லா இலாஹ இல்லல்லாஹ் என்பதன் விளக்கம்-03

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on telegram
Telegram
Share on whatsapp
WhatsApp

புத்தகம்: معنى لا إله إلا الله – (மஅனா லா இலாஹ இல்லல்லாஹ்) லா இலாஹ இல்லல்லாஹ் என்பதன் விளக்கம்

ஆசிரியர்: ஷெய்குல் இஸ்லாம் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் ரஹிமஹுல்லாஹ்

விளக்கவுரை: அபூ அப்திர் ரஹ்மான் நவ்வாஸ் அல் ஹிந்தி அஸ் ஸெய்லானி ஹபிழஹுல்லாஹ்

தொகுப்பு: அபூ ஆஇஷா அப்துல்லாஹ் அல் ஹிந்தி வப்பகஹுல்லாஹ்

பாடம்: 03

الحمد الله والصلاة والسلام على نبيه

سئل الشيخ عن معنى لا إله إلا الله، فأجاب بقوله. اعلم رحمك الله أنّ هذه الكلمة هي الفارقة بين الكفر والإسلام

ஷெய்குல் இஸ்லாம் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் ரஹிமஹுல்லாஹ் அவர்களிடம் – லா இலாஹ இல்லல்லாஹ் – என்பதன் பொருள் என்ன? என்று கேட்கப்பட்டது.

அதற்கு இமாம் அவர்கள், “அல்லாஹ் உனக்கு (ரஹ்மத்) கருனை செய்வானாக, அறிந்துகொள்! இது ஒரு வார்த்தையாகும்; இந்த வார்தையானது (குஃப்ரு) நிராகரிப்பிற்கும் , இஸ்லாத்திற்கு மத்தியில் பிரிவினையை ஏற்படுத்தும் ஒரு வார்தையாகும்” என்று கூறினார்கள்.

எனவே, இஸ்லாத்திற்கும் (குஃப்ரு) நிராகரிப்பிற்கும் பிரிவை தெளிவுபடுத்தும் ஒரு வார்தைதான் ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ என்பதாகும்.

‘லா இலாஹ இல்லல்லாஹ்’ என்பதன் பொருள் என்ன?

உண்மையாக வணக்கத்திற்கு தகுதி வாய்ந்தவன் அல்லாஹ் ஒருவன் மட்டுமே வணக்கத்தில் அவனுக்கு இணை ஏதும் இல்லை என்பதுதான் சரியான பொருளாகும்.

لا (லா) – இல்லை

إله  (இலாஹ) – உண்மையாக வணக்கத்திற்கு தகுதி வாய்ந்த நாயன்

إلا  (இல்லா) – தவிர

الله – அல்லாஹ்

لا إله (லா இலாஹ) – உண்மையாக வணக்கத்திற்கு தகுதி வாய்ந்த நாயன் யாரும் இல்லை

إلا الله  (இல்லல்லாஹ்) – அல்லாஹ்வைத் தவிர

இதில் إله (இலாஹ்) என்பதற்கு ‘வணக்கத்திற்கு தகுதியானவன்’  என்றுதான் அர்த்தம். ஆனால் ‘உண்மையாக’ என்ற வார்த்தையை கூடுதலாக சேர்த்து ‘உண்மையாக வணக்கத்திற்கு தகுதியானவன்’ என்று கூறப்படுவதற்கான காரணம், அல்லாஹ் ஸுபஹானஹு வ தஆலா கூறுகிறான்:

ذٰ لِكَ بِاَنَّ اللّٰهَ هُوَ الْحَـقُّ وَاَنَّ مَا يَدْعُوْنَ مِنْ دُوْنِهٖ هُوَ الْبَاطِلُ وَاَنَّ اللّٰهَ هُوَ الْعَلِىُّ الْكَبِيْرُ‏

இதன் காரணமாவது: நிச்சயமாக அல்லாஹ் அவன் தான் உண்மையானவன் (சத்தியமானவன்). நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வையன்றி (இறைவனென) அழைப்பவை அனைத்தும் பொய்யானவைதான். நிச்சயமாக அல்லாஹ்தான் உயர்ந்தவன், (மேலானவன்,) மகா பெரியவன். (அல்குர்ஆன் 22: 62)

உண்மையான (சத்தியமான) வணக்க வழிபாடுகளுக்கு தகுதியானவன் அல்லாஹ் என்று குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ளதால், மேற்கண்ட குர்ஆன் வசனத்தை ஆதாரமாகக் கொண்டு   إله (இலாஹ) என்பதற்கு உண்மையாக வணக்கத்திற்கு தகுதியானவன் என்ற விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று அல்லாஹ்வை அன்றி வணங்கப்படுபவை அனைத்தும் பொய்யானவை; அதற்கு செய்யப்படும் வணக்க வழிபாடுகளும் போலியானவை ஆகும் என்று அல்லாஹ் தெளிவாக மேற்கண்ட குர்ஆன் வசனத்தில் குறிப்பிட்டுள்ளான்.

எனவே, “உண்மையாக வணக்கத்திற்கு தகுதியானவன்” என்பதே إله (இலாஹ) என்பதற்கான சரியான விளக்கமாகும்.

கலிமா என்பதற்கு இங்கு சொல் என்று பொருள் இல்லை மாறாக வசனம் என்று பொருளாகும்.

எனவே; لا إله إلا الله (#லாஇலாஹஇல்லல்லாஹ்) என்ற இந்த வசனம் முஸ்லிம்களையும் காஃபிர்களையும் பிரித்து வைக்க கூடியதாக இருக்கிறது.

அதேபோன்றுதான் இந்த வசனமானது இஸ்லாத்தையும் ஏனைய அனைத்து மதங்களையும், கொள்கைகளையும் பிரித்துக் காட்டக் கூடியதாகவும் இருக்கிறது. இந்த வசனத்தின் மூலமாகத்தான் எங்களுக்கும் அவர்களுக்கும் இடையே பிரிவு வருகின்றது.

இந்த வசனத்தை வைத்து தான் மனிதர்களை நாங்கள் நேசிக்கவும் செய்கிறோம்; மனிதர்களை வெறுக்கவும் செய்கின்றோம்.

யாரெல்லாம் இந்த வசனத்துடைய பொருளுக்கு வழிப்பட்டு நடந்து அதை நிலைநாட்டுகிறாரோ அவர்களை நேசிப்பது கட்டாயக் கடமையாகும்.

அதேபோன்று யாரெல்லாம் இந்த வசனத்தின் பொருளுக்கு எதிராக செயல்படுகிறார்களோ அவர்களை வெறுப்பதும் எங்கள் மீது கட்டாயக் கடமையாகும்.

ஏனெனில் இந்த வசனம் எங்களையும் அவர்களையும் பிரிக்கின்றது. இத்தகைய வசனத்தைத் தான் அனைத்து இறைத்தூதர்களும் கொண்டு வந்தார்கள். அல்லாஹ் ஸுபஹானஹு வ தஆலா கூறுகிறான்:

وَلَـقَدْ بَعَثْنَا فِىْ كُلِّ اُمَّةٍ رَّسُوْلًا اَنِ اعْبُدُوا اللّٰهَ وَاجْتَنِبُوا الطَّاغُوْتَ‌ۚ

(பூமியின் பல பாகங்களிலும் வசித்திருந்த) ஒவ்வொரு வகுப்பினருக்கும் நிச்சயமாக நாம் தூதரை அனுப்பியிருக்கிறோம். (அத்தூதர்கள் அவர்களை நோக்கி) ‘‘அல்லாஹ் ஒருவனை மட்டுமே வணங்குங்கள். (அல்லாஹ் அல்லாத மற்ற போலியான வணக்க வழிபாடுகள் மற்றும் கடவுள்களான) தாகூத்தை விட்டும்  விலகிக் கொள்ளுங்கள் என்(று கூறிச் சென்)றார்கள்.  (அல்குர்ஆன் 16: 36)

இதுதான் நபிமார்களுடைய, ரசூல்மார்களுடைய அழைப்பாக இருந்தது. அனைத்து நபிமார்களும் ரசூல்மார்களும் ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ என்ற வசனத்தின் பக்கம்தான் மக்களை அழைத்தார்கள். அதேபோன்று நமது இறுதித் தூதரான முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய அழைப்பும் இதுவாகத்தான் இருந்தது.

முஹம்மது நபி ﷺ அவர்கள் ‘லாஇலாஹாஇல்லல்லாஹ்’ ஏற்றுக்கொள்ளுமாறு மக்களை அழைத்தார்கள்.

அன்றைய குரைஷி முஷ்ரிகீன்களிடம் முஹம்மது ﷺ கூறினார்கள்:

قُولُوا : لَا إِلَهَ إِلَّا اللَّهُ ؛ تُفْلِحُوا

லா இலாஹா இல்லல்லாஹ் என்று கூறுங்கள் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். (முஸ்னத் அஹ்மது 16023)

எனவே ‘லா இலாஹா இல்லல்லாஹ்’ என்ற வசனத்தை உறுதியுடன் நம்பிக்கை கொண்டு கூறினால் அல்லாஹ் உங்களுக்கு வெற்றி அளிப்பான் என்று நபி ﷺ அவர்கள் கூறிய போது, ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ என்பதுடைய சரியான விளக்கத்தை அறிந்திருந்த குரைஷி முஷ்ரிகீன்கள் அதை சொல்ல மறுத்துவிட்டார்கள்.

‘லா இலாஹ இல்லல்லாஹ்’ என்பதுடைய சரியான விளக்கத்தை அறியாத முஸ்லிம்கள் இன்று; அல்லாஹ் அல்லாதவைகளுக்கு நேர்ச்சை செய்கின்றார்கள்; ஜின்களுக்கு குர்பானி கொடுக்கின்றார்கள், கப்ருகளை வைத்து  வணங்குகிறார்கள். ஆனால் இது போன்ற காரியங்கள் ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ என்ற வசனத்திற்கு முரணானது என்பதை அறிந்ததால் தான் இத்தகைய செயல்பாடுகளை செய்துவந்த அன்றைய காலத்து குரைஷி முஷ்ரிகீன்கள் ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ என்பதை ஏற்க மறுத்தார்கள்.

எனவேதான், சிலைகளை வணங்க வேண்டாம் கப்ருகளில் இருக்கும் நல்லடியார்களை வணங்க வேண்டாம் என்று நபி ﷺ கூறிய போது, குரைஷி முஷ்ரிகீன்கள் அதை ஏற்க மறுத்து, “நாம் சிலைகளை வணங்குவது எம்மீதுள்ள கடமை. ஏனெனில் நாம் பாவசாலிகளாக இருக்கின்றோம். அல்லாஹ்வை எங்களால் இந்நிலையில் நேரடியாக நெருங்க முடியாது மாறாக அந்த சிலைகளை வைத்து தான் நாங்கள் அல்லாஹ்வை நெருங்க முடியும்” என்று அவர்கள் கூறினார்கள். இது தான் ஷிர்க்.

இந்த ஷிர்க் -ஐ தான் இன்று, முஸ்லிம் என்ற பெயரை வைத்துக்கொண்ட பலர் செய்கிறார்கள்.

லா இலாஹ இல்லல்லாஹ் என்ற வசனத்தை முன்வைத்து முஹம்மது நபி ﷺ  மக்களுக்கு மத்தியில் பிரிவினையை ஏற்படுத்தினார்கள்

நபி ﷺ அவர்கள் கூறினார்கள்:

مُحَمَّدٌ ﷺ فَرْقٌ بَيْنَ النَّاسِ  صحيح البخاري، الجزء رقم :9، الصفحة رقم:93 (7281)

முஹம்மது ﷺ மக்களுக்கு மத்தியில் பிரிவினை ஏற்படுத்தினார் (நூல்: புகாரி 7281)

முஹம்மது நபி ﷺ மக்களை மார்க்கத்தின் அடிப்படையில் முஸ்லிம்கள் என்றும் காஃபிர்கள் என்றும் பிரித்து வைத்தார்கள். தவ்ஹீதை அடிப்படையாகக் கொண்டு இஸ்லாத்தையும் ஏனைய பிற மதங்களையும் முஹம்மது நபி ﷺ பிரித்து காட்டியதால் தான்

مُحَمَّدٌ ﷺ فَرْقٌ بَيْنَ النَّاسِ

“முஹம்மது நபி ﷺ மக்களுக்கு மத்தியில் பிரிவினை ஏற்படுத்தினார்” என்று கூறப்பட்டது.

எனவே சத்தியத்தில் இருப்பவர்கள் யார் அசத்தியத்தில் இருப்பவர்கள் யார் என்பதை பிரித்து தெளிவுபடுத்த வந்தவர் தான் முஹம்மது நபி ﷺ அவர்கள்.

அதேபோன்று சத்தியம் வரும்பொழுது நிச்சயமாக பிரிவினை ஏற்பட்டே தீரும் என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். அனைவரையும் ஒன்று சேர்த்துக் கொண்டு இது தான் என்று தீன் (மார்க்கம்) என்று செயல்பட முடியாது. இவ்வாறு செயல்படுவது தீன் (மார்க்கம்) ஆகாது. யாரெல்லாம் அந்த தீனை உறுதியாக படித்து, கடைப்பிடித்து வருகின்றார்களோ அப்பொழுதுதான் அந்த மார்க்கம் (தீன்) அவர்களை ஒன்று சேர்க்கும்.

ஒருவர் கிழக்குப் பக்கமும் மற்றொருவர் மேற்கு பக்கமும் சென்றால் எவ்வாறு பிரிவு ஏற்படுமோ அதேபோன்றுதான் நினைத்ததை எல்லாம் தீன் (மார்க்கம்) என்று செய்யும் பொழுது அங்கு ஒற்றுமை ஏற்படாது மாறாக பிரிவுதான் ஏற்படும்.

எனவே சத்தியம் மட்டும் தான் மக்களை ஒன்று சேர்க்கும். எப்பொழுது மக்கள் சத்தியத்தை உறுதியாகப் பற்றிப் பிடித்து; அதை எடுத்து அமல் செய்கிறாரோ அப்பொழுதுதான் அவர்களுக்கு மத்தியில் ஒற்றுமை ஏற்படும். அந்த சத்தியமானது சத்தியத்தில் உள்ளவர்களையும்; போலியான விஷயங்களை எடுத்து நடப்பவர்களையும் தெளிவாக பிரித்துக் காட்டும்.

சத்தியம் வந்தால் எப்படியாவது பிரிவினை  வரத்தான் செய்யும். அதனால் தான் நபி ﷺ அவர்களின் காலத்தில் வாழ்ந்த குறைஷிகளின் தந்தைக்கும் மகனுக்கும்; தாய்க்கும் பிள்ளைக்கும்; மேலும் உறவினர்களுக்கு மத்தியிலும் பிரிவினை வந்தது. இந்தப் பிரிவினை தீன் (மார்க்கம்)  அடிப்படையில் ஏற்பட்டதாகும். சத்தியத்தின் அடிப்படையிலான ஏற்பட்ட பிரிவின் விளைவு உறவினர்கள் உறவினர்களுக்கு எதிராக போர் தொடுத்தார்கள். எனவே சத்தியம் வந்தால் எப்படியாவது மக்களுக்கு மத்தியில் பிரிவினை நிச்சயமாக வரும். ஆகவே பிரிவினை ஏற்பட்டாலும் அதைப் பொருட்படுத்தாமல் நாம் சத்தியத்தை ஏற்று நடக்க வேண்டும். இதற்கு முரணாக அசத்தியத்தில் இருக்கும் அனைவரையும் சேர்த்துக்கொண்டு தீனை நிலைநாட்ட முடியாது.

அல்லாஹ் ஸுப்ஹானஹூ வ‌ தஆலா குர்ஆனை ‘ஃபுர்கான்’ என்று கூறுகிறான். அதேபோன்று இந்த தீனுல் இஸ்லாத்தின் மற்றொரு பெயர் தீனுல் ஃபுர்கான் ஆகும்.

உயர்ந்தோனாகிய அல்லாஹ் கூறுகிறான்:

يَٰٓيٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِنْ تَتَّقُوا اللّٰهَ يَجْعَلْ لَّـكُمْ فُرْقَانًا وَّيُكَفِّرْ عَنْكُمْ سَيِّاٰتِكُمْ وَيَغْفِرْ لَـكُمْ‌ؕ وَ اللّٰهُ ذُو الْفَضْلِ الْعَظِيْمِ‏

நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயப்படுவீர்களாயின், அவன் உங்களுக்குக் ஃபுர்கானை (சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்து அறியக் கூடிய அறிவை) வழங்குவான். மேலும், உங்கள் பாவங்களைப் போக்கி உங்களை மன்னித்து விடுவான். ஏனென்றால், அல்லாஹ் மிக மகத்தான அருளுடையவன் ஆவான். (அல்குர்ஆன் 8: 29)

ஃபுர்கான் الفرقان என்ற சொல் ஃபரக فَرَقَ அல்லது ஃபர்ரக فرّق என்ற அடிப்படை சொல்லிலிருந்து வருகிறது. ஃபரக فَرَقَ என்பதற்கு பிரிவினை ஏற்படுத்துதல் என்பது பொருளாகும். எனவே அல்குர்ஆன் என்பது சத்தியத்திற்கும் அசத்தியத்திற்குமிடையே பிரிவினையை ஏற்படுத்தி சத்தியத்தை தெளிவுபடுத்தும்  அல்லாஹ்வுடைய பேச்சாகும். முஹம்மது நபி ﷺ அவர்களின் வழிமுறையும் இவ்வாறு தான் இருந்தது. பிரிவினையை ஏற்படுத்திய ஒரு நபிதான் முஹம்மது நபி ﷺ என்பதை ஆதாரத்துடன் இதற்கு முன்னர் நாம் பார்த்தோம்.

எனவே லாஇலாஹ இல்லல்லாஹ் என்பது சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்து வைத்து சத்தியத்தின் அடிப்படையில் மக்களை ஒற்றுமைப்படுத்த கூடியதாக இருக்கிறது. சத்தியத்தை படித்து அமல் செய்வதன் மூலமாக மட்டும்தான் மக்களை ஒற்றுமை படுத்த முடியும். அவ்வாறு இல்லாமல் வேறு எந்த வழியில் முயற்சித்தாலும் மக்களை ஒற்றுமைப் படுத்த முடியாது. ஏனெனில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக யோசிக்க கூடியவர்களாக இருக்கின்றார்கள்.

அல்லாஹ் ஸுபஹானஹு வ தஆலா கூறுகிறான்:

أَاَفَلَا يَتَدَبَّرُوْنَ الْقُرْاٰنَ‌ؕ وَلَوْ كَانَ مِنْ عِنْدِ غَيْرِ اللّٰهِ لَوَجَدُوْا فِيْهِ اخْتِلَافًا كَثِيْرًا‏

இந்த குர்ஆனை அவர்கள் ஆழ்ந்து கவனிக்க வேண்டாமா? இது அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால் இதில் பல (தவறுகளையும்) முரண்பாடுகளை(யும்) அவர்கள் கண்டிருப்பார்கள். (அல்குர்ஆன் 4: 82)

எனவே அல்லாஹ்வை விடுத்து மக்களுடைய சிந்தனைகளை முன்வைத்தால் நிச்சயமாக அது பிரிவினையை தான் ஏற்படுத்தும். அல்லாஹ் மட்டும் தான் உள்ளங்களை ஒன்று சேர்ப்பவன், சுப்ஹானஹூ வதஆலா.

இன்-ஷா அல்லாஹ்! தொடரும்..

எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.

அண்மைய இடுகைகள் Recent Posts

அண்மைய ஜுமுஆக்கள்

பிரிவுகள் (Catagories)