بسم اللــــه الرحمـــــــــن الرحيم
அஷ்-ஷெய்க் அபூ அப்திர் ரஹ்மான் நவ்வாஸ் அல் ஹிந்தி ஹஃபிதஹுல்லாஹ்
கண்ணியமிக்க ஷேக் இப்னு உஸைமீன் ரஹிமஹுல்லாஹ் அவர்களிடம் பின்வரும் கேள்வி கேட்கப்பட்டது:
1- இறை நிராகரிப்பாளர்களின் (கிறிஸ்மஸ்) பண்டிகைகளுகாக வாழ்த்துப் பரிமாறுவது குறித்த மார்க்கச் சட்டம் என்ன?
2- அவர்கள் நம்மை வாழ்த்தினால் நாம் எப்படி பதிலளிக்க வேண்டும்?
3- இந்தப் பண்டிகைகளுகாக அவர்கள் நடத்தும் கொண்டாட்டங்களில் கலந்துகொள்வது அனுமதிக்கப்படுமா?
4- ஒரு நபர் இவற்றில் ஏதேனும் ஒரு செயலை விருப்பமின்றி, மரியாதை நிமித்தம், வெட்கத்தின் காரணமாக, அல்லது அழுத்தம் காரணமாகச் செய்தால் அவர் பாவத்திற்கு ஆளாவாரா?
ஷெய்க் அவர்களின் பதில்:
❖ நிராகரிப்பாளர்களின் கிறிஸ்துமஸ் அல்லது அவர்களது வேறு எந்த மதப் பண்டிகைகளுக்காகவும் வாழ்த்துவது அறிஞர்களின் ஏகோபித்த முடிவின்படி தடைசெய்யப்பட்டதாகும்.”
இப்னுல் கய்யிம் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தமது “அஹ்காம் அஹ்ல் அல்-திம்மா” என்ற புத்தகத்தில் இதைக் குறிப்பிட்டுள்ளார்கள். அவர் கூறுகிறார்:
❖ “அவர்களது மதச் சடங்குகளில், அவர்களுக்கு உரித்தானவற்றுக்காக அவர்களை வாழ்த்துவதைப் பொறுத்தவரை; அது உலமாக்களின் ஏகோபித்த முடிவின்படி தடைசெய்யப்பட்டதாகும். உதாரணமாக, அவர்களிடம் ‘உங்களுக்கு இந்த விடுமுறை/பண்டிகை சிறப்பாக அமைய வாழ்த்துகள்’ அல்லது ‘இந்த விடுமுறைக்கு வாழ்த்துகள்’ என்று கூறுவது போன்ற சொற்றொடர்கள். இப்படிக் கூறுபவர் இறை நிராகரிப்பைச் செய்யாவிட்டாலும், அது தடைசெய்யப்பட்டதேயாகும். இது, சிலுவைக்குச் சிரம் பணிவதற்காக அவர்களை வாழ்த்துவது போன்றதாகும்; மேலும், இது மது அருந்துவதற்காக, கொலை செய்வதற்காக, அல்லது தவறான பாலியல் செயல்களில் ஈடுபடுவதற்காக ஒருவரை வாழ்த்துவதை விட அல்லாஹ்விடம் மிகப் பெரிய பாவமாகும். தமது மார்க்கத்தின் மீது அக்கறையில்லாத பலர், இந்தச் செயல்களின் தீவிரத்தை உணராமல் இதில் விழுகிறார்கள். யார் ஒருவரின் பாவம், நூதனச் செயல் (பித்அத்), அல்லது நிராகரிப்புக்காக அவரை வாழ்த்துகிறாரோ, அவர் அல்லாஹ்வின் கோபத்திற்கும் தண்டனைக்கும் ஆளாகிறார்.”
❖ எனவே, நிராகரிப்பாளர்களை அவர்களது மதப் பண்டிகைகளில் வாழ்த்துவது தடைசெய்யப்பட்டதாகும். மேலும் இது இப்னுல் கய்யிம் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் குறிப்பிட்டதற்குச் சமமானதாகும். ஏனெனில், இது அவர்களது நிராகரிப்பின் சடங்குகளுக்கு ஒப்புதல் அளிப்பதாகும், மேலும் அவர்களுக்காக அதை விரும்புவதாகும், ஒருவர் தனக்காக அந்த நிராகரிப்பை அங்கீகரிக்காவிட்டாலும் கூட. நிராகரிப்பின் சடங்குகளுக்கு ஒப்புதல் அளிப்பதற்கோ அல்லது வாழ்த்துவதற்கோ ஒரு முஸ்லிமுக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் அல்லாஹ் நிராகரிப்பை அங்கீகரிப்பதில்லை, அல்லாஹ் கூறுவது போல:
اِنْ تَكْفُرُوْا فَاِنَّ اللّٰهَ غَنِیٌّ عَنْكُمْ وَلَا یَرْضٰی لِعِبَادِهِ الْكُفْرَ وَاِنْ تَشْكُرُوْا یَرْضَهُ لَكُمْ
(அவனை) நீங்கள் நிராகரித்துவிட்டால் நிச்சயமாக அல்லாஹ், உங்களைவிட்டும் தேவையற்றவன், இன்னும், தன் அடியார்களிடத்தில் நிராகரிப்பை அவன் பொருந்திக்கொள்வதில்லை, மேலும், நீங்கள் (அவனுக்கு) நன்றி செலுத்தினால், உங்களுக்காக அதனை அவன் திருப்தியடைவான்.. (ஸூரத்துஜ்ஜுமர்: 39:7)
மேலும் அல்லாஹ் கூறுகிறான்:
اَلْیَوْمَ اَكْمَلْتُ لَكُمْ دِیْنَكُمْ وَاَتْمَمْتُ عَلَیْكُمْ نِعْمَتِیْ وَرَضِیْتُ لَكُمُ الْاِسْلَامَ دِیْنًا
இன்றையத்தினம் உங்களுக்காக உங்களுடைய மார்க்கத்தை நான் பரிபூரணமாக்கி வைத்து விட்டேன், என்னுடைய அருட்கொடையை உங்களின் மீது முழுமையாமாக்கி விட்டேன், இன்னும் உங்களுக்காக இஸ்லாத்தை மார்க்கமாக நான் பொருந்திக் கொண்டேன்.. (ஸூரத்துல் மாயிதா: 5:3)
❖ அவர்கள் பணியிடத்தில் உடன் பணிபுரிபவர்களாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர்களை வாழ்த்துவது தடைசெய்யப்பட்டதாகும்.
❖ அவர்கள் நம்மை அவர்களது பண்டிகைகளில் வாழ்த்தினால், நாம் பதில் சொல்லக் கூடாது. ஏனெனில் இவை நமது பண்டிகைகள் அல்ல, மேலும் அவை அல்லாஹ்வினால் அங்கீகரிக்கப்பட்டவை அல்ல. இந்தப் பண்டிகைகள் அவர்களது மார்க்கத்தில் புதிதாக உருவாக்கப்பட்டவை (பித்அத்) அல்லது இஸ்லாமினால் (முஹம்மது நபி ﷺ அவர்கள் மூலம் மனித குலம் முழுவதற்கும் அனுப்பப்பட்ட மார்க்கத்தினால்) நிராகரிக்கப்பட்டவை. அல்லாஹ் கூறுவது போல:
وَمَنْ یَّبْتَغِ غَیْرَ الْاِسْلَامِ دِیْنًا فَلَنْ یُّقْبَلَ مِنْهُ وَهُوَ فِی الْاٰخِرَةِ مِنَ الْخٰسِرِیْنَ
இன்னும் இஸ்லாம் அல்லாததை மார்க்கமாக எவராவது தேடினால், அப்பொழுது அவரிடமிருந்து (அது) அங்கீகரிக்கப்படவே மாட்டாது. மேலும், மறுமையில் அவர் நஷ்டமடைந்தோரில் இருப்பார் (ஸூரத்துல்ஆல இம்ரான்: 3:85)
❖ இத்தகைய சந்தர்ப்பங்களுக்காக அவர்கள் நடத்தும் கொண்டாட்டங்களில் ஒரு முஸ்லிம் கலந்துகொள்வது தடைசெய்யப்பட்டதாகும். ஏனெனில் இது வெறும் வாழ்த்து தெரிவிப்பதை விடவும் அவர்களது சடங்குகளில் அதிக அளவில் பங்கேற்பதாகும்.
❖ அதேபோல, இந்தச் சந்தர்ப்பங்களுக்காகக் கொண்டாட்டங்கள் நடத்துவது, பரிசுகளைப் பரிமாறிக் கொள்வது, இனிப்புகள் விநியோகிப்பது, அல்லது உணவு தயாரிப்பது, அல்லது இந்தப் பண்டிகைகளைக் கடைப்பிடிப்பதற்காக வேலையை நிறுத்துவது போன்றவற்றின் மூலம் நிராகரிப்பவர்களைப் பின்பற்றுவதும் முஸ்லிம்களுக்கு தடைசெய்யப்பட்டதாகும்.
عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ»
இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்; நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: யார் ஒரு கூட்டத்திற்கு ஒப்பாக நடக்கின்றாறோ அவர் அந்த கூட்டத்தை சேர்ந்தவராவார். (அபூதாவூத்)
ஷெய்க் அல்-இஸ்லாம் இப்னு தைமிய்யா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் “இக்திழாவுஸ் ஸிராத் அல்-முஸ்தகீம் முக்காலஃபத் அஹ்ல் அல்-ஜஹீம்” என்பதில் குறிப்பிட்டார்கள்:
❖ “அவர்களது சில பண்டிகைகளில் அவர்களைப் பின்பற்றுவது, அவர்களது பொய்யான (மார்க்கத்தின்) மீது அவர்களது உள்ளங்களில் மகிழ்ச்சியைக் கொண்டு வருகிறது. மேலும் சந்தர்ப்பங்களைப் பயன்படுத்திக் கொள்ளவும், பலவீனமானவர்களை அடக்கி ஆளவும் அது அவர்களுக்குத் தைரியத்தைக் கூட அளிக்கலாம்.”
❖ யார் இந்தச் செயல்களில் ஈடுபடுகிறாரோ, அவர் மரியாதை நிமித்தமாகவோ, நட்பு காரணமாகவோ, வெட்கத்தின் காரணமாகவோ, அல்லது வேறு காரணங்களுக்காகவோ செய்திருந்தாலும், அவர் பாவம் செய்தவரே ஆவார். ஏனெனில் இது அல்லாஹ்வின் மார்க்கத்தில் சமரசம் செய்து கொள்வதாகவும், நிராகரிப்பவர்களின் மார்க்கத்தில் உள்ள பெருமையை அவர்களுக்கு வலுவூட்டுவதாகவும் அமைகிறது.
முஸ்லிம்களை அவர்களது மார்க்கத்தின் மூலம் கண்ணியப்படுத்துமாறும், அதன் மீது அவர்களுக்கு உறுதியை வழங்குமாறும், அவர்களது எதிரிகளுக்கு எதிராக அவர்களுக்கு வெற்றியைத் தருமாறும் அல்லாஹ்விடம் நாம் பிரார்த்திக்கிறோம். நிச்சயமாக, அவன் எல்லாவற்றுக்கும் பேராற்றல் உடையவனும், மிகைத்தவனும் ஆவான்.
📚 மஜ்மூ ஃபதாவா அல்-உதைமீன் (3/44)
அஷ்-ஷெய்க் நவ்வாஸ் அல்-ஹிந்தி அஸ்-ஸெய்லானி ஹபிளஹுல்லாஹ் அவர்களின் உத்தியோகபூர்வ ஆங்கில டெலிகிராம் சேனலில் (Telegram Channel) இருந்து தமிழாக்கம் செய்யப்பட்டது: https://t.me/NawwasalHindiEng/630

