ஷரஹ் – அல்-மபாதி உல்-முபீதா பித்-தவ்ஹீதி வல்-பிக்ஹி வல்-அகீதா [02]

Facebook
Twitter
Telegram
WhatsApp

புத்தகத்தின் பெயர்:அல்-மபாதி உல்-முபீதா பித்-தவ்ஹீதி வல்-பிக்ஹி வல்-அகீதா

ஆசிரியர்:அஷ்ஷெய்ஹ் அபூ அப்திர்-ரஹ்மான் யஹ்யா இப்னு அலி அல்ஹஜூரி (ஹபிழஹுல்லாஹ்)

தமிழாக்கம்: தவ்ஹீத்,  பிக்ஹ், அகீதா ஆகிய துறைகளில் பயன்தரும்  அடிப்படைகள்

தமிழ் மொழி மூலம் விளக்க உரை:அஷ்-ஷெய்க் அபூ அப்திர்-ரஹ்மான் நாவ்வாஸ் அல்-ஹிந்தி அஸ்-ஸெய்லானி (ஹபிழஹுல்லாஹ்)

தமிழாக்க தொகுப்பு: அபூ அப்ஸர்

தமிழ் மொழி மூலமாக இப்புத்தகத்திற்கான விளக்கவுரையை இலங்கையின் ஹெடன் பிரதேசத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட  எமது கண்ணியத்திற்குறிய சகோதரர் அஷ்ஷெய்ஹ் அபூ அப்திர்-ரஹ்மான் நவ்வாஸ் அல்-ஹிந்தி அஸ்-ஸெய்லானி (ஹபிழஹுல்லாஹ்)  அவர்கள் மிக அழகாகவும், சிறப்பாகவும் ஸலபுஸ்ஸாலிஹீன்களின் விளக்கத்தின் அடிப்படையில் செய்துள்ளார்கள். அந்த உரையின் தமிழ் தொகுப்பே இந்த ஆக்கம்.

பாடம்: 01

முகவுரை தொடர் – 02

بسم الله الرحمن الرحيم

அறிவின் சிறப்பு:

ஷெய்குல் இஸ்லாம் இப்னு தைமிய்யா ரஹிமஹுல்லாஹ் இந்த அறிவின் சிறப்பை பற்றி பின்வருமாறு கூறுகின்றார்:

“அல்லாஹ் எதற்காக மனிதனை படைத்துள்ளானோ அந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு; அவனுக்கு ஒரு நாளைக்கு அவனுடைய சாப்பாடு அல்லது குடிபாணம் ஒரு நேரம் அல்லது இரு நேரம் எடுத்தால் போதுமானது. ஆனால் இந்த அறிவு அவனுக்கு முழு நேரமும் தேவையாக உள்ளது. காரணம் என்னவென்றால்; அவன் சாப்பாடு இல்லாவிட்டால் மரணிப்பான். ஆனால் நபி ﷺ அவர்கள் கொண்டுவந்த இந்த ஹிதாயத்தை பெற்றுக் கொள்ளும் அறிவைப் பெறாமல் ஒருவன் மரணித்தால்; அவனுடைய முடிவு அதாபு-வேதனையாகத்தான் இருக்கும்.”

அனஸ் இப்னு மாலிக் رضي الله عنه. அவர்கள் அறிவிக்கின்றார்கள்; நபி ﷺ அவர்கள் கூறினார்கள்:

அறிவை தேடிப் பெற்றுக் கொள்வது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும். (இப்னு மாஜா)

எனவே இந்த மேலான அறிவை தேடிக் கற்றுக் கொள்வதே புத்திசாலித்தனம் ஆகும்.

ஒவ்வொரு மனிதனதும் சிறப்பும் இந்த அறிவைத் தேடிக் கற்றுக் கொண்டு அதில் வாழ்வதிலேயே உள்ளது.

ஸஹாபாக்கள் இந்த அறிவை பெற்று அதில் வாழ்ந்ததனாலேயே மக்களிலேயே மிகச் சிறந்த சமுதாயம் என வரணிக்கப்பட்டார்கள்.

நபி அவர்கள் வரணித்த மூன்று சிறப்பான சமூகங்கள்:

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் رضي الله عنه. அவர்கள் கூறினார்கள்; நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: ⟪”மக்களிலே சிறந்தவர்கள் என் சமூகத்தினர்-(ஸஹாபாக்கள்) ஆவர்; பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள்-(தாபிஈன்கள்). பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள் (தபஉத்தாபிஈன்கள்).”⟫ (புஹாரி, முஸ்லிம்)

இந்த சிறப்புக்குறிய காரணம்:

 • அவர்கள் பெற்ற அறிவு
 • அவர்கள் பெற்ற பிக்ஹ்-விளக்கம்
 • அவர்கள் அதை கொண்டு செய்த அமல்.

மேலும் அபூ ஹுரைரா رضي الله عنه. அறிவித்தார்கள்; ⟪(நபி ﷺ அவர்களிடம்) ‘இறைத்தூதர் அவர்களே! மக்களில் மிகவும் கண்ணியத்திற்குரியவர் யார்?’ என்று கேட்கப்பட்டது. நபி  ﷺ அவர்கள், ‘மனிதர்களிலேயே (அல்லாஹ்வுக்கு) அதிகமாக அஞ்சுபவர் தாம்’ என்று பதிலளித்தார்கள். அதற்கு அவர்கள், ‘நாங்கள் தங்களிடம் இதைப் பற்றிக் கேட்கவில்லை’ என்று கூறினர். உடனே நபி(ஸல்) அவர்கள், அப்படியென்றால் அல்லாஹ்வின் உற்ற நண்பர் (இப்ராஹீம்) உடைய மகனான இறைத்தூதர் (இஸ்ஹாக்) உடைய மகனான இறைத்தூதர் யூசுஃப் அவர்கள் தாம்!’ என்று பதிலளித்தார்கள். அதற்கு மக்கள், ‘நாங்கள் தங்களிடம் அதைப் பற்றிக் கேட்கவில்லை’ என்று கூறினர். உடனே நபி(ஸல்) அவர்கள், ‘அரபுகளின் (பரம்பரைகளான) சுரங்கங்களைப் பற்றியா கேட்கிறீர்கள்? அவர்களில் அறியாமைக் காலத்தில் (இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்பு) சிறந்தவர்களாயிருந்தவர்கள் தாம் இஸ்லாத்தை ஏற்ற பின்பும் சிறந்தவர்களாயிருப்பார்கள்; அவர்கள் மார்க்க ஞானத்தைப் பெற்றால்’ என்று பதிலளித்தார்கள்.⟫ (புஹாரி, முஸ்லிம்)

எனவே ஒருவர் எந்த பரம்பரையில் இருந்து வந்தாலும் அவரின் சிறப்பு அவர் பெறுகின்ற அறிவிலேயே தங்கியுள்ளது.

இந்த விடயத்தை இன்னும் ஒரு ஹதீஸை கொண்டு விளங்குவோம்!

முஆவியா رضي الله عنه அவர்கள் தமது உரையில் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் கூறினார்கள்: ⟪அல்லாஹ் ‘எவருக்கு நன்மையை நாடுகிறானோ அவரை மார்க்கத்தில் விளக்கம் பெற்றவராக ஆக்கி விடுகிறான்..⟫ (புஹாரி, முஸ்லிம்)

யாருக்கு அல்லாஹ் நலவை நடுகின்றானோ அவருக்கு இந்த தீனின்-(மார்க்கத்தின்) விளக்கத்தை கொடுப்பான்.

எனவே எவர் அல்லாஹ்வின் பார்வையில் சிறந்த ஒரு மனிதனாக வாழ விரும்புகின்றாரோ அவர் இந்த மார்க்கத்தின் அறிவைப் பெற முயற்சிக்க வேண்டும்.

பாதுகாக்கப்பட்ட இல்ம்-(அறிவு)

இந்த அறிவை அல்லாஹ் மறுமை நாள் வரை பாதுகாப்பதாக வாக்களித்துள்ளான்.

மேலான அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்:

اِنَّا نَحْنُ نَزَّلْنَا الذِّكْرَ وَاِنَّا لَهٗ لَحٰـفِظُوْنَ

நிச்சயமாக நாம்தான் (திக்ரு என்னும் இவ்)வேதத்தை (உம்மீது) இறக்கி வைத்தோம், நிச்சயமாக நாமே அதனை பாதுகாப்பவர்கள். (ஸூரத்துல் ஹிஜ்ர்: 9)

எனவே! இந்த அறிவைப் (தீனை) பாதுகாப்பது என்பது அல்லாஹுத்தஆலாவின் வாக்காகும்.

மேலும் முஆவியா رضي الله عنه தம் சொற்பொழிவில் குறிப்பிட்டார்கள் நபி ﷺ அவர்கள் கூறினார்கள்:  ⟪“இந்தச் சமுதாயத்தில் ஒருசாரார் அல்லாஹ்வின் கட்டளையைப் பேணுவதில் நிலைத்தே இருப்பார்கள். மறுமை நாள் வரும் வரை; அவர்களுக்கு மாறு செய்பவர்களால் எந்தத் தீங்கும் செய்து விட முடியாது”⟫ (புஹாரி, முஸ்லிம்)

 • எனவே! அந்த சத்தியத்தில் இருப்பவர்களை எதிர்க்கக்கின்றவர்களும் புறக்கனிக்கின்றவர்களும் இருப்பார்கள்.
 • சத்தியத்தில் இருக்கும் கூட்டத்தாருக்கு ஒத்துழைப்பு கிடைக்காமல் போகும். மேலும் அவர்கள் எதிர்க்கப்படுவார்கள்.
 • யார் எல்லாம் இந்த சத்தியத்தில் இருப்பவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்காமல் புறக்கனித்து நடக்கின்றார்களோ! மேலும் அவர்களை எதிர்த்து முறணாக நடக்கின்றார்களோ! அவர்களால் இந்தக் கூட்டத்தாருக்கு எந்த ஒரு கெடுதியையும் செய்துவிட முடியாது.
 • இந்தக் கூட்டம் அல்லாஹ்வின் ஒத்துழைப்புப் பெற்ற கூட்டம். யார் எதிர்த்தாலும், யார் புறக்கனித்தாலும் அல்லாஹ்வின் ஒத்துழைப்பு இவர்களுக்கு இருந்து கொண்டே இருக்கும். இது அல்லாஹ்வின் வாக்காகும்.
 • எனவே! அல்லாஹுத்தஆலா மறுமை நாள் வரையில் இந்த தீனை பாதுகாப்பான். அந்த தீன் ஒருபோதும் இந்த பூமியில் இல்லாமல் இருக்காது. அது எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். எனவேதான் முஸ்லிம்கள் மகிழ்ச்சி அடைய வேண்டும்.
 • அல்லாஹுத்தஆலா இந்த அறிவை அந்த அறிவை சுமப்பவர்களைக் கொண்டு பாதுகாப்பான்.
 • மேலும் இந்த அறிவை கற்றுக் கொடுப்பவர்களும் அதனை நிலை நாட்டுபவர்களும் இருந்தே வருவார்கள். என்பதுதான் இந்த ஹதீஸின் விளக்கமாகும்.

உலமாக்களின் பொறுப்பு:

அஹ்லுஸ்ஸுன்னா வல்-ஜமாஅ;  ஸுன்னாவைச் சேர்ந்த உலமாக்கள், மன்ஹஜுஸ் ஸலப்; ஸலபுஸ்ஸாலிஹீன்களின் வழிமுறையில் வரும் உலமாக்கள்,  அஹ்லுல் ஹதீஸ்; ரஸூலுல்லாஹ்வின் ஹதீஸை நிலை நாட்டும் உலமாக்கள்; பல வழிகளிலும் இந்த அறிவை மக்களிடம் கொண்டுபோய் சேர்த்துள்ளார்கள்.

அறிவு என்பது மக்களுக்கு மிக அத்தியவசியமான ஒரு விடயமாகும். அதை மக்களுக்கு இலகுபடுத்தி மக்களிடம் சேர்ப்பது உலமாக்களின் கடமையாகும்.

மேலான அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்:

وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْاٰنَ لِلذِّكْرِ فَهَلْ مِنْ مُّدَّكِرٍ

நிச்சயமாக, இக் குர்ஆனை நன்கு  நினைவு படுத்திக் கொள்ளும் பொருட்டே எளிதாக்கி வைத்திருக்கின்றோம். எனவே (இதிலிருந்து) நல்லுணர்வு பெறுவோர் உண்டா? (ஸூரத்துல் கமர்:17)

அபூ ஹுரைரா رضي الله عنه அறிவித்தார்கள்; இறைத்தூதர்  ﷺ அவர்கள் கூறினார்கள்: ‘நிச்சயமாக இந்த மார்க்கம் எளிதானது. (புஹாரி)

இல்ம்-அறிவை தேடிக் கற்றுக் கொள்வது ஒவ்வொரு முஸ்லிமினதும் கடமை ஆகும்;

அந்த இல்மை-அறிவை மறைக்காமல் மக்களுக்கு மத்தியில் பரப்புவது உலமாக்களின் கடமை ஆகும்.

 • ரப்பானீ என்றால் என்ன?

மேலான அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: நீங்கள் ரப்பானிகளாக இருந்து கொள்ளுங்கள்;

மேலான அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்:

وَلٰـكِنْ كُوْنُوْا رَبَّانِيّٖنَ بِمَا كُنْتُمْ تُعَلِّمُوْنَ الْكِتٰبَ وَبِمَا كُنْتُمْ تَدْرُسُوْنَۙ‏

எனினும், (மனிதர்களிடம்) “நீங்கள் வேதத்தை (மற்றவர்களுக்கு)க் கற்றுக்கொடுத்துக்கொண்டும், கற்றுக்கொண்டும் இருப்பதன் காரணமாக, (அதிலுள்ளவாறு) ரப்பானீ-இரட்சக(ன் ஒருவனையே வணங்கி அவ)னைச் சார்ந்த அடியார்களாக ஆகிவிடுங்கள்” (என்றுதான் கூறுவார்கள்.) (ஸூரத்துல் ஆல இம்ரான்: 79)

ரப்பானீ என்பவர் யார்?

ரப்பானீ என்பவர் அறிவைப் பெற்று, அதை அமுல்படுத்தி, அதை மக்களுக்கு இலகுவாக எத்தி வைப்பவர். என்று இமாம் இப்னு கையிம் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் வரைவிலக்கணப்படுத்தியுள்ளார்கள்.

ரப்பானீ என்றால் மக்களுக்கு அடிப்படையான (சிறிய) அறிவுகளை கற்றுக் கொடுக்கின்றவர்.  என்று இமாம் புஹாரி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் மேற்கூறப்பட்ட வசனத்திற்கு விளக்கம் அளித்துள்ளார்கள்.

அதே போன்றுதான் நபி ﷺ அவர்கள் ஸஹாபாக்களுக்கு எதனை முதலில் அடிப்படையாக கற்றுக் கொடுக்க வேண்டுமோ அதனையே ஆரம்பமாக கற்றுக் கொடுத்தார்கள்.

ஜுந்துப் இப்னு அப்துல்லாஹ் அல்-பஜலி رضي الله عنه அறிவித்த ஹதீஸ்;⟪நாங்கள் நபி ﷺ அவர்களிடம் வாளிபர்களாக வந்திருந்தபோது; ரஸூலுல்லாஹி ﷺ அவர்கள் எங்களுக்கு முதலில் ஈமானை கற்றுத் தந்தார்; அதன் பிறகு எங்களுக்கு குர்ஆனை கற்றுத்தந்தார்; அதன் மூலமாக எங்கள் ஈமான் அதிகரித்தது.⟫ (இப்னு மாஜா)

அதேபோன்றுதான் அல்லாஹ் நபி ﷺ அவர்களுக்கு குர்ஆனை இறக்கி வைக்கும்போது ஸுரத்துல் அலக்கில் ஐந்து வசனங்களை ஆரம்பமாக இறக்கி வைத்தான். இரண்டாவதாக ஸூரத்துல் முத்தஸிரில் ஐந்து வசங்களை இறக்கி வைத்தான். இவ்வாறுதான் அல்லாஹ் தனது ரஸூலுக்கு வஹிமூலம் இந்த அறிவைக் படிப்படியாக கற்றுக் கொடுத்தான்.

நபி ﷺ அவர்கள் ஸஹாபாக்களுக்கு இந்த அறிவை படிப்படியாக கற்றுக் கொடுத்தார்கள்.

அவ்வாறே உலமாக்களும் இந்த வழிமுறையைக் கையாண்டு மக்களுக்கு இந்த இல்மை கற்றுக் கொடுத்தார்கள்; இன்னும் கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

அந்த முறையில் தொகுக்கப்பட்ட ஒரு புத்தகம்தான் இந்த புத்தகம்; அல்-மபாதி உல்-முபீதா பித்-தவ்ஹீதி வல்-பிக்ஹி வல்-அகீதா.

இப்புத்தகத்தை தொகுத்தவர்: அஷ்ஷெய்ல் அலி அல்-ஹஜூரி ஹபிழஹுல்லாஹ்.

இந்த புத்தகம் சிறு பிள்ளைகளுக்கு தவ்ஹீத், பிக்ஹ், அகீதா போன்ற அடிப்படைகளை ஆரம்பமாக கற்றுக் கொடுப்பதற்காக இமாம் அவர்களால் தொகுக்கப்பட்டது.

_____________________

இன்ஷா அல்லாஹ் தொடரும்..

எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.

அண்மைய இடுகைகள் Recent Posts

அண்மைய ஜுமுஆக்கள்

பிரிவுகள் (Catagories)