கை உட்பட உலகம் முழுக்க பரவியது.
சமகாலத்தில் வாழ்ந்து மறைந்த அஷ்ஷெய்க் இப்னு பாஸ், அஷ்ஷெய்க் இப்னு உஸைமீன் ரஹிமஹுமுல்லாஹ் போன்றவர்களும்; அதேபோல் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் அஷ்ஷெய்க் ஸாலிஹ் அல் ஃபவ்ஸான், அஷ்ஷெய்க் அப்துல் அஸீஸ் ஆலுஷ்ஷெய்க், அஷ்ஷெய்க் அப்துல் முஹ்ஸின் அல் அப்பாத் உட்பட மற்ற உலமாக்களும் (ஹபிழஹுமுல்லாஹ்) இமாம் அவர்களின் புத்தகங்களை பாடங்களாக நடத்தி வருகின்றனர். ஏனெனில் இமாம் அவர்களின் புத்தகங்கள் அந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்த புத்தகங்களாக இருக்கின்றன.
இமாமவர்கள் அவர்கள் எழுதிய ஸலாஸத்துல் உஸூல், உஸூலுஸ் ஸித்தா, கஷ்புஷ் ஷுபுஹாத், கிதாபுத் தவ்ஹீத், மஸாயிலுல் ஜாஹிலியா போன்ற சிறிய புத்தகங்கள் மக்களுக்கு மிகப் பெரிய பலன் தரக்கூடியதாக இருப்பதால் பெரிய உலமாக்கள் இந்த புத்தகங்களுக்கு நீண்ட விளக்க உரை கொடுத்துள்ளார்கள்.
ரப்பானி என்பவர் யார்?
உலமாக்கள் முஃப்தி என்ற உயர்ந்த நிலையை அடைந்தாலும் கூட மக்கள் புரிந்து கொள்ள சிரமமாக இருக்கும் பெரிய புத்தகங்களை பாடமாக எடுப்பதைவிட மக்களுக்கு பயன் தரக்கூடிய, மக்களின் அறிவுக்கு தகுந்த புத்தகங்களை கற்றுக் கொடுக்க வேண்டும். இதுதான் ரப்பானியுடைய பண்பாகும்.
ரப்பானியுடைய பண்பை குறித்து இமாம் புகாரி ரஹிமஹுல்லாஹ் கூறும் பொழுது:
الرَّبَّانِيُّ الَّذِي يُرَبِّي النَّاسَ بِصِغَارِ الْعِلْمِ قَبْلَ كِبَارِهِ
யாரெல்லாம் மக்களுக்கு பெரிய விஷயங்களை கற்றுக் கொடுப்பதற்கு முன்பாக முக்கியத்துவம் வாய்ந்த சிறிய விஷயங்களை கற்றுக் கொடுக்கிறாரோ அவர்தான் ரப்பானி ஆவார். (நூல்: ஸஹீஹுல் புகாரி, பாபுல் இல்ம்.)
அல்லாஹ் ஸுபஹானஹு வ தஆலா கூறுகிறான்:
وَلَٰكِن كُونُواْ رَبَّٰنِيِّـۧنَ
நீங்கள் ரப்பானியூன்களாக இருந்து கொள்ளுங்கள். (குர்ஆன் 3: 79)
ஆகவே, ரப்பானி என்பவர் மக்களுக்கு கல்வியை கற்றுக் கொடுப்பவர் ஆவார். (PJ) பிஜே, யஹ்யா சில்மி போன்று பெரிய விஷயங்களை முன்வைத்து மக்களை குழப்பாமல்; மக்களுக்கு தேவையான அடிப்படை கல்வியை கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக் கொடுக்க வேண்டும்.
சத்தியத்தை மறைக்க கூடாது! பொய்யர்களிடமிருந்து கல்வியை எடுக்கவும் கூடாது!
உலமாக்கள் உடைய ஃபத்வாவை மறைத்து வைக்க கூடாது. உண்மையை சொல்வதால் பிரச்சினை வராது மாறாக உண்மையை மறைப்பதால் தான் பிரச்சனை ஏற்படும். அதேபோன்று உண்மையை சொல்வதால் பிரச்சினை வரும் என்ற காரணத்தினால் உண்மையை மறைக்க கூடாது. உண்மையை சொல்வதனால் சிலருக்கு எரிச்சல் வரத்தான் செய்யும், ஆனால் அதற்காக சத்தியத்தை மறைத்து வைக்க கூடாது. ஏனெனில் இது அல்லாஹ்வுடைய தீன்.
இமாம் இப்னு ஸீரீன் ரஹிமஹுல்லாஹ் கூறினார்கள்:
إِنَّ هَذَا العِلْمَ دِيْنٌ؛ فَانْظُرُواْ عَمَّنْ تَأخُذُوْنَ دِيْنَكُمْ (أخرجه مسلم في مقدمة صحيحه)
நிச்சயமாக இந்த இல்ம் (மார்க்க அறிவு) என்பது தீன் ஆகும். நீங்கள் யாரிடம் இருந்து உங்களது தீனை எடுக்கிறீர்கள் என்பதை பார்த்துக்கொள்ளுங்கள். (நூல்: ஸஹீஹ் முஸ்லிம் முன்னுரை)
எனவே பொய்யர்களிடமிருந்து கல்வியை எடுக்க முடியாது.
இன்-ஷா அல்லாஹ்! தொடரும்..
எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.