ஷரஹ் – லாமிய்யா இப்னு தைமிய்யா கவிதைத் தொகுப்பு – Notes-01

Facebook
Twitter
Telegram
WhatsApp

بسم الله الرحمن الرحيم

நூல்: ஷரஹ் லாமியா இப்னு தைமிய்யா

ஆசிரியர்: அஷ்-ஷெய்க் ஸெய்த் இப்னு முஹம்மத் இப்னு ஹாதி அல்-மத்கலி ரஹிமஹுல்லாஹ்

தமிழ் மொழி மூல விளக்க உரை: அபூ ஜுலைபீப் ஸாஜித் இப்னு (சுப்யான்) நஸ்ருதீன் அஸ்-ஸெய்லானி

தொகுப்பு: அபூ அப்ஸர்

பாடம்: 01

லாமியா கவிதை தொகுப்பிற்குள் நுழையும் முன்.. அகீதா என்றால் என்ன? என்ற பாடத்தை இன்ஷா அல்லாஹ் பார்ப்போம்!

அகீதா என்றால் என்ன?

அகீதாவை கற்றுக் கொள்வதின் முக்கியத்துவம் என்ன?

அகீதாவை கற்றுக்கொள்ளாததினால் ஏற்படும் விளைவுகள் என்ன?

அஷ்-ஷெய்க் ஸாலிஹ் அல்-பவ்ஸான் ஹபிதஹுல்லாஹ் அவர்களின் அழகான ஒரு புத்தகம் அகீததுத் தவ்ஹீத். இன்-ஷா அல்லாஹ் இந்த புத்தகத்திலிருந்து அகீதா பற்றிய சில முகவுரைகளை பார்ப்போம்.

அகீதாவின் சரியான அடிப்படைகளும் அவ்விடயங்களில் ஸலபுஸ்ஸாலிஹீன்களின் அணுகுமுறையும்.  

அகீதா, மன்ஹஜுஸ் ஸலஃப் ஆகிய துறைகளை ஏனைய துறைகளை விட நாங்கள் முற்படுத்துவதற்கான காரணம் என்ன?

அகீதா தவ்கீபிய்யஹ் என்றால் என்ன?

تَوْقِيْفِيَّة – அல்-அகீதது தவ்கீபிய்யஹ் – அதற்கு ஒரு வரம்பு (வரையறை) இருக்கின்றது. அதனை மீறிச் செல்லவும் முடியாது. அதிலிருந்து விலகிச் செல்லவும் முடியாது. அது வரையறுக்கப்பட்டிருக்கிறது.

தவ்பீகிய்யாஹ் – இது இஸ்லாத்தின் அடிப்படை மூலாதாரங்களான அல்-குர்ஆன், அஸ்-ஸுன்னாவின் ஆதாரங்களைக் கொண்டு வரையறுக்கப்பட்டிருக்கிறது.

எனவே இங்கு எமது புத்தி-சிந்தனைகளுக்கும் முயற்சி-ஆய்வுகளுக்கும் இடமில்லை. மேலும் அவைகளை முற்படுத்தவும் முடியாது.  அல்-குர்ஆன், அஸ்-ஸுன்னா அல்லாத எந்த ஒரு கோட்பாடும் இஸ்லாமிய அகீதாவாக ஆகாது.

இஸ்லாத்தின் அடிப்படை மூலாதாரங்கள் அல்-குர்ஆன், அஸ்-ஸுன்னாவின் மீது கட்டி எழுப்பப்பட்டிருக்கிறது.

ஏனெனில் அல்-குர்ஆன்தான் அல்லாஹ்வைப் பற்றியும் அவனது ரஸூலைப் பற்றியும் மேலும் அகீதாவின் விடயங்களைப் பற்றியும் எங்களுக்கு கற்றுத்தருகின்றது. இவைகளை நன்கு அறிந்தவன் அவனே. இதனை அவனை விடவும் மிகவும் அறிந்த எவரும் இல்லை.

எனவே முதல் முதலாக அல்லாஹ்வின் புத்தகத்தைக் கொண்டு இந்த அகீதா (வரையறுக்கப்பட்டிருக்கிறது) எழுப்பப்பட்டிருக்கிறது.

மேலும் அவனையடுத்து இதனை நன்கு அறிந்தவர் ரஸுலுல்லாஹி ﷺ அவர்களே. எனவே அவர்களை விடவும் இதனை நன்கு அறிந்வர் எவரும் இல்லை.

எனவேதான் சான்றோர்களான ஸலபுஸ் ஸாலிஹீன்களும், அவர்களைப் பின் தொடர்ந்தவர்களும் அகீதாவைத் தெரிந்து கொள்வதற்கான வழியை அல்-குர்ஆனுடனும், அஸ்-ஸுன்னாவுடனும் மட்டுப்படுத்திக் கொண்டனர். ஆகவே இதுதான் மன்ஹஜுஸ் ஸலஃப்.

எனவே அல்லாஹ்வின் விவகாரத்தில் அல்-குர்ஆனும் அஸ்-ஸுன்னாவும் எதனை உறுதி செய்கின்றதோ அதன் மீது அவர்கள் விசுவாசம் கொண்டனர். அதனைத் தங்களின் கொள்கையாக உறுதி கொண்டனர். பின்னர் அதன் படி செயலாற்றினர். மேலும் அல்குர்ஆனும், ஸுன்னாவும் உறுதி படுத்தாத அனைத்தையும் அவர்கள் நிராகரித்தனர்.

ஆகவேதான் அகீதா விடயத்தில் இவர்கள் மத்தியில் இரண்டாவது கருத்துக்கு இடமில்லை. அனைவரும் அகீதா பற்றிய அவர்களின் கொள்கையில் ஒருமித்திருந்தார்கள். அதனால் அவர்களின் ஜமாஅத்தும் ஒன்றாக இருந்தது. ஏனெனில் யாரெல்லாம் அல்லாஹ்வின் புத்தகமான அல்-குர்ஆனையும் அவனின் தூதரின் வழி முறையை (ஸுன்னாவை)யும் போதுமாக்கிக் கொண்டார்களோ அவர்களை அல்லாஹுத்தஆலா பொறுப்பெடுத்திருக்கின்றான். அதாவது அவர்களின் வாக்கு ஒருமித்த வாக்காகவும், அவர்களின் கொள்கை சரியானதாகவும், அவர்களின் வழி ஒரே வழியாகவும் இருக்கும் என்பதற்கு அல்லாஹ் உத்தரவாதம் அளித்துள்ளான். இதனை மேலான அல்லாஹ்வின் வாக்குகள் உறுதி செய்கின்றன.

وَاعْتَصِمُوْا بِحَبْلِ اللّٰهِ جَمِيْعًا وَّلَا تَفَرَّقُوْا

மேலும், நீங்கள் யாவரும் (ஒன்று சேர்ந்து) அல்லாஹ்வுடைய (வேதமாகிய) கயிற்றைப் பலமாகப் பற்றிப் பிடித்துக்கொள்ளுங்கள், நீங்கள் பிரிந்துவிட வேண்டாம். (ஸூரத்து ஆல இம்ரான்: 103)

அல்லாஹ்வின் கயிறு என்பது அல்-குர்ஆனும் அஸ்-ஸுன்னாவும் ஆகும் என்று தப்ஸீருடைய உலமாக்கள் குறிப்பிடுகின்றார்கள்.

மேலும் இன்னும் ஒரு வசனத்தில் மேலான அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்;

فَاِمَّا يَاْتِيَنَّكُمْ مِّنِّىْ هُدًى ۙ فَمَنِ اتَّبَعَ هُدَاىَ فَلَا يَضِلُّ وَلَا يَشْقٰ

நிச்சயமாக என்னிடமிருந்து நேர்வழி உங்களுக்கு வரும், ஆகவே, என்னுடைய நேர்வழியை எவர் பின்பற்றுகிறாரோ, அவர் வழி தவறமாட்டார், துர்பாக்கியவானாக ஆகவுமாட்டார். (ஸூரத்து தாஹா: 123)

என்று சரியான அகீதாவை ஏற்று நடப்போரின் ஒருமித்த நிலையை அல்லாஹ் தெளிவு படுத்துகிறான்.

இவ்வாறு யாரெல்லாம் இருக்கின்றார்களோ அவர்களுக்கு ரஸூலுல்லாஹ் ஒரு அழகான பெயரைச் சூட்டியுள்ளார்கள். மேலும் அவர்களை அதிகமாக புகழ்ந்துள்ளார்கள்.

அதுதான் அல்-பிர்கதுன் நாஜியஹ் – அல்லாஹ்வின் பாதுகாப்பைப் பெற்ற கூட்டம் என்று ரஸூலுல்லாஹி ﷺ அவர்கள் கூறினார்கள்.

பதுகாப்புப் பெற்ற கூட்டம் எவ்வாறு இருப்பார்கள் என்பதை நபி ﷺ அவர்கள் பின்வருமாறு போற்றி பேசுகின்றார்கள்:

நானும் எனது தோழர்களும் இன்று எதிலே (எந்தக் கொள்கையிலே ஒருமித்து) இருக்கின்றோமோ அதிலே யாரெல்லாம் இருக்கின்றார்களோ அவர்கள்தான்.

அகீதாவிலிருந்து வழிசறுகக்கூடிய காரணங்களும் அதிலிருந்து பாதுகாப்புப் பெறும் வழி முறைகளும்.

யாரெல்லாம் சரியான அகீதாவைவிட்டும் வழி சறுகிச் செல்கின்றார்களோ; அது அவர்களை பேரழிவுக்கு இட்டுச் செல்லும். அவர்களை அது வீணாக்கிவிடும்.

  1. சரியான அகீதாவை அறியாமல் இருத்தல், மேலும் அதற்கு மாறான பிழையான அகீதாவை அறியாமல் இருத்தல்.

சரியான அகீதாவைத் தேடிக் கற்றுக் கொள்ளாமல் மேலும் அதனைக் கற்றுக் கொடுக்காமல் அல்லது அகீதா துறைக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருப்பதும்; அதேபோல் வழிகெட்ட அகீதாவைப் பற்றிஅறியாமல் இருப்பதும் வழிகேட்டுக்கு இட்டுச் செல்லும்.

அதனால் அடுத்து வரும் சமூகம் சரியான அகீதா எது என்பதை அறியாத நிலைக்குள் தள்ளப்படும். அதேபோல் இந்த அகீதாவுக்கு முரணாக எந்த அகீதா இருக்கிறது என்பதை அறியாத ஒரு சமூகம் தோற்றம் பெறும். எனவே இவ்வாறான சூழலில் மக்கள் உண்மையான அகீதாவை தவறாகவும், தவறான அகீதாவை உண்மையாகவும் கருதுகின்ற ஒரு சூழல் ஏற்படும்.

அதற்கு ஆதாரமாக ஷெய்க் அவர்கள் உமர் இப்னுல் கத்தாப் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறும் கூற்றை கூறுகின்றார்கள்:

قَالَ أَمِيْرُ الْمُؤْمِنِيْن عُمَر بْنُ الخَطَّاب رَضِيَ اللَّهُ عَنْهُ : (إِنَّمَا تُنْقَضُ عُرَى الْإِسْلاَم عُرْوَةً عُرْوَة إِذَا نَشَأَ فِيْ الْإِسْلاَمِ مَنْ لَا يَعْرِفُ الْجَاهِلِيَّة)

அமீருல் முஃமினீன் உமர் இப்னுல் கத்தாப் ரழியல்லாகு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள் :

(ஜாஹிலிய்யா) அறியாமையை அறிந்து கொள்ளாது இஸ்லாத்தில் எவர்கள் வளர்ந்து வருகின்றார்களோ, நிச்சயமாக அதன் மூலம் இஸ்லாத்தினுடைய பலம் வாய்ந்த கயிறுகள் தொடர்ச்சியாக முறிக்கப்பட்டும்.

இந்த அதரை (கூற்றை) ஷெய்குல் இஸ்லாம் இப்னு தைமிய்யாஹ் ரஹிமஹுல்லாஹ் அவர்களுடைய பல நூல்களில் குறிப்பிட்டுள்ளார்.

மின்ஹாஜ் அஸ்-ஸுன்னா அந் நபவிய்யா: 2/398, 4/590, மஜ்மூஉ அல் பதாவா: 10/301, 15/54.

இது ஸஹீஹான ஆதாரப்பூர்வமான ஒரு அதராகும்.

அரபுக்கவிதைகளில் மிகவும் பிரபல்யமான ஒரு கூற்று;

قَوْلُ الشَّاعِر : عَرَفْتُ الشَّرَّ لاَ لِلشَّرِّ لٰكِنْ لِتَوَقِّيْهِ وَمَنْ لَا يَعْرِفُ الشَّرَّ مِنَ الْخَيْرِ يَقَعُ فِيْهِ.

நான் தீமைகளைப் பற்றி அறிந்து கொண்டேன். தீமைகளை செய்யும் நோக்கத்திற்காக அல்ல. தீமையிலிருந்து தூரமாக இருப்பதற்கே! எவரெல்லாம் நன்மைகளையும் தீமைகளையும் அறியாமல் இருக்கின்றார்களோ! அவர்கள் தீமைகளில் விழுந்துவிடுவார்கள்.

மேலும் ஹுதைபா இப்னுல் யமான் ரழியல்லாஹு அன்ஹு  அவர்கள் அறிவித்தார்கள்:

மக்கள் இறைத்தூதர் ﷺ அவர்களிடம் நன்மையைப் பற்றிக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். நான் நபி அவர்களிடம் தீமையைப் பற்றிக் கேட்டேன். அது என்னைத் தீண்டிவிடுமோ என்று அஞ்சிய காரணத்தால் தான் (அதைப் பற்றிக் கேட்டேன்.).. (புகாரி)

பெற்றோரும் மூதாதையினரும் செய்து வந்த காரியம் பிழையாக இருந்த போதிலும் அதனைப் பிடிவாதமாகக் கடைப் பிடித்தல்.

பெற்றோரும் மூதாதையினரும் செய்து வந்த காரியம் பிழையாக இருந்த போதிலும் அதனைப் பிடிவாதமாகக் கடைப் பிடித்தல் என்பது அது எங்களை பிழையான அகீதாவில் மூழ்கடித்துவிடும்.

அதற்கான ஆதாரம்: மேலான அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்:

وَاِذَا قِيْلَ لَهُمُ اتَّبِعُوْا مَآ اَنْزَلَ اللّٰهُ قَالُوْا بَلْ نَـتَّبِعُ مَآ اَلْفَيْنَا عَلَيْهِ اٰبَآءَنَا ؕ اَوَلَوْ كَانَ اٰبَآؤُهُمْ لَا يَعْقِلُوْنَ شَيْئًا وَّلَا يَهْتَدُوْنَ

மேலும், அல்லாஹ் இறக்கிவைத்த (இவ்வேதத்)தைப் பின்பற்றுங்கள் என அவர்களுக்குக் கூறப்பட்டால் (அவர்கள்) “அவ்வாறன்று. எவற்றின் மீது எங்களுடைய மூதாதைகள் (இருந்து, அவர்கள் எவற்றைச் செய்துகொண்டு) இருக்க நாங்கள் கண்டோமோ அவற்றையே நாங்கள் பின்பற்றுவோம்” எனக் கூறுகின்றனர். அவர்களுடைய மூதாதைகள் ஒன்றையுமே அறியாதவர்களாகவும் நேர்வழி பெறாதவர்களாகவும் இருந்தாலுமா? (அவர்களைப் பின்பற்றுவார்கள்!) (ஸூரத்துல் பகரா: 170)

பெற்றோரும் மூதாதையினரும் செய்து வந்த காரியம் பிழையாக இருந்த போதிலும் அதனைப் பிடிவாதமாகக் கடை பிடிப்பவர்களின் ஒதுங்கும் தளம் எவ்வாறு இருக்கும் என்று இன்னும் ஒரு ஆயத்தில் மேலான அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்;

وَ اِذَا قِيْلَ لَهُمُ اتَّبِعُوْا مَآ اَنْزَلَ اللّٰهُ قَالُوْا بَلْ نَـتَّـبِـعُ مَا وَجَدْنَا عَلَيْهِ اٰبَآءَنَا ؕ اَوَلَوْ كَانَ الشَّيْطٰنُ يَدْعُوْهُمْ اِلٰى عَذَابِ السَّعِيْرِ

“அல்லாஹ் இறக்கி வைத்த (வேதத்)தை நீங்கள் பின்பற்றுங்கள்” என அவர்களுக்குச் சொல்லப்பட்டால், அவர்கள் “(அப்படியல்ல)! நாங்கள் எங்களுடைய மூதாதையவர்களை எதில் கண்டோமோ, அதைத் தான் நாங்கள் பின்பற்றுவோம்” என்று கூறுகிறார்கள். அவர்களை ஷைத்தான் கொழுந்து விட்டெரியும் (நரக) நெருப்பின் வேதனையின் பக்கம் அழைத்தாலுமா (பின்பற்றுவர்?) (ஸூரத்து லுக்மான்:21)

மாற்றமாக எவ்வாறு நாம் இருக்க வேண்டும் என்பதை மேலான அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்:

وَمَنْ يُّسْلِمْ وَجْهَهٗۤ اِلَى اللّٰهِ وَهُوَ مُحْسِنٌ فَقَدِ اسْتَمْسَكَ بِالْعُرْوَةِ الْوُثْقٰى‌ؕ وَاِلَى اللّٰهِ عَاقِبَةُ الْاُمُوْرِ

எவன் தன் முகத்தை முற்றிலும் அல்லாஹ்வின் பக்கமே திருப்பி, நன்மை செய்து கொண்டிருக்கிறானோ, அவன் நிச்சயமாக உறுதியான கயிற்றை பலமாக பற்றிப் பிடித்துக் கொண்டான். இன்னும் காரியங்களின் முடிவெல்லாம் அல்லாஹ்விடமேயுள்ளது. (ஸூரத்து லுக்மான்:22)

இன்-ஷா அல்லாஹ் தொடரும்..

எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.

அண்மைய இடுகைகள் Recent Posts

அண்மைய ஜுமுஆக்கள்

பிரிவுகள் (Catagories)